லிருந்தே கேட்பேன். அதனால் சொற்கள் சரியாகக் காதில் விழவில்லை.
மலையழைக்குவன் என்று நினைத்துப் பாடினேன். ஐயா, கோபக்காரரே,
இந்தப் பாட்டு உன் வீட்டுச் சொத்து என்கிறீரே...இதை விலை கொடுத்து
வாங்கினீரா...?
தா. கண்ணன் :
பெண்ணே!
அன்னம் :
என் பெயர் அன்னம்.
தா. கண்ணன் :
அன்னம். இதைக் கரிகாலன் காலத்தில் பாடிய
உருத்திரங்கண்ணனார் என் மூதாதை. அவர் வழியில் வந்த நான்
பாட்டுக்குச் சொந்தக்காரன். விலை கொடுத்தா வாங்கினீர் என்று
கேட்டாய்! பெண்ணே, நன்று கேட்டாய்!
அன்னம் :
என் பெயர் அன்னம்...அ...ன்...னம்...
தா. கண்ணன் :
பெண் அன்னமே, புலவர்கள், பாட்டை வாங்குவதுமில்லை,
விற்பதுமில்லை. பாட்டைக் கேட்பவர் பரிசு கொடுப்பார். அதைப்
பெறுவார்கள். பரிசுபெற்ற பிறகும் பாடல், அதைப் புனைந்த புலவருக்குத்
தான் சொந்தம்.
அன்னம் :
அப்படியானால் அதை யாரும் பாடக் கூடாதா?
தா. கண்ணன் :
புலவர் பாடல் பொதுச் சொத்துதான்; ஊர்க் கிணறு போல!
யார் வேண்டுமானாலும் அதன் நீரைப் பருகித் தாகத்தைத்
தணித்துக்கொள்ளலாம். ஆனால் அக் கிணற்றை மாசுபடுத்த யாருக்கும்
உரிமையில்லை. ஊருக்காகக் கிணற்றை வெட்டிய உபகாரி, மற்றவர் அதை
மாசுபடுத்துவதைக் கண்டு சீறுவதும், சிறு செயல் செய்தவரைக்
கோறுவதும் முறையே.... |