6.8 தொகுப்புரை

நாற்பது வெண்பாக்களைக் கொண்ட நன்னெறி என்னும் இந்த நூல் மக்கள் வாழ்க்கைக்கு உரிய நல்ல நெறிகளைத் தொகுத்துக் கூறுகிறது.

நல்ல நட்பின் பெருமையையும், நட்பில் பிரிவு கூடாது என்னும் அறிவுரையையும் சிவப்பிரகாசர் விளக்கியுள்ளார்.

இனிமையான சொற்களைப் பேசுவதால் ஏற்படும் நன்மைகளையும் கொடிய சொற்களைப் பேசுவதால் ஏற்படும் தீமைகளையும் நன்னெறி தெரிவித்துள்ளது. மேலும் நல்ல பண்பாளர்கள் சொல்லும் வன்சொல்லும் நன்மையைத்தான் தரும் என்றும் தெரிவித்துள்ளது.

கல்வியின் சிறப்பைப் பற்றியும், கற்றவர்களின் புறத்தோற்றத்தை வைத்து அவர்களின் அறிவுத் திறத்தை எடை போடக் கூடாது என்பதைப் பற்றியும் சிவப்பிரகாசர் கூறியுள்ளார்.

அறிஞர்களின் பெருமையையும் மன்னனை விடவும் அறிஞர்கள் மதிக்கப்படுவதையும் நன்னெறி வழியாக நாம் அறிய முடிகிறது.

பெரியோர்கள் புகழ்ச்சியில் மயங்குவதில்லை என்பதையும், அவர்கள் பிறருக்கு ஏற்பட்ட இன்னலைக் கண்டு உள்ளம் வருந்துவார்கள் என்ற உண்மையையும் சிவப்பிரகாசர் தெரிவிக்கிறார்.

உதவி செய்து வாழ வேண்டிய தேவையையும், உதவி செய்யும் போது பயன்கருதாமல் உதவி செய்ய வேண்டும் என்பதையும், சமுதாயத்தில் தீயவர்களாகக் கருதப்படுகிறவர்களுக்கு உதவி செய்யக் கூடாது என்பதையும் நன்னெறி உணர்த்துகிறது.

கல்வியாலும், செல்வத்தாலும் ஆணவம் கொள்ளக்கூடாது. அவ்வாறு ஆணவம் கொண்டவர்கள் கல்வியையும் செல்வத்தையும் இழக்க நேரிடும் என்றும் நன்னெறி அறிவுரை கூறியுள்ளது.

 

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.
கல்வியின் உண்மைப் பொருளை அறிந்தவர்களின் முன் யார் அஞ்சி ஒடுங்குவார்?
[விடை]
2.
இந்தப் பாடத்தில் ‘புணை என்பதற்கு எந்தப் பொருள் கூறப்பட்டுள்ளது?
[விடை]
3.
கல்வி கற்றவர்களின் பெருமையை எதன் துணைகொண்டு அறிய முடியும்?
[விடை]
4.
யாரை அறிஞர்கள் என்கிறோம்? [விடை]
5.
பெரியவர்கள் எதைக்கண்டு வருந்துவார்கள்? [விடை]