3.4 மொழி நடையின் தன்மை இதழியலாளர்கள், தேவைக்கேற்பத் தாம் கையாண்ட மொழி நடையின் தன்மைகளை அமைத்தனர். குறிப்பாக எல்லாருக்கும் புரியும் வகையில் எளிமை, பிறரை ஈர்க்கும் வகையில் கவர்ச்சி, தனித்தன்மைக்காகக் கலப்பு மொழி, பிறரிடம் இருந்து வேறுபடுத்துவதற்கான ஒரு தனித்தன்மை ஆகியவற்றைப் பயன்படுத்தினர். நாளிதழ்களுள் தினத்தந்தி எளிய தமிழிலும், தினமணி அதைவிடச் சற்று எளிமை குறைந்த நிலையிலும், தினமலர் உள்ளடக்கச் செறிவினால் அதைவிடச் சற்று எளிமை குறைந்த நிலையிலும், தினகரன் தனக்கே உரிய எளிய பாணியிலும் செய்திகளை எழுதுகின்றன. வார இதழ்களுள் குமுதம் நகர வாசகர்களுக்கு (urban readers) ஏற்ற வகையில் குறிப்பிட்ட நடையைப் பின்பற்றுகிறது. இதனை அடியொற்றி ஆனந்தவிகடனும் சிற்சில மாற்றங்களை உருவாக்கிக் கொண்டுள்ளது. குங்குமம், ராணி, கல்கண்டு, முத்தாரம், பாக்யா போன்றவை சிற்சில செய்திப் பகுதிகளில் மட்டுமாவது இவற்றை ஒத்து விளங்க முயல்கின்றன. புலனாய்வு இதழ்கள் எனப்படும் அரசியல் சமுதாய வார இதழ்கள் குறிப்பாக அரசியல் செய்தியைத் தம் கவனமான மொழிப் பயன்பாட்டின் வாயிலாகப் பொழுது போக்குக்கு ஏற்றதாக ஆக்கிவிடுகின்றன. செய்தித் தெரிவு (content selection) மொழிப் பயன்பாடு (language use) ஆகிய இரு நிலைகளில் இதழியல் உத்திகளை இவ்விதழ்கள் கையாண்டு ஒன்றிலிருந்து மற்றொன்று தனித்து நின்று தமக்கெனத் தத்தம் வாசகர்களைத் தக்க வைத்துக் கொள்கின்றன. இவ்வகையில் குறிப்பிடத் தக்க மொழிப் பயன்பாட்டு உத்திகள் கட்டுரை இயல்பு மொழியும் கவர்ச்சி மொழியும் ஆகும். செய்தி தரும் முறையில் இவை செந்தமிழையோ பல்வகை மொழிக் கலப்பினையோ பயன்படுத்துவது இல்லை. இயல்பான மொழியில் எளிய நடையில் ஒரு கட்டுரை அமையும் முறை போலச் செய்திதரும் முறை இவ்விதழ்களில் உண்டு. சொல் ஜாலங்களும் பிறமொழிச் சொற்களும் மிகவும் குறைந்து ஆங்காங்கே ஓரிரு இடங்களில் மட்டுமே காணப்படும். ஆனால் பிறமொழிக் கலப்பு அதிகம் இன்றி எளிய, முறையான தொடரமைப்புகளுடன் இந்த நடை செய்தியை முழுமையாகத் தரும். சான்றுகள்: • திருச்சி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் வேலை வாய்ப்புப் பற்றிய கருத்தரங்கம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். (தினத்தந்தி, 29.02.2004) • பாகிஸ்தானுடன் நல்லுறவை ஏற்படுத்த மத்திய அரசு முயன்று வருகிறது. (தினமலர், 19.01.2004) • நடிகர் ரஜினி ரிஷிகேஷத்தில் 25 நாள் ஓய்வுக்குப் பிறகு நேற்றுக் (சனிக்கிழமை) காலை சென்னை திரும்பினார். அவரைப் பத்திரிகையாளர் சோ நேற்று மாலை சந்தித்துப் பேசினார். ரஜினியின் போயஸ் தோட்ட வீட்டில் இந்தச் சந்திப்பு நடந்தது. (தினகரன், 26.11.1995) குமுதம், ஆனந்தவிகடன், கல்கி போன்ற இதழ்களின் தலையங்கங்கள், முத்தாரம், கல்கண்டு போன்றவற்றின் சிறு குறிப்பு விளக்கப் பகுதிகள், மங்கையர் மலர், ராஜம் போன்ற மகளிர் இதழ்களில் சில கட்டுரைப் பகுதிகள், ஜூனியர் விகடனில் ஒருசில அரசியல் செய்திப் பகுதிகள் மற்றும் தனி ஒருவர் எழுதும் சில தொடர் கட்டுரைகள், இந்தியா டுடேயின் செய்திக் கட்டுரைகள் போன்றன இவ்வகை எளிய நடையைக் கையாண்டு எழுதப்படுகின்றன. தமிழில் மொழிக் கலப்பின்மையை எதிர்பார்ப்போருக்கு இத்தகைய மொழிப் பயன்பாட்டு முறை விரும்பத் தக்கதாக அமையும். சான்றுகள்: • டாக்டர் ஜான்சன் பிரபல ஆங்கில இலக்கிய மேதை. இவர் தெருவில் செல்லும்போது கம்பங்கள் ஏதும் தென்பட்டால் ஒவ்வொன்றையும் தொட்டு விட்டுத்தான் போவார். ஏதாவது ஒன்றைத் தொடாமல் விட்டு விட்டால் பழையபடி பின்னால் போய் முதலிலிருந்து ஒவ்வொன்றாகத் தொட்டு விட்டுத்தான் செல்வாராம். மேதையின் மனத்திற்குள் எப்படி ஒரு குழந்தைத் தனம். (கல்கண்டு, 07.12.1995, பக். 29) • ஜூலை மாதம் இருபத்தாறாம் தேதி வீரசிகாமணியில் ஆரம்பித்த ஜாதிக் கலவரம் இன்னும் தென் மாவட்டங்களைக் கலங்கடித்துக் கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்தமாக நெல்லை மாவட்டம் முழுவதும் கலவரத் தீயின் கோர ஜுவாலைகள் படர்ந்து கொண்டிருக்க, இப்போது தென்காசிப் பகுதி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது. (ஜூனியர்விகடன், 26.11.1995, பக்.8) இந்தக் கட்டுரை இயல்பு மொழி அல்லது எளிய மொழியில், (1) விவரங்களைத் தெரிவிக்கும் விளக்க நடை முதலியன அமைகின்றன. செய்திகளை ஒருவிதக் கவர்ச்சி மொழியில் (attractive language) தருவது இன்றைய இதழ்களில் காணப்படுகின்ற ஒரு மொழிப் பயன்பாட்டு முறை ஆகும். ஒருவித அலங்கார மொழி அமைப்பைக் கையாண்டு ஒரு சொல் ஜாலத்தைத் தோற்றுவித்துக் காட்டி, வாசகனைக் கவர்வதைத் தமிழ் இதழியலில் பரவலாகக் காண முடிகிறது. இவ்வகை அமைப்பில் வாசகனை மகிழ்வித்துச் செய்திகளைத் தெரிவித்தல் இதழாளர்களின் நோக்கமாகிறது. இத்தகைய கவர்ச்சி மொழிக்கு உதவும் கூறுகள் பின்வருமாறு.
• பேச்சுமொழிப் பயன்பாடு பொதுவாகத் தமிழ் இதழ்கள் பேச்சு மொழியினைப் பயன்படுத்தி எழுதுதல் என்ற முறையை விரும்பிக் கையாளுகின்றன. பேச்சுமொழி இவ்விதழ்களின் நடையில் இரண்டறக் கலந்து அமைகின்றது. மக்களின் பேச்சு வழக்கில் உள்ளது போலவே சொற்களும் சொற்றொடர்களும் பயன்படுத்தப் படுகின்றன. • பெயர் + ஒட்டுக்கள் = பேச்சில் உள்ளது போலவே எழுதுதல் திடீர் + என்று = திடீர்னு • தேவைப்படும் அளவிற்குச் சொற்களைச் சுருக்கிக் கொள்ளுதல். பண்ணுகின்ற = பன்ற • பேச்சு வழக்குச் சார்ந்த திரிபுடைச் சொற்களை எவ்விதத் தயக்கமுமின்றிக் கையாளுதல். லேசில் • மரூஉச் சொற்களைப் பயன்படுத்துதல் ஒன்று = ஒண்ணு சான்றுகள்: • திருச்சி புறநகர் மாவட்டக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொள்ளும் நேர்காணல் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது. இதில் பல தலைகள் உருளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (தினமலர், 19.01.2004, பக். 15) • திடீரென டமால் சத்தத்துடன் செல்போன் வெடித்தது. (தினமலர். 23.01.2004, பக். 7) • சபரிமலை ஓட்டல்களில் கொள்ளை விலை. கலெக்டர் நடவடிக்கை. (தினமலர், 26.11.1995, பக். 7) • யாருடைய டெலிபோனையும் மத்திய அரசு ஒட்டுக் கேட்கவில்லை என்று பிரதமர் திட்டவட்டமாக அறிவித்து இருக்கிறார். (தினத்தந்தி, 29.02.2004, பக். 13) • சினிமாவிலும் காசு இல்லை; பயாஸ்கோப்பிலும் காசு இல்லைனா வயித்துப் பாட்டுக்கு என்ன பண்றதுன்னுதான் சின்னக் குடை ராட்டினம் ஒண்ணு வாங்கினேன். (ஆனந்தவிகடன், 26.11.1995, பக். 2) • மரபுத் தொடர்கள் பேச்சு வழக்குச் சார்ந்த சில மரபுத் தொடர்கள் (Idioms) பயன்படுத்தப்பட்டு வாசகனை ஈர்ப்பதாய் மொழிநடை அமைகிறது. குழிதோண்டிப் புதைத்து. (பாக்யா, டிச. 1-7, 1995, பக். 53) போன்றவை சான்றுகள். • பழமொழி கலத்தல் பேச்சு வழக்குச் சாயல் கலந்த தொடர்களைப் பயன்படுத்தும் போது பழமொழிகளைக் கலந்து எழுதும் நடை எளிமையான கருத்துப் பரிமாற்றத்திற்கு உதவுகிறது. சான்று: விளக்குமாற்றுக்குப் பட்டுக் குஞ்சம் கேட்குதோ என்று ஜாடை மாடையாகத் திட்டித் தீர்க்கிறாராம். (நக்கீரன், டிச. 5, 1995, பக். 15) • குறியீடு அரசியல் சீர்கேடுகளைக் குறிப்பிட்டு எழுதும்போது பேச்சு வழக்கில் உள்ள குறியீடுகளைப் பயன்படுத்தி எழுதி வாசகனுக்கு மகிழ்ச்சியூட்டும் மொழிநடையும் உண்டு. சுருட்டல் கிங் (தராசு, 5.12.1995, பக். 20)போன்றவை சான்றுகள். • வட்டாரப்படுத்தல் பேச்சு வழக்கில் எழுதும் போது வட்டாரப்படுத்தி எழுதும் போக்கும் உண்டு. நம்மூர் மணிரத்னம் அல்ல (குங்குமம், 24.11.1995, பக். 16) என்பவை சான்றுகள். இவ்வாறு பேச்சு மொழியைப் பயன்படுத்தி எழுதுதல் ஆசிரியர் - வாசகன் இருவருக்கும் இடையே உள்ள தூரத்தைக் குறைத்து ஒரு நெருக்கத்தைத் தோற்றுவிக்கிறது. • ஆங்கில மொழிக் கலப்பு ஆங்கில மொழிச் சொற்களை, சொற்றொடர்களைக் கலந்து எழுதுவதில் பத்திரிகைகள் ஆர்வம் காட்டுகின்றன. • ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்திலேயே தருதல். என்று பத்திரிகைகள் பல முறைகளில் ஆங்கிலச் சொற்களைக் கலந்து எழுதுகின்றன. சான்றுகள்: இன்று எதிர்பாராமல் கிடைத்த Free Time இல் என் புது டி.வி. கம்பெனியான விசேஷ் விஷன் பற்றி நிறைய யோசித்தேன். மாலை பேட்டா கம்பெனிக்காரர்கள் நடத்திய Star Quiz நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். House Arrest ஆன அரசியல்வாதியாகிப் போனேன். (குமுதம், 30.11.1995, பக். 88-89) இவ்வாறு ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்திலேயே தந்து எழுதும் முறையை நாகரிகமாகக் கருதிக் குமுதமும் ஆனந்தவிகடனும் நகர வாசகர்களைத் தக்க வைக்கின்றன. இதே பாணியைப் பிற இதழ்களும் பின்பற்றுகின்றன. உந்து சக்தி (Driving Force) யார்? (பாக்யா. டிசம். 1-7.1995, பக். 25) என்பது ஆங்கிலச் சொல்லை அடைப்புக் குறிக்குள் தருவதற்குச் சான்று. அவர் ஸ்டைல் (இந்தியா டுடே, 5.12.1995, பக். 7) என்பது ஆங்கிலச் சொற்களை ஒலிபெயர்த்துத் தமிழில் தருவதற்கான சான்று ஆகும். தற்காலத் தமிழில் அதாவது பேச்சு வழக்கில் ஆங்கிலச் சொற்கலப்பு அளவு கடந்து காணப்படுவது கண்கூடு. பேச்சு வழக்கு நடை இதழ்களில் விரும்பிக் கையாளப்படுவதால் ஆங்கில மொழிச் சொற்களும் இயல்பாகவே கலந்து காணப்படுகின்றன. இவ்வாறு ஆங்கில மொழிக் கலப்பு இதழுக்கு ஒரு தற்பெருமை சார்ந்த நடையைத் தருவதற்கு உதவுகிறது. மற்ற இதழ்களிலிருந்து தம்மை வேறுபடுத்திக் காட்டுவதற்குச் சில வழிமுறைகளைப் பத்திரிகைகள் பின்பற்றுகின்றன. • முரண் சொற்களைக் கலந்து எழுதுதல். போன்ற வழிமுறைகள் அவற்றுள் சில. சான்றுகள்: • நடிகர்களிடம் அவரவர் ஹனிமூன் பற்றிக் கேட்ட கட்டுரையில் தனிமூன், பனிமூன், பட்டினிமூன் ஆகிய சொற்கள் பயன்படுத்தப்பட்டு முரண்சுவை பயக்கின்றன. (ஆனந்தவிகடன், 26.11.1995, பக். 21) • பல மல்லேஸ்வரிகள். (பாக்யா, 1-7 டிசம். 1995, பக். 26) • குறிப்பிடத் தக்க சொற்கள் வெச்சுக்குவோம்
|