பக்கம் எண் :

96வளவன் பரிசு

  களைத் தகர்ப்பதையோ தடுக்காதவர்க்குத் துன்பம் இல்லை.
  தடுப்பவர்களைக் கொல்ல அவர்கள் தயங்குவதில்லை. நீங்கள் அன்றொரு
  நாள் பார்த்தீர்களே, நான் ஏறி வந்த கறங்குமணி யொலிக்கும் பொன்மணி
  நெடுந்தேர்! அதையும் அவர்கள் கவர்ந்துகொண்டார்கள்! இந்த
  அரண்மனைப் பகுதியின் செல்வம் முழுவதையும் எடுத்துக்
  கொண்டார்கள்! அதைத் தடுக்கும் தைரியம் யாருக்குமில்லை. இளவரசே!
  உற்றுப் பாருங்கள். தீப்பந்தம் ஏந்தியவனின் முன்னே வருவது
  பெண்ணுருவமாய்த் தெரியவில்லையா?

இராசேந்திரன் : ஆமாம். பெண்ணேதான்! நள்ளிரவில் இந்த நங்கைக்கு
   இங்கென்ன வேலை?

   [தீப்பந்தம் ஏந்திய ஆடவனும், அவனுருகே வரும் பெண்ணும்
   மண்டபத்தை நெருங்கி விடுகின்றனர்]

தா. கண்ணன் : அன்னம்!

அன்னம் : கண்ணா!

  [அன்னம் ஓடிவந்து தாமரைக்கண்ணனைத் தழுவிக் கொள்கிறாள்.
  தாமரைக்கண்ணன் மெல்ல அவளை விலக்கிவிடுகிறான்.]

தா. கண்ணன் : அன்னம் முன்னொரு நாள் இந்த மண்டபத்தருகே
  கண்டதாகக் கூறினேனே, அந்த இளவரசர் இராசேந்திரர்தான் இங்கே
  நிற்கும் உழவர்.

அன்னம் : வணக்கம் இளவரசே!

இராசேந்திரன் : வணக்கம்! தாமரைக்கண்ணா. யாரிந்த அழகு
   தேவதை?