பக்கம் எண் :

காட்சி - 1173

குருகுலத்தரையன் : அரசே, முடிசூட்டு விழா நடந்த சில நாள்களில்
  சோழன் இராசராசனும், இளவரசன் இராசேந்திரனும் தலைநகரிலிருந்து
  தலைமறைவாகி விட்டார்களாம். இச் செய்தியை அறிந்ததும், அவர்கள்
  எங்கே சென்றார்கள் என்பதைக் கண்டுபிடிக்குமாறு உத்தரவிட்டேன்.

சு. பாண்டியன் : போசள நாட்டுக்குப் போயிருப்பார்களோ?
 
குருகுலத்தரையன் : அந்த ஐயம் என்னுள்ளும் எழுந்தது. போசள
  நாட்டுக்கும் ஒற்றர்களை அனுப்பினேன். அங்கே சோழ அரசனோ,
  இளவரசனோ வரவில்லை என்று உறுதியாகச் சொல்கிறார்கள் ஒற்றர்கள்.
  முடிகொண்ட சோழபுரத்து அதிகாரிகளை அணுகுவதும், இரகசியங்களை
  அறிவதும் எளிது. அந்த அதிகாரிகளுக்குச் சோழனது திடீர் மறைவை
  விளக்க முடியவில்லை. ஒரு வேளை நமது நாட்டின் படை பலத்தை
  நேரில் கண்டறியப் புறப்பட்டுவிட்டானோ என்று நினைத்து, உள்நாட்டில்
  ஒற்றர்களை இரவும் பகலும் விழிப்போடு கண்காணிக்கச் செய்தேன்.
  பயனில்லை. சோழன் இங்கு வந்ததாகவும் தெரியவில்லை.

சு. பாண்டியன் : முடிசூட்டு விழா நடந்து இரு திங்கள் முடியப் போகிறதே,
  இன்னுமா சோழன் தலைநகருக்குத் திரும்பிவரவில்லை.

குருகுலத்தரையன் : சில நாள்களுக்கு முன்னே திரும்பிவந்ததாக இப்போது
  செய்தி வந்துள்ளது. சோழன் திரும்பியதுமே படையைப் பெருக்குவதைப்
  பற்றிப் பேசியதாகத் தெரிகிறது. அவன் சோழ நாட்டையே சுற்றிப்
  பாத்ததாகப் பேசிக் கொள்கிறார்களாம்.