3.3 பரத்தையிற் பிரிவு |
தலைமகன் கற்பு வாழ்க்கையில் மேற்கொள்ளும் பிரிவுகள் ஆறு வகைப்படும். அவற்றுள் முதலில் அமைவது பரத்தையிற் பிரிவு என்பதாகும். |
தனக்கே உரிய தனிப்பெருமை மிக்க தலைவியோடு கூடி இல்லறம் மேற்கொள்ளும் தலைவன் நிறைந்த மகிழ்ச்சியில் சிறந்த வாழ்க்கை நடத்துவான். எனினும் இலக்கிய இலக்கணப் போக்கின்படி, அத்தகு வாழ்க்கையில் அவர்கள் வாழ்க்கையில் வேறுபட்ட நிலையாக, தலைவன் பரத்தையர் எனப்படும் பொதுமகளிர் வாழும் பகுதிக்குச் (சேரிக்கு) சென்று பரத்தையுடன் கூடிச் சில காலம் வாழ்வதாகவும் அமைத்துக் காட்டுகின்றனர். |
கற்பு வாழ்க்கையின் முதல் கூறு மகிழ்வாகவும் அடுத்து வருவது ஊடலாகவும் அமைவதைத் தொடக்கத்தில் கண்டோம். மகிழ்ச்சி மாறி ஊடல் பிறப்பதற்கு இவ்வகைப் பரத்தையிற் பிரிவும் ஒரு முதன்மைக் காரணமாக அமைகிறது. |
பரத்தையிற் பிரிவென்பது தலைவியைப் பிரிந்து பொதுமகளிராகிய பரத்தையர் வாழும் பகுதிக்குச் சென்று அங்குள்ள ஒரு பெண்ணோடு சில காலம் மகிழ்ந்து வாழ்ந்து மீண்டும் தலைவன் திரும்பி வருவதைப் பற்றியது. இப்பரத்தையிற் பிரிவு நான்கு வகைகளை உடையது. அவையாவன : |
|
தலைவியைப் பிரிந்து பரத்தையிடம் சென்று தங்கிய தலைமகன் திரும்பி வருகிறான். அப்போது தலைவி ஊடல் கொள்கிறாள். தனக்கு வாயிலாக (தூதுவராக) இருந்து தலைவியோடு இருக்கும் முரண்பாட்டை நீக்கி உடன்பாட்டை ஏற்படுத்துமாறு தோழியிடம் வேண்டுதல். |
|
தலைமகன் பாணன் முதலானவர்களை, சமாதானத் தூதுவர்களாக (வாயிலாக) அனுப்ப, தலைவி அவர்களின் முயற்சியை ஏற்காமல் மறுத்துத் திருப்பி அனுப்புதல். |
வாயிலாகச் செயல்படும் பலர், தங்களது சமாதான முயற்சிகள் தொடக்கத்தில் தோல்வியுற்றாலும், தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு தலைவியைச் சம்மதிக்கச் செய்து, தலைவனை ஏற்றுக்கொள்ளும்படிச் செய்தல். |
தலைவி பலரது சமாதான முயற்சிகளை முதலில் மறுத்தாலும் பின்னர் ஏற்றுக்கொள்வாள். அதன்பின் தலைவன் மீண்டும் அவளுடன் சேர்ந்து கொள்வான். அதற்கு வாய்ப்பாக, தலைவி வழங்கிய உடன்பாட்டை (சம்மதத்தை) வாயில் நேர்தல் என்பர். |
பரத்தையிற் பிரிந்த தலைவன் மீண்டு வந்து வாயில்கள் மூலமாக, தலைவியுடன் சேர்ந்து வாழ்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வான். அப்போது வாயில் என்ற நிலையில் செயலாற்றும் பலர் தலைவியின் ஊடலை (கோபத்தை)த் தீர்ப்பதற்காக முயற்சி மேற்கொள்வர். பல உண்மைகளை உணர்த்துவர். அவ்வாறு உணர்த்த உணரும் ஊடலுக்கான கிளவிகள் பல உள்ளன. அவையாவன : |
(1) ‘தலைவன் பிரிந்து சென்றதற்குக் காரணம் இது’ என்று கண்டோர் கூறுதல். |
(2) தலைவன் பிரிந்த பிறகு தனித்திருந்த தலைவி, துன்ப மிகுதியால் அழுது வருந்துதல். |
(3) தலைவியைச் சந்தித்த தோழி ‘நீ அழுது கொண்டிருந்ததற்குக் காரணம் என்ன?’ என்று வினவுதல். |
(4) தலைவன் தன்னைப் பிரிந்து பரத்தையிடத்தில் சென்று தங்கினான் என்று தலைவி தோழியிடம் கூறுதல். |
(5) இவ்வாறு கூறுதல் முறையன்று என்று தோழி தலைவியிடம் கூறுதல். |
(6) தலைவி, தோழியைச் செவ்வணி (சிவந்த ஆடை முதலியன) அலங்காரம் செய்து தலைவன் இருக்கும் இடத்திற்கு அனுப்பியதைக் கண்டு அயல் மனையார் மனமிரங்கிப் பேசுதல். |
(7) செவ்வணி அலங்காரத்தோடு பரத்தையர் சேரிக்குச் சென்ற தோழியைப் பார்த்த பரத்தையர் அவளைப் பழித்துக் கூறுதல். |
(8) பரத்தையர் சேரியில் இருந்து தலைவன் திரும்பி வருவதைக் கண்ட தாதிகள் அச்செய்தியைத் தோழியிடம் கூறுதல். |
(9) அதைக்கேட்ட தோழி தலைவன் மீண்டு வரும் அச்செய்தியைத் தலைவியிடம் சென்று சொல்லுதல். |
(10) தலைவி, தலைவனை எதிர் சென்று வரவேற்றுப் பணிதல். |
(11) தலைவனும் தலைவியும் இல்லற இன்பத்தில் மகிழ்ந்திருத்தல். |
மேற்காணும் கிளவித் தொகைகள் பதினொன்றும் உணர்த்த உணரும் ஊடலுக்குரியவை. |
பரத்தையிற் பிரிந்த தலைவன் மீண்டு வந்து வாயில்கள் மூலமாகத் தலைவியுடன் சேர்ந்து வாழ்வதற்கான முயற்சிகளை மேற்கொள்வான். அப்போது வாயில் என்ற நிலையில் செயலாற்றும் பலர் தலைவியின் ஊடலை (கோபத்தை)த் தீர்ப்பதற்காக முயற்சி மேற்கொள்வர். பல உண்மைகளை உணர்த்துவர். அவ்வாறு உணர்த்தியும் உணராமல் தலைவி மறுத்துரைக்கும் போக்கும் உண்டு. அவற்றை உணர்த்த உணரா ஊடலுக்கான கிளவிகள் என்பர். (இவ்வகைப் பட்ட தலைவியின் செயல்பாடுகளுக்கும் முடிவாக ஊடல் நீங்கி ஒன்று சேரும் நிலையே அமைகிறது.) |
உணர்த்த உணரா ஊடற்குரிய கிளவிகள் 19 ஆகும். அவற்றுள் குறிப்பிடத்தக்கவற்றைக் காண்போம். |
(1) தலைவி வெள்ளணி (வெண்மையான ஆடை முதலியன) என்னும் முறையில் தோழியை அலங்கரித்துத் தலைவன் இருக்கும் இடத்திற்கு அனுப்பிவைப்பாள். அப்போது தோழியிடம் தலைவன் தலைவியின் ஊடலைத் தீர்த்து வைக்குமாறு வேண்டுதல். |
(2) தோழி, ‘தலைவி புதல்வனைப் பெற்று உரிய (நெய்யாடுதல் - எண்ணெய் தேய்த்துக் குளித்தல் முதலான) சடங்குகளை முடித்து நிற்கிறாள்’ என்று தலைவனிடம் கூறுதல். |
(3) தலைவி புதல்வனைப் பெற்று மகிழ்ந்திருக்கும் செய்தியைக் கேட்ட தலைவன் தன் மன மகிழ்ச்சியைத் தோழியிடம் வெளிப்படுத்துதல். |
(4) ‘புதல்வன் பிறந்த செய்தி கேட்டதும் இது நாள் வரை வராத தலைவன் இரவில் நம் மனையில் வந்து நின்றார்’ என்ற செய்தியைத் தோழி தலைவியிடம் கூறுதல். |
(5) தலைவன் வந்து நிற்கும் உண்மையை உணர்ந்த தலைவி தலைவனிடம் ஊடல் கொண்டு பேசுதல் முதலியன. |
(6) பாணன், விறலி முதலானவர்களின் ஊடல் தீர்க்கும் பணியை மறுத்த தலைவி விருந்தோடு தலைவன் வந்தபோது தன் கோபத்தை மறைத்துக்கொண்டு வரவேற்றல் ; அதைக் கண்டு தலைவன் மகிழ்தல். |
(7) விருந்தினர்கள் வந்ததால் மறைத்துக்கொண்ட ஊடலை (பிணக்கை), அவர்கள் சென்றபின் மீண்டும் தலைவி வெளிப்படுத்தல். அது கண்டு அஞ்சிய தலைவன், தான் செய்த பிழையைப் பொறுத்தல் வேண்டும் எனக் கூறி, அவள் பாதங்களில் விழுந்து வணங்குதல். |
(8) தன் பாதங்களில் விழுந்து வணங்கிய தலைவனின் செயலைக் கண்ட தலைவி, 'இதை எம் தங்கையர் (பரத்தையர்) கண்டால் நன்று' என்று பழித்துப் பேசுதல். |
(9) தலைவனோடு தொடர்புடைய காமக்கிழத்தியைத் தெருவில் தான் கண்டதாகத் தலைவி தலைவனிடம் கூறுதல். |
(10) ஆடவர் தவறு செய்தலும் அதைப் பெண்கள் பொறுத்துக் கொள்ளுதலும் உலகியற்கை என்று உதாரணம் கூறித் தலைவியின் கோபத்தைத் தோழி தணித்தல். |
(11) தேரில் பரத்தையர் சேரிக்குச் சென்ற தலைவன், குறுக்கே வந்த தன் புதல்வனைத் தழுவியெடுத்துக்கொண்டு ஆற்றாமையுடன் தலைவியின் இருப்பிடத்திற்கு வர அப்போது தலைவி எதிர்கொண்டு வந்து அவனை ஏற்றுக்கொள்ளுதல். |
(12) தலைவனைத் தமது இல்லத்திற்குத் தேருடன் தடுத்து அழைத்து வந்த புதல்வனின் இனிய செயல்பாட்டைத் தலைவி தோழியிடம் புகழ்ந்து கூறுதல். |
(13) 'கணவனை விட நெருங்கிய சுற்றம் இல்லை என்று பெரியோர் கூறிய சிறப்பை இன்று கண்டேன்' என்று தலைவி தலைவனைப் புகழ்ந்து கூறுதல். |
(14) தொடக்கத்திலும் தொடர்ந்தும் உடன்படாமல் ஊடல் கொண்டு முரண்பட்டாலும் முடிவில் தலைவனை ஏற்று அவன் பெருமையை உணர்ந்த தலைவியை, ‘கற்பிலக்கணம் அனைத்தும் ஓர் உருவாகப் பெற்ற பெருமைக்குரியவள்’ என்று தோழி புகழ்தல். |
இவையாவும் உணர்த்த உணரா ஊடற்குரிய கிளவிகளாகத் தொகுத்துரைக்கப்பட்டன. இவற்றில் உணர்த்த உணராத தன்மை வெளிப்படும் கிளவிகளும் (கூற்றுகளும்) உண்டு. அதே சமயம் தலைவி உணர்ந்து ஊடலை மறந்து ஒன்று சேர்ந்த கிளவிகளும் உண்டு. இவ்வாறு இரு நிலைப்பாடுகளும் இணைந்து கலந்ததாக இக்கிளவித்தொகை அமைந்துள்ளது. |
1. |
கற்பின் இலக்கணத்தை விவரிக்க. |
விடை |
2. |
நாற்கவிராச நம்பி குறிப்பிடும் கற்பிற்குரிய கிளவித்தொகைகள் எத்தனை? யாவை? |
விடை |
3. |
இல்வாழ்க்கையின் கூறுகள் யாவை? |
விடை |
4. |
தலைவி மகிழ்ச்சி - விளக்கம் தருக. |
விடை |
5. |
பரத்தையிற் பிரிவின் வகைகள் எத்தனை? யாவை? |
விடை |
6. | உணர்த்த உணரும் ஊடற்குரிய கிளவிகளை எழுதுக. |
விடை |