பக்கம் எண் :

6வளவன் பரிசு

   கொட்டுகிறான். இன்னொரு பையில் இருந்த மாணிக்கங்களை அருகே
   யிருந்த மரகதப் பைக்குள் கவிழ்க்கிறான். பாட்டிலே ஈடுபட்ட அன்னம்
   இந்தச் சத்தத்தால் திடுக்கிட்டு, நடப்பதை உணர்கிறாள்.]

அன்னம் : யாரையா நீ? கடைக்குள் புகுந்து பொருள்களை உருட்டுகிறாயே!
   ஏ அம்பலம், என்ன வேடிக்கை பார்க்கிறாய்! இந்த ஆளை வெளியேற்று!

   [அம்பலம் தாமரைக்கண்ணனிடம் வருகிறான். அதற்குள் அவன் 
    செயல்களை நிறுத்தி விடுகிறான்.]

அம்பலம் : என்னங்க; உங்களுக்கு நவமணிகளைத் தனித்தனியா பார்த்தால்
   பிடிக்காதோ! எல்லாவற்றையும் கலைத்து விட்டீர்களே!

அன்னம் : என்னய்யா இது! ஒரு நொடியில் இந்தக்கடையைப் புயல் புகுந்த
   பூந்தோட்டமாக்கிவிட்டாயே. உனக்கென்ன பித்துப் பிடித்துவிட்டதா?

தாமரைக்கண்ணன் : பெண்ணே, இங்கே ஒழுங்காக, வரிசை வரிசையாக,
   பெட்டியிலும் பையிலும் வைத்திருந்த நவமணிகளை நான் கலைத்துவிட்டது
   தவறு என்கிறாயா? அதனால் நீ சினங்கொள்கிறாயா?

அன்னம் : ஒழுங்காய் இருந்த பொருள்களைக் கலைத்து விட்டதைத் தவறு
   என்னாமல் சரி என்று சாதிக்கச் சொல்கிறாயா? இந்தப் பொருள்கள்
   எமக்குச் சொந்தமானவை. அவற்றை அலங்கோலமாக்கினால்
   சினங்கொள்ளாமல் சிரிக்கவா முடியும்?