6.3 பாரதிக்குப் பின் |
|
1921 செப்டம்பர் 12
பாரதியார் - தமிழை
உலகமொழிகளிலேயே சிறந்ததாக்க முனைந்த மகாகவி, இந்தியா விடுதலை அடையு
முன்பே "விடுதலை விடுதலை - ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று
ஆடுவோமே" என்று பாடிய விடுதலை வீரர், பத்திரிகை உலகில் பல புதுமைகளைச்
செய்த ஓர் இதழாசிரியர் திருவல்லிக்கேணியில் ஒரு வாடகை வீட்டில் அமரரானார்.
அவருடைய இறப்பு ஊர்வலத்தில் ஏறத்தாழ
இருபது பேர்
கலந்து கொண்டதாக நெல்லையப்பர்
தெரிவிக்கிறார்.
அவருடைய இறப்பைக் குறித்துச் சுதேசமித்திரன் பத்திரிகை
கீழ்க்காணுமாறு எழுதியது.
. . . பள்ளிக் கூடத்தை விட்டுக் கிளம்பியதும்,
ஸ்ரீமான் ஜி,சுப்பிரமணிய ஐயரிடத்தில் மித்திரன் உதவி ஆசிரியராக
அமர்ந்து, வேலை செய்து வரும் நாளில், ‘இந்தியா’ என்ற வாரப்
பத்திரிகை ஒன்றைத் தாமே நடத்தி வந்தார். அதன் மூலமாக ராஜாங்கத்தாருடைய
கோபத்துக்கு ஆளாகி சுமார் 10 வருஷ காலம், பிரஞ்சு இந்தியாவில்
வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிட்டது. பரபரப்பாக வேலை
செய்யும் இயல்புடைய ஒருவர் சும்மா இருக்கும்படி நேர்ந்த
காரணத்தால், அவருடைய தேகம்மெலிந்து போய், பழைய பாரதியின்
சாயல்போல் இரண்டு வருஷங்களுக்கு முன் அவர் புதுச்சேரியிலிருந்து
மீண்டு வந்தார். சிறிதுகாலம் தம்முடைய ஊராகிய கடையத்தில்
இருந்து விட்டுத் தமது ஆசையைக் கவர்ந்த பத்திரிகை வேலைக்குத்
திரும்பி வந்து மித்திரன் உதவி ஆசிரியர்களில் ஒருவராகி தேச
ஊழியம் செய்து வரும் நாளில் திடீரென்று நம்மையெல்லாம் விட்டுமறைந்து
போய்விட்டார்.
- சுதேச மித்திரன் 13.9.1921 பக்.1.
(மகாகவி பாரதி வரலாறு, பக்.521)
|
பாரதியின் மறைவுக்குப்
பிறகு, நாடு, மொழி, சமூகம் ஆகிய மூன்றும் எவ்வாறு இருக்கின்றன என்பது
ஆய்வுக்குரியது.
பாரதியின் மறைவுக்குப் பிறகு, நாடு,
மொழி, சமூகம் ஆகிய
மூன்றும் எவ்வாறு இருக்கின்றன என்பது பற்றிச் சிந்திக்கும்
போது, பாரதியார் எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பது
புலப்படும்.
6.3.1 நாடு
1921ஆம்
ஆண்டிற்குப் பிறகு நாட்டில் காங்கிரஸ் இயக்கம் விடுதலைப் போராட்டத்தைத்
தீவிரப்படுத்தியது. அண்ணல் காந்தியடிகளின் தலைமையைக் கருத்து வேறுபாடின்றித்
தேசிய இயக்கத்தினர் ஏற்றுக் கொண்டனர். நாட்டின் விடுதலைக்கு அகிம்சை
வழியிலான போராட்டமே தகுதியானது என்ற கருத்தைப் பெரும்பான்மை மக்கள்
ஏற்றனர். 1928-இல் கல்கத்தாவில் நிகழ்ந்த காங்கிரஸ் மாநாட்டில், இந்தியாவிற்கு
உரிமை வழங்க வெள்ளை அரசுக்கு ஓராண்டுக் கால வரையறை அளித்துத் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டது. 1929-இல் லாகூரில் நிகழ்ந்த மாநாட்டில் வெள்ளையர்
அரசை எதிர்த்துச் சத்தியாக்கிரகப் போர் தொடங்க முடிவு செய்யப்பட்டது.
1935-இல் மாநில சுயாட்சி உரிமை வழங்கப்பெற்றது.

1947, ஆகஸ்ட் 15-இல் இந்தியா விடுதலை பெற்றது;
நாமிருக்கும் நாடு நமது என்பதறிந்தோம்
- இது
நமக்கே உரிமையாம் என்பதறிந்தோம் - இந்தப்
பூமியில் எவர்க்குமினி அடிமை செய்யோம்-பரி
பூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம். |
(சுதந்திரப்பள்ளு
- 5)
[பரிபூரணன் = முழுமுதற் கடவுள்]
என்ற பாரதியின் வாக்கு மெய்யாயிற்று.
விடுதலை அடைந்து,
குடியரசு அமைத்து விடுதலைப் பொன்விழாக் கொண்டாடிப்
புதிய நூற்றாண்டிலும் இந்தியா காலடி எடுத்து வைத்து விட்டது.
ஆனால் நாட்டின் சிக்கல்கள் தீர்ந்து விட்டனவா?
 |
பொருளாதார நலிவு - சமத்துவமின்மை |
 |
சாதிச் சமூகப் பிரிவு
- தீண்டாமை |
 |
அரசியல்வாதிகளின் தன்னலம்
- ஊழல் |
 |
ஒருமைப்பாட்டில் தளர்ச்சி -
ஒற்றுமைக்
குலைவு |
 |
தாய்மொழி வளர்ச்சியின்மை - பிறமொழி
மோகம் |
 |
பெண்களுக்கு உரிமையின்மை
-
பெண்களைக் கொடுமை செய்தல் |
 |
மத வேறுபாடும் போரும் - நல்லிணக்கம்
இன்மை |
இப்படிப்பட்ட தீமைகள் முற்றிலும் தீர்ந்தபாடில்லை.

எண்ணிலா நோயுடையார்
- இவர்
எழுந்து நடப்பதற்கு வலிமையிலார்
கண்ணிலாக் குழந்தைகள் போல் - பிறர்
காட்டிய வழியிற்சென்று மாட்டிக் கொள்வார்;
நண்ணிய பெருங்கலைகள் - பத்து
நாலாயிரங் கோடி நயந்து
நின்ற
புண்ணிய நாட்டினிலே - இவர்
பொறியற்ற விலங்குகள் போல வாழ்வார் |
(பாரத ஜனங்களின் தற்கால நிலைமை - 7)
(எண்ணிலா = எண்ண முடியாத,
நண்ணிய = அடைந்த,
நயந்து = விரும்பி, பொறி = அறிவு)
என்று அன்று பாரதி கூறிய நிலை இன்றைக்கும் பொருந்துகிறது.
நாட்டின் இந்த நிலையை நீள நினைந்து
புதிய உலகம்
காணப் பாரதியே பயன்படுவார்.
6.3.2 மொழி
பாரதிக்குப்பின் கவிதை,
இலக்கியம், பத்திரிகை ஆகிய
துறைகளில் பல வளர்ச்சிகள்
ஏற்பட்டுள்ளன.
இவற்றுக்கெல்லாம் மூல காரணராக அமைந்தவர் பாரதியே.
இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்க் கவிதை உலகின் விடிவெள்ளி
பாரதியே. பற்பல சாதனைகளை அவர் புரிந்திருக்கிறார். அவர்
மொழியிலேயே கூறினால்,

சாலமிகப் பெரிய
சாதனை காண் இஃதெல்லாம்!
தால மிசை நின்றன் சமர்த்துரைக்க
வல்லார் யார்?
ஆனாலும் நின்றன் அதிசயங்கள்
யாவிலுமே
கானாமுதம் படைத்த காட்சிமிக
விந்தையடா!
காட்டு நெடுவானம் கடலெல்லாம்
விந்தையெனில்,
பாட்டினைப் போல் ஆச்சரியம் பாரின்மிசை இல்லையடா! |
(குயில் பாட்டு,
குயிலும்மாடும், 91-96)
என்றுதான் கூற
வேண்டும். பாரதிதாசன், பாரதியின்
பெருமையெல்லாம் அறிந்தவர். பாரதிதாசனின் பாடுபொருள்
மாற்றம் பாரதியால் விளைந்தது. தமிழை வீறு
கொண்டு
எழச் செய்த பாரதியின் கவித்துவம், இந்த
நூற்றாண்டின்
கவிதைப் பாதையையே திருப்பிவிட்டது.

தமிழரின் உயிர்நிகர் தமிழ்நிலை
தாழ்ந்ததால்
இமை திறவாமல் இருந்த நிலையில்
தமிழகம் தமிழுக்குத் தகும் உயர் வளிக்கும்
தலைவனை எண்ணித் தவம் கிடக்கையில்
இலகு பாரதிப்புலவன் தோன்றினான் |
(பாரதிதாசன்
கவிதைகள், தொகுதி 2 - பாரதி)
(நிகர் = சமம்)
1. நடையில் எளிமை
2. சமூக உணர்வே பாடுபொருள்
3. பெண்களின் விடுதலை,
4. புதிய
புதிய வடிவங்கள்,
5. புராணப் பழமைகளின் உட்பொருள் அறிந்து அவற்றைப்
புதுக்கருத்துகளோடு பரிணாமம் பெற எண்ணிப் படைத்தல்.
6. தெய்வத்தைப் பாடுவதிலும் மக்கள்
சிந்தனையே
அடிப்படை
7. புதுமையும் புரட்சியும் படைக்கும் கருவியாகக்
கவிதை உருக்கொள்ளல்.
8. உலகளாவிய
நோக்கு என்ற
கூறுகள்
இன்றைய கவிதைகளில் இடம் பெறப்
பாரதியே
காரணர். பாரதி அவற்றின் வழி வாழ்கிறார். வால்ட்விட்மன்
படைத்த புதுக்கவிதையின் பொருளைப் பெரிதும்
பாரதி
போற்றினார். விட்மன், ஏழை பணக்காரரற்ற,
உயர்வு
தாழ்வற்ற ஆண் பெண் வேறுபாடு அற்ற,
அரசர்
குடிமக்கள் வேறுபாடற்ற ஒரு நகரத்தைத் தம் கவிதைகளில்
படைக்கிறார். "மக்களின் முகத்தில் நான்
கடவுளைக்
காண்கிறேன்" என்கிறார். விட்மன் போலவே
பாரதியும்
மக்கள் கவிஞனாக மலர்ந்து மணம் பரப்பினார்.
இந்த
நூற்றாண்டைப் ‘பாரதியுகம்’ என்று அடையாளம் காணும்
வழக்கு நிலைபெற்றுவிட்டது. பாரதியின்
கவிதைப்
பெருவெள்ளம், அந்தாதிக் கலம்பகங்கள்
என்ற
இலக்கியங்களைப் புதையுண்ணச் செய்து
விட்டது.
செல்வர்களின் தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் பாட்டுப்பாடும்
வழக்கத்தை நீக்கிவிட்டது.

சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது,
சொற்புதிது, சோதி மிக்க
நவகவிதை எந்நாளும் அழியாத
மாகவிதை . . . .
|
(வெங்கடேசு ரெட்டப்ப பூபதி, சீட்டுக்கவி - 1, 3)
என்றவாறு கவிதையின்
புதிய தகுதிகள் இன்று
பேசப் பெறுகின்றன. இதற்கெல்லாம் காரணராய் இருந்தவர்
பாரதி, இன்று தோன்றும் எழுச்சிமிக்க புதுயுகப் பாடல்களில்
பாரதியின் முகம் தெரிகிறது; அகம் தெரிகிறது;
குரல் கூடக்
கேட்கிறது. ஆம்! பாரதியார் வாழ்கிறார்.
6.3.3 சமூகம்
பாரதிக்குப் பின்
சமூக நிலையில் பலமாற்றங்கள்
ஏற்பட்டுள்ளன. சமத்துவமான நிலைநோக்கிச்
சமூகம்
செல்வதற்கு அரசால் ஐந்தாண்டுத் திட்டங்கள் தீட்டப்பட்டன.
பட்டினிச்சாவுகள் குறைந்திருக்கின்றன. தனி மனிதர் வருவாய்
விழுக்காடு உயர்ந்துள்ளது; கல்வி பரவலாக்கப்பட்டுள்ளது;
பெண்கள் உரிமை பெற்று வருகின்றனர். நாடு
தொழில்
மயமாகிக் கொண்டிருக்கிறது. அறிவியல் கருவிகளின்
பயன்பாடு மிகுந்துள்ளது. பொருள்களை வாங்கும் சக்தி
கூடியுள்ளது. புற நாகரிகம்
செம்மையாகியுள்ளது.
எனினும் குறைகள் இல்லாமல் இல்லை. இன்று
கோடிக்
கணக்கில் செல்வம் சேர்த்தவர் எண்ணிக்கை பெருகியுள்ளது.
ஏழை பணக்காரர் இடையே இடைவெளி பெருகியுள்ளது.
"எல்லோரும் சமம் என்பது உறுதியாச்சு" என்று
பாரதி
கூறியது உண்மையாகவில்லை.

எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்திய மக்கள்
எல்லாரும் ஓர்நிறை எல்லாரும் ஓர் விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர்
|
(பாரத சமுதாயம், சரணம். 4)
என்று பாரதி
கூறிய மக்களாட்சித் தத்துவம்
அடையப்பெறவில்லை. சாதிச்சண்டைகள், மதக் கலவரங்கள்,
இனப்பூசல்கள், பெண்களைச் சித்திரவதை செய்தல், பெண்
குழந்தைகளைக் கருவில் அழித்தல், சமூகத்தில்
தாழ்ந்த
நிலையில் இருப்போரை உயிருடன்
கொளுத்துதல்,
கிராமங்களைச் சூறையாடுதல், சாதியடிப்படையிலான தேர்தலும்
அரசியலும், இன்னும் எத்தனை எத்தனையோ தீமைகளும்
பெருகிவிட்டன. இச்சூழலில் பாரத சமூகம் எப்படி
இருக்க
வேண்டுமென்பது குறித்துப் பாரதி தாம்
பாடிய பல
பாடல்களில் தெளிவுபடுத்தியுள்ளார். அவை
இன்றும்
பொருந்துகின்றன. எனவே இன்றும் பாரதி
வாழ்கிறார்.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1. |
வித்தகர்க்கு
உரிய இலக்கணம் யாது? |
[விடை] |
2. |
மனிதரின்
புகழ் உடம்பு குறித்துத்
திருவள்ளுவர் கூறுவது யாது? |
[விடை] |
3. |
பாரதி
வெளியிட்ட முதல் நூல் எது? |
[விடை] |
4. |
விபின்
சந்திர பாலர் விடுதலை பெற்ற
நாளைக் கொண்டாடும் போது பாரதியார்
கூறியது யாது? |
[விடை] |
5. |
தேசியக்
கல்வி எனப் பாரதியார்
எதனைக் குறிக்கின்றார்? |
[விடை] |
6. |
சமூகத்
தீமைகளாகிய நோய்களைத்
தீர்க்கும் மருந்தாக எவற்றைக் கூறுகிறார்? |
[விடை] |
|
|