தனபதி :
ஆம்! அவன் என்னைப் பாடினால் உன்னை மணக்கலாம்!
பொன்னை விரும்பாத புலவன்
என் பெண்ணை விரும்புகிறான்! அவன்
உன்னை மணக்க வேண்டுமானால், என்னைப் பற்றிப் பாடவேண்டும்!
இல்லையேல் உன்னை மறக்கவேண்டும்! இதை அவனிடம் நீயே சொல்லி,
ஒரு பாடல் பெற்று வா!
அன்னம் :
அப்பா, அவர் புலவர். பாடும் புகழுடையாரையன்றி வேறு
யாரையும் எதற்காகவும் பாடமாட்டார்!
பொன்னுக்காகவும் பாடமாட்டார்!
உங்கள் பெண்ணுக்காகவும் பாடமாட்டார்! உங்கள் நிபந்தனையை
வற்புறுத்தினால் என் காதலைத் துறப்பார்! என்னை மறப்பார்!
தனபதி :
அதெல்லாம் எனக்குத் தெரியாது! தாமரைக்கண்ணன் என்னைப்
பாடினால் உன்னைப் பரிசாகத்
தருவேன்! மறுத்தால் நீ அவனை
மறந்துவிடவேண்டும்! அவனைக் காண்பதும், காதல் பொங்கப்
பேசுவதும்
நிற்கவேண்டும்! இதை நான் மாற்றிக் கொள்ளப் போவதில்லை.
[உறுதயான குரலில் உரைத்த தனபதி எழுந்து செல்கிறார்.]
அன்னம் :
தமிழ்த்தாயே, ஈதென்ன சோதனை: என்காதல் நிறைவேறாக்
காதல்தானா?
[கண் கலங்குகிறாள்.]
-திரை- |