வாழ்க்கையின் பிறப்புமுதல் இறப்பு வரை பல்வேறு சூழல்களில் பல்வேறு
நோக்கங்களுக்காகப் பாடப்படும் நாட்டுப்புறப் பாடல்களுள் வழிபாட்டுப்
பாடல்கள், கொண்டாட்டப் பாடல்கள், இரத்தல் பாடல்கள், இழத்தல் பாடல்கள்
முதலானவை குறித்தும் நாட்டுப்புறப் பாடல்களின் காலம், கற்றுக் கொண்ட
முறை, பாடல்கள் வழியே மரபு வழிக் கல்வி, பாடல்களில் எதிர்ப்புக் குரல்
போன்ற செய்திகளும், இப்பாடத்தில் விளக்கப்பட்டன. நன்மை வேண்டும்போதும்
நன்மை கிடைத்தற்கு நன்றி தெரிவிக்கும் போதும் நிகழ்த்தப்படும் வழிபாடுகளில்
பாடல்கள் பாடப்படுகின்றன. ’சுத்துக்கும்மி’ தமிழகத்தில் பரவலாகக் காணப்படும்
கும்மிவடிவமாகும். இந்தக் கும்மிப்பாடல் வடிவம் மக்களிடையே கருத்துகளைப்
பரப்புவதற்கு ஏற்ற வடிவமாகும். உறுமி மேள ஆட்டம், சிறப்புக் கொண்டாட்டங்கள்
வீடுகளில் நிகழ்த்தப்பட்டாலும், கூட அதில் பயன்படுத்தப்படும் பாடல்கள்
பார்வையாளரை மகிழ்ச்சிப் படுத்துவதாகவே அமைக்கப்பட்டிருக்கும். மணவிழாவில்
பாடப்படும் கேலிப்பாடல்கள், மணமகனையும், மணமகளையும் தாழ்த்துவதாக அமைந்திருந்தாலும்
அதற்காக யாரும் வருத்தப்படுவதில்லை. பிச்சை எடுக்கும் சூழல்களில் பாடப்படும்
பாடல்கள் அம்மக்களின் வறுமையைக் குறிப்பதாக இருப்பதுண்டு. இழப்புப்பாடல்கள்
கணவனை இழப்பதால் பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு இழப்புக்களை வெளிப்படுத்துவதோடு
அவர்களின் உரிமைகள் எவ்வாறு மறுக்கப்படுகின்றன என்பதையும் தெளிவுபடுத்துகின்றன.
இன்று தமிழகத்தில் வழங்கப்படும் நாட்டுப்புறப் பாடல்கள் பல்வேறு கால
கட்டங்களில் தோன்றியவை. முதியவர்கள் வாயிலாக இளையவர்களுக்குப் பரவிச்
செல்பவை. புதிய பாடல்களும் உருவாகிக் கொண்டிருக்கின்றன. நாட்டுப்புறப்
பாடல்கள் மரபுவழிக் கல்வி நிறுவனமாகவும் மக்களின் எதிர்புக் குரலை
வெளிப்படுத்துவனவாகவும் உள்ளன. தொழில்கள் எந்திரமயமானதாலும் தொலைத்
தொடர்புச் சாதனங்களின் வளர்ச்சியாலும் பல்வேறு சூழல்களில் பாடப்பட்டுவந்த
நாட்டுப்புறப் பாடல்கள் மறைந்தும் மாறியும் வருகின்றன. புதிய சூழல்களுக்கேற்ற
புதுப்பாடல் வகைகளும் தோன்றுகின்றன.
|