2.8 தொகுப்புரை

கதைப்பாடல்களை, அவற்றின் உள்ளடக்கத்தைக் கொண்டு வரலாற்றுக் கதைப் பாடல்கள், புராணக் கதைப் பாடல்கள், சமூகக் கதைப்பாடல்கள் என நாட்டுப்புறவியல் அறிஞர்கள் வகைமை செய்துள்ளனர். அவற்றுள் வரலாற்றுக் கதைப் பாடல்கள் குறித்து இப்பாடம் எடுத்துரைத்துள்ளது.

வரலாற்றுக் கதைப் பாடல்களுள் காலத்தால் முந்தையது இராமப்பய்யன் அம்மானையாகும். சிறந்த வரலாற்றுக் கதைப்பாடல் தேசிங்குராசன் கதையாகும். இவை இரண்டையும் பற்றிப் படித்தோம்.

மதுரை நாயக்கர் வம்சத்துத் திருமலை நாயக்கர், ‘மறவர் சீமையில்’ வலுவான ஆட்சியை நடத்திவந்த சேதுபதியை (சேதுபதி இரண்டாவது சடைக்கத் தேவன்) அடக்கி வைக்காவிட்டால் தனது ஆட்சிக்குக் கேடு வரலாம் என எண்ணி அவனை அடக்க முற்பட்டுத் தோல்வியுற்றான். திருமலையின் தளபதியே இராமப்பய்யன். இவன், சேதுபதியை அடக்கி வருவதாகச் சூளுரைத்துப் போர் செய்கிறான். சேதுபதி சார்பில் அவனது மருமகன் வன்னியத்தேவன் போரிடுகிறான். போரின் இறுதியில் சேதுபதி கைதாகி, பிறகு இறைவனருளால் மீண்டும் தன் ஆட்சியைப் பெறுகிறான். இது கதைப்பாடல் சொல்லும் கதையாகும்.

கதைப்பாடல் நிகழ்வுகள் வரலாற்றோடு எந்த அளவிற்கு மாறுபட்டுள்ளன என்பது இப்பாடத்தில் சுட்டப்பட்டுள்ளது. கதைத்தலைவனான இராமப்பய்யன் போரின் நடுவிலேயே இறந்து விட்டானென வரலாறு கூறுகின்றது. ஆயின் அம்மானை அவன் கதை இறுதிவரை இருந்ததாகக் கூறுகின்றது. கதையின் எதிர்த் தலைவனான வன்னியத் தேவன் பற்றிய குறிப்பு அம்மானையில் மட்டுமே இடம்பெற, வரலாற்றில் இடம் பெறவில்லை.

அம்மானை மூலமாக அக்காலக்கட்டத்து வரலாற்றினையும் சமுதாய வாழ்க்கையையும் மரபு மற்றும் பழக்க வழக்கங்களையும் அறிய முடிகிறது. இவை தவிரப் போர்க்கால நடைமுறைகளையும் தெரிந்து கொள்ள முடிகிறது. சிறந்ததொரு வரலாற்றுக் கதைப் பாடலாக இருந்தாலும் சொற்றொடர் அழகு, எதுகை மோனை, வருணனை, பழமொழிகள், உவமைகள் ஆகியவையும் இடம்பெற்றுக் கதைப்பாடல் தன்னுடைய இலக்கியப் பண்பையும் விட்டுக் கொடுக்கவில்லை என்பதை மெய்ப்பிக்கின்றது.

நாயக்கர் ஆட்சிக்குப்பின் முகலாயப் படையெடுப்பு நடந்த காலத்தில் அவ்வரசை எதிர்த்துப் போராடியவன் தேசிங்கு. இவன் ஆட்சி புரிந்தது பத்துமாதங்கள்தாம். இருப்பினும் இவன் வரலாற்றில் நிலைத்ததொரு இடத்தைப் பிடித்து விட்டான்.

டில்லி பாதுஷாவின் ஆணைக்குட்பட்ட நவாபு, வரி செலுத்தும்படி செஞ்சிக்கு ஆணை அனுப்ப, தோற்றமல்லனை அனுப்புகிறான். வரி செலுத்த மறுத்த தேசிங்கு போரில் சந்திப்பதாகக் கூறிகிறான். போரில் நண்பன் மோவுத்துக்காரனை இழக்கிறான். இருப்பினும் இறுதிவரை போராடி வீர மரணம் அடைகிறான். அவனது மனைவியும் உடன்கட்டையேறுகிறாள். தேசிங்கின் வீரத்தைக் கண்ட நவாபு அவனது வீரத்தைப் பாராட்டுகின்றான் என்று கதைப்பாடல் முடிவடைகின்றது.

வரலாற்றிலிருந்து கதைப்பாடல் பல இடங்களில் வேறுபட்டுள்ளது என்பது இப்பாடத்தில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

தேசிங்கு, அவனது நண்பன் மோவுத்துக்காரனின் பண்பு நலன் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பழைய கதைப் பாடல்களில் மோவுத்துக்காரன் பற்றிய குறிப்பு இல்லை. சமயப் பொறையை மிகவும் மதித்து இந்தக் கதைப் பாடல் பாராட்டிச் சிறப்பிக்கிறது. பெயர்களாலும் சடங்குகளாலும் வேறாகி மனத்தால் ஒன்றாகிவிடும் சமயவுணர்வை இந்தக் கதைப்பாடல் காட்டுகிறது.

உலக அனுபவம் இல்லாதவனும் முன் கோபியும் அவசரக்காரனும் மக்கள் ஆதரவோ பணியாளர் ஆதரவோ பெறாதவனுமான தேசிங்கு புகழ் பெறக் காரணம் அவனது வீரமே. நவாபு உட்பட எதிரிகளே வியந்து போற்றிய அவன் வீரம் அவனைப் பற்றிய வீர வழிபாட்டுக்கு அடித்தளமாகிறது. அந்த வீர வழிபாடே வீரச் சுவையுடைய கதைப் பாடலாக உருக்கொண்டு அவன் புகழை நிலைக்கச் செய்கிறது எனலாம்.


தன்மதிப்பீடு : வினாக்கள் - II

1. தேசிங்கு ராசன் எந்த நாட்டை ஆண்டவன்?
2. மோவுத்துக்காரன் யார்?
3.
தேசிங்கு மக்கள் மத்தியில் புகழடைந்தமைக்கு எது காரணமாயிருந்தது?
4.
எந்த மைய அரசின் கீழ் தேசிங்கு செஞ்சியை ஆண்டான்?
5.
பகைவனும் பாராட்டும் வீரமுடையவன் தேசிங்கு என்பதை உம் பாடப்பகுதி கொண்டு சுட்டுக.