பக்கம் எண் :

காட்சி - 1383

  விட்டேன்! மதுரையிலிருக்கும் நம் ஒற்றர்களிடமிருந்து செய்தி வரும்
  முன்பே சோழ நாட்டைப் பாண்டியர் படை சூழ்ந்து கொண்ட செய்தி
  வந்துவிட்டது. தேவி, படை வருவதும், பகைவன் வெல்வதும் ஒரு நாட்டு
  வரலாற்றில் வந்து வந்து போகும் வழக்கமான செய்திகள். ஆனால் இந்தச்
  சுந்தர பாண்டியன் வெற்றிக்காகப் போரிட வரவில்லை! வெறியைத்
  தணித்துக்கொள்ள வந்திருக்கிறான்! பழி தீர்க்க முனையும் பாதகனுக்கும்,
  பண்புள்ள பகைவனுக்கும் வேற்றுமை உண்டு தேவி. பகைவன் வெல்வான்;
  பாதகன் கொல்வான்! சுந்தர பாண்டியனின் ஆசை சோழநாட்டை
  வெல்வதன்று; அழிப்பது! அந்த வெறியனின் படையிடம் சிக்கும் ஊர்கள்
  சின்னா பின்னமாகும்; சித்ரவதையுறும்.

புவன : சுந்தரபாண்டியன் இவ்வளவு வெறியனா?

இராசராசர் : ஆம் தேவி. அவன் தமையன் குலசேகர பாண்டியன்
  ஆண்டபோது இவன் இளவரசனாக இருந்தான். குலசேகரன் என் தந்தை
  குலோத்துங்க சக்கரவர்த்தி செய்த நன்றி மறந்து திறை செலுத்த
  மறுத்தான். அதனால் கபாலமூர்த்தி போலக் கடுங்கோபம் கொண்டு
  பெரும் படையோடு மதுரைமீது பாய்ந்தார். அவர் வாழ்க்கையில்,
  மூன்றாவது முறையாகப் பாண்டியரோடு செய்த போர் அது. அதனால்
  மதுரையை வென்றதோடு அமைதியுறாமல் அதன் ஒரு பகுதியை எரித்துப்
  பொசுக்கினார்! தம்மிடம் உதவி பெற்று, தம் துணையால் அரசபதவி
  பெற்று, பின் தம்மையே எதிர்க்கிறானே பாண்டியன் என்பதால் எழுந்த
  கோபத்தால் விளைந்தது. அந்த அழிவு. குலசேகரன் செய்ந்நன்றி கொன்ற
  சிறுமைக்காக அவன் தலைநகரைத் தணல் தழுவச்செய்தார். நானும் உடன்
  இருந்தேன். அந்தக் கொடுமையை மிக