2.3 கற்பொடு புணர்ந்த கவ்வை |
|||
உடன்போக்காகத் தலைவி தலைவனுடன் சென்ற பிறகு அவளது களவு வாழ்க்கையைப் பற்றி அயலவர் பலரும் அறிந்து கொள்ளுவர். அதன் தொடர்ச்சியாய் அது பற்றியே பேசுவர். அதற்கு அலர் என்று பெயர். அவ்வாறு அலர் எழுந்து பலர் அறியக் களவு வெளிப்படுதலின் தொடர்ச்சியாய் நிகழும் நிகழ்ச்சிகளைக் கற்பொடு புணர்ந்த கவ்வை என்று கூறுவர். கவ்வை என்பது ஒலி, பழிச்சொல், துன்பம், கவலை முதலிய பல பொருள்களைத் தரும். அது ஐந்து வகைகளை உடையது. அவையாவன: |
|||
(1) |
செவிலி புலம்பல் | : | தலைவி காதலனுடன் உடன்போக்காகச் சென்று விட்டதை அறிந்து செவிலித் தாய் புலம்புதல். |
(2) |
நற்றாய் புலம்பல் | : | தன் புதல்வி காதலனுடன் உடன் போக்காகச் சென்றுவிட்டதை அறிந்து நற்றாய் புலம்புதல். |
(3) |
கவர் மனை மருட்சி | : | நற்றாய் தன் வீட்டில் இருந்து கொண்டு வருந்துதல். |
(4) |
கண்டோர் இரக்கம் | : | தலைவியின் தாயும் தோழியரும் அவளது உடன்போக்கினை, அறிந்து அப்பிரிவைத் தாங்க முடியாமல் வருந்திப் பேசுதலை மற்றவர் கண்டு இரங்கிக் கூறுதல். |
(5) |
செவிலி பின்தேடிச் சேறல் | : | உடன் போக்காகச் சென்ற தலைவியைத் தேடிக்கொண்டு, செவிலி பின்தொடர்ந்து செல்லுதல். |
உடன்போக்கின் பின் களவு வெளிப்பட்டு அதன் பின் நிகழும் நிகழ்ச்சிகளைக் கற்பொடு புணர்ந்த கவ்வை என்று கண்டோம். செவிலி புலம்பல், நற்றாய் புலம்பல், கவர் மனை மருட்சி, கண்டோர் இரக்கம், செவிலி பின்தேடிச் சேறல் என்னும் ஐந்தும் அக்கவ்வையின் பகுதிகளாகும். அவற்றின் உட்பிரிவுகளாக (விரிவுகளாக) அமையும் கிளவிகளை (கூற்றுகளை) இனிக் காண்போம். |
|||
|
|||
தன் வளர்ப்பு மகளான தலைவி காதலனுடன் உடன் போக்காகச் சென்று விட்டதை அறிந்து கொண்ட செவிலித்தாய் புலம்புவாள். இது செவிலி புலம்பல் எனப்படும். அவளது புலம்புதலின் விரிவுகளாகச் சிலவற்றை அகப்பொருள் விளக்க நூலாசிரியர் குறிப்பிட்டுள்ளார். அவையாவன : |
|||
(1) தலைவியின் உடன்போக்கை, தோழி வழியாக உணர்ந்த செவிலி வருந்துதல் ; அப்போது அவளைத் தேற்றுவோர்க்கு வருத்தத்துடன் பதில் கூறுதல். |
|||
(2) தலைவி தான் தலைவனுடன் செல்லப்போவதைக் குறிப்பினால் உணர்த்தியும் அறியாமல் போனதற்காக நொந்து கூறுதல். |
|||
(3) செவிலி தெய்வத்தை வாழ்த்துதல். |
|||
|
|||
தலைவி உடன்போக்காகச் சென்றதைச் செவிலி நற்றாய்க்கு வெளிப்படுத்துவாள் அது அறத்தொடு நிற்றல் ஆகும். அவ்வாறு செவிலி வழியாக உணர்ந்துகொண்ட தாய் புலம்பிக் கூறுதல் நற்றாய் புலம்பல் எனப்படும். நற்றாய் புலம்பலின் விரிவுகளாவன : |
|||
(1) பாங்கியுடன் நற்றாய் புலம்புதல். |
|||
(2) அயலாருடன் நற்றாய் புலம்புதல். |
|||
(3) தலைவி பழகி விளையாடிய இடங்களோடு வருந்திப் பேசுதல். |
|||
|
|||
நற்றாய் தன் வீட்டில் இருந்து கொண்டு வருந்துதல் மனை மருட்சி எனப்படும். அது ஐவகைப்பட்ட விரிவுச் செய்திகளை உடையது. |
|||
(1) தலைவி நல்லபடி இல்லம் திரும்ப வேண்டும் என்பதற்காகக் காக்கை கரைதல் முதலான நல்ல நிமித்தங்களைப் போற்றுதல். |
|||
(2) தலைமகள் நடந்து செல்லும் காட்டின் வெம்மைத் தன்மை மாறிக் குளிர்ச்சி தருவதாக ஆகட்டும் என்று நற்றாய் விரும்பி உரைத்தல். |
|||
(3) தலைவியின் மென்மைத் தன்மைக்கு இரங்குதல். |
|||
(4) தன் மகளின் (தலைவியின்) இளமைத் தன்மைக்கு மனம் இரங்குதல். |
|||
(5) தன் மகளின் (தலைவியின்) அச்சத் தன்மைக்கு இரங்குதல். |
|||
|
|||
தலைவி தன்னொடு உடன் பழகி விளையாடிய தோழியர் கூட்டமும் தன்னைப் பெற்றெடுத்த நற்றாயும் வருந்துமாறு தலைவனுடன் உடன்போக்காகச் செல்வாள். அப்போது ஆயத்தாரும் (தோழியர்) நற்றாயும் வருந்தி நிற்பதைக் கண்டார் தங்கள் வருத்தத்தைப் புலப்படுத்துதல் கண்டோர் இரக்கம் எனப்படும். இதற்கு உட்பிரிவுகளும் விரிவுகளும் குறிக்கப்பெறவில்லை. |
|||
|
|||
தலைவி தனது நட்பு வட்டமும் நற்றாயும் வருந்துமாறு உடன் போக்காகச் சென்ற பாதையிலேயே பின் தொடர்ந்து செவிலி தேடிச் செல்லுதல் செவிலி பின் தேடிச் சேறல் எனப்படும். இது ஒன்பது வகையான விரிவுகளை உடையது. அவையாவன : |
|||
(1) தலைவியின் பிரிவைத் தாங்காத நற்றாயைத் தேற்றுதல். |
|||
(2) செல்லும் வழியில் மூன்று தண்டுகளைக் கையில் கொண்ட அந்தணரை (முக்கோல் பகவர்) வினவுதல். |
|||
(3) அந்தணர் செவிலியிடம் ‘உடன்போக்கு உலக இயல்புதான்’ என்று காரணம் கூறி விளக்குதல். |
|||
(4) செவிலி, பாலை நிலத்தில் செல்லும் போது இடைவெளியில் சந்தித்த ஒரு பெண்ணிடம் புலம்பிக் கூறுதல். |
|||
(5) செவிலி இடைவழியில் கண்ட குரா என்னும் மரத்துடன் புலம்பிப் பேசுதல். |
|||
(6) தான் செல்லும் வழியில் பாதச் சுவடுகளைக் கண்டு அவை தலைவியின் பாதச் சுவடுகளாகுமோ என்று வருந்திப் பேசுதல். |
|||
(7) செவிலி போகும் வழியில் எதிர்ப்படும் தலைமக்களைப் பார்த்துத் தன் மகள் சென்ற விவரம் கேட்டல். |
|||
(8) எதிரில் வந்தோர் செவிலியின் புலம்புதலைக் கேட்டு அவளுக்கு ஆறுதலான சில வார்த்தைகளைக் கூறுதல். |
|||
(9) செவிலி, நெடுந்தூரம் நடந்தும் தன் புதல்வியைக் காணாமையால் துன்பம் மிகுந்து வருந்திக் கூறுதல். |
|||
மேற்கண்ட யாவும் செவிலித்தாய் தலைவியை தேடிச் சென்ற முயற்சியின் போது அடுத்தடுத்து நிகழும் நிகழ்வுகளின் விளக்கங்களாகும். |
1. |
களவு வெளிப்பாட்டுக் கிளவிகள் எத்தனை? யாவை? விளக்குக. | விடை |
2. |
உடன்போக்கு எப்போது நிகழும்? | விடை |
3. |
உடன்போக்கின் வகைகள் எத்தனை? யாவை? | விடை |
4. |
கற்பொடு புணர்ந்த கவ்வையின் ஐந்து வகைகளை எழுதுக. | விடை |
5. |
செவிலி பின்தேடிச் செல்லுதலின் விரிவுக் கிளவிகள் யாவை? | விடை |