இராசராசர் :
இப்போது போர் நிலை என்ன? எல்லைக் காவல் படை
பாண்டியனை எதிர்த்துப்
போரிடுகிறதா? பிற ஊர்களிலிருக்கும் படை
போர்முனை நோக்கிச் செல்கிறதா? தலைநகரத்துப்
படை அணி வகுத்து
நிற்கிறதா?
பிருமா :
அரசே, பாண்டியன் படை நமது படையினும் பல மடங்கு
பெரியது. அதனை எதிர்த்து நிற்க
முடியாமல் எல்லைக்காவல் படை
முற்றிலும் அழிந்து விட்டது. தலைநகரத்துப் படையை அணிவகுத்து
நிற்குச் செய்திருக்கிறார் இளவரசர்! அதற்கு நீங்களோ, இளவரசரோ
தலைமை வகித்துச் செல்ல
வேண்டும் என்று விரும்பினேன். ஆனால்....
இராசராசர் :
ஆனால் என்ன? தயங்காமல் கூறுங்கள்.
பிருமா :
சுந்தர பாண்டியன் படையின்முன் நமது சோழப்படை, வேழத்தின்
பசிக்குச்
சோளப்பொரி போல வீழ்ந்துவிடும். அரசே, நமக்கடங்கிய
குறுநில மன்னான
கோப்பெருஞ்சிங்கன் படையுடன் புறப்படப்
போகிறானாம். பாண்டியனுக்குத் துணை செய்ய!
ஒருபுறம்
வெளிப்பகைவன்! மறுபுறம் துரோகி! இடையிலே சிக்கி நமது படை
முழுவதும் அழியும்!
அதனால்...
இராசராசர் :
அமைச்சரே, ஏனிந்தத் தயக்கம்? சொல்லுங்கள்!
பிருமா :
அதனால் தாங்கள் தற்போது போசள நாட்டுக்குச் செல்வது
சிறந்தது என்று எண்ணுகிறேன்! |