பக்கம் எண் :

காட்சி - 967

தா. கண்ணன் : எனக்கும் பிரிய மனமில்லை. இளவரசே, நீங்களும்
     அரசரும் எங்கள் வீட்டிற்கு வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறேன்.

இராசராசர் : தாமரைக்கண்ணா, நாங்கள் தலைநகரை விட்டுப் புறப்பட்டு
     ஒரு திங்களுக்கு மேலாகிவிட்டது. இன்றே உறையூரை விட்டுத்
     தலைநகர்க்குப் போகப் போகிறோம். அதனால் உன் விருப்பத்தை
     நிறைவேற்ற முடியவில்லை. இந்தக் கண்ணன் மண்டபத்தைக் கலை
     மண்டபமாக்க என் மகன் விரைவில் இங்கு வருவான். அப்போது
     உழவனாக அல்லாமல், ஊராளும், வேந்தனின் புதல்வனாகவே
     உன்வீட்டுக்கு வருவான். அடுத்த முறை நான் உறையூருக்கு        
     வரும்போது உன் இல்லத்துக்கு வருவேன். இது உறுதி. இப்போது
     நாங்கள் புறப்படுகிறோம்.

தா. கண்ணன் : நன்றி அரசே! நன்றி (இளவரசனிடம்) நல்லது நண்பா,
     மீண்டும் சந்திப்போம்.

     [தாமரைக்கண்ணன் இளவரசனை மார்புறத் தழுவி விடை தருகிறான்.
     அரசரும் இளவரசனும் மண்டபத்திலிருந்து இறங்கி, அரண்மனைப்
     பகுதி நோக்கிச் செல்வதை, அங்கு நின்றபடியே நோக்குகிறான்.]
  
                                                                      -திரை-