எந்தவொரு
இலக்கிய வகையாக இருந்தாலும் அது தனக்கென ஓர் அமைப்பு முறையைக் கொண்டிருக்கும்.
இக் கருத்து கதைப்பாடல்களுக்கும் பொருந்தும். இக்கதைப்பாடல்கள் இவற்றுக்கு
முன் தோன்றிய இலக்கிய வகைகளான பள்ளு, குறவஞ்சி ஆகியவற்றின் அமைப்பு
முறையைப் பின்பற்றியுள்ளன எனலாம்.
கதைப்பாடல்
காப்பு அல்லது வழிபாடு, வணக்கம், வரலாறு, வாழ்த்து என நான்கு பிரிவுகளைக்
கொண்டு அமைந்திருக்கும். கதைப்பாடலைத் தொடங்குமுன் பாடப்படுவது காப்பு
ஆகும். அடுத்து இடம் பெறும் 'வணக்கம்' பகுதி சபைக்குத் தெரிவிப்பது
அல்லது குருவிற்குத் தெரிவிப்பதாகும். வரலாறு என்பது வருணனையோடும்
பின்னிணைப்போடும் கூறப்படும் கதையாகும். இறுதியில் கதையின் கதாபாத்திரங்களும்
கதையைக் கேட்டவர்களும் ‘பல்லாண்டு வாழ்க’ என்று வாழ்த்தும் வாழ்த்தாகும்.
இங்குக் கூறப்பட்டுள்ள அமைப்பு முறை சில கதைப்பாடல்களில் முன் பின்னாகவும்
அமைந்திருக்கும்.
கதைப்பாடலின்
மொழி நடையின் மூலம் பாடலாசிரியர், மக்களைக் கவருவதற்காகக் கையாண்டுள்ள
உத்திகளை அறியலாம். உவமைகள், உருவகங்கள், சொல்லடுக்கு, ஒலிக்குறிப்புச்
சொற்கள், பழமொழிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி, சுவை குறையாமல் மக்களுக்குக்
கதை எடுத்துரைக்கப்படுகின்றது.
கதைப்பாடல்கள்,
கிராமப்புற மக்கள் மத்தியில் ஒரு மக்கள் தொடர்புச் சாதனமாக, ஒரு பொழுது
போக்கும் கலையாகப் பயன்பட்டுள்ளது. மக்களுக்குப் பக்தி, புராணம் பற்றிய
அறிவு, சமுதாயச் சீர்திருத்தக் கருத்துகள் முதலியவற்றை அறிவுறுத்தும்
கருவியாகவும் செயல்பட்டுள்ளது. தொலைக்காட்சியின் வரவிற்குப்பின் கதைப்பாடல்களைக்
கேட்கும் வழக்கம் குறைந்தாலும், இக்கலை இன்றும் வாழ்ந்துகொண்டுதான்
இருக்கின்றது.
|