தமிழ் மொழியில் வளர்ந்து வரும் துறைகளுள் நாட்டுப்புறவியல் துறையும்
ஒன்றாகும். கிராம மக்களின் கலை, பண்பாடு, இலக்கியம் முதலியவற்றைப்
பற்றி அறிந்து கொள்ள உதவுகின்ற இயலே நாட்டுப்புற இயலாகும். நாட்டுப்புறவியல்
குறித்த ஆய்வு, தமிழில் 75 ஆண்டுக் கால வரலாற்றை உடையாகும் தமிழ் ஆய்வாளர்கள்,
கலைகள், பண்பாடு, இலக்கியம் என்ற முப்பெரும் பிரிவாக நாட்டுப்புறவியலை
வகைமைப்படுத்தியுள்ளனர்.
நாட்டுப்புற இலக்கியம் என்ற வகைமையில் நாட்டுப்புறக்கதைகள்,
பாடல்கள், கதைப் பாடல்கள், விடுகதைகள், பழமொழிகள் முதலியவை
இடம் பெற்றுள்ளன. இவற்றுள் நாட்டுப்புறக் கதையும் நாட்டுப்புறப்
பாடலும் இணையும் முயற்சியே நாட்டுப்புறக் கதைப் பாடலாகும்.
நாட்டுப்புறக்
கதைப்பாடல்கள் எப்பொழுது தோன்றியவை
என்பதை உறுதியாகக் கூற இயலவில்லை இருப்பினும்
கிடைத்துள்ள பாடல்களில் புகழேந்தியால் எழுதப்பட்டதாகக்
குறிப்புக் காணப்படுகின்றது. நளவெண்பாவின் ஆசிரியராகிய
புகழேந்திப் புலவர் வாழ்ந்த காலம் பன்னிரண்டாம் நூற்றாண்டு.
கிடைத்துள்ள கதைப்பாடல்கள் பதினைந்தாம் நூற்றாண்டிலிருந்து
பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை உள்ளவை. ஆகையால்
பிற்காலப் புலவர்கள், புகழேந்திப் புலவரின் பெயருக்கு உள்ள
வரவேற்பைப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர் என்பதை அறிய
முடிகின்றது.
கதைப்பாடல்கள்
கதை, கும்மி, குறம், அம்மானை, கதைப்பாடல், வனவாசம், சிந்து என்பது
போன்ற பெயர் முடிவுகளைக் கொண்டுள்ளன. ‘பாலட்’ என்ற ஆங்கிலச் சொல்லிற்கு
இணையாகக் ‘கதைப்பாடல்’ என்ற சொல்லைத் தமிழறிஞர்கள் பயன்படுத்தியுள்ளனர்.
இக்கதைப்பாடல் வரலாற்றுக் கதைப்பாடல், புராணக் கதைப் பாடல், சமூகக்
கதைப்பாடல் என வகைமைப் படுத்தப்படுகின்றது. சில மரபுகள் எல்லாக் கதைப்பாடல்களிலும்
இடம்பெற்றுள்ள தன்மை எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இறுதியாகக் கதைப்பாடல்களுக்கேயுரிய
இயல்புகளான அடுக்கியல் அமைப்பு, திருப்பியல் அமைப்பு, சோக முடிவு,
முரண், சூழலுக்கேற்ப அமைதல், தொகுத்துக் கூறல், இறந்தவர் மீளவும் உயிர்பெற்று
வருதல் முதலானவை சுருக்கமாக விளக்கப்பட்டுள்ளன.
|