1.4 தும்பைப் போரின் தனியியல்பு

வெட்சி முதலான மற்ற போர்களைவிடத் தும்பைப் போர் கடுமையானது என்பதால் வீரர்கள் இறந்துபடுதல் என்பது மிகுதியாக இருக்கும். போர்க்களத்தில் இறந்த வீரர்களுக்குச் சடங்குகூடச் செய்தல் இயலாது. போரில் போர் செய்யும் அரசர்கள் இருவருமேகூட இறந்துபட நேரலாம். பாண்பாட்டு, இருவரும் தபுநிலை என்னும் இரண்டு துறைகளும் இத்தகைய தனியியல்பை விளக்குகின்றன.

1.4.1 பாண்பாட்டு

பாணர் பாடும் பாடல் என்பது இதன் பொருள். போர்க்களத்திற்குப் படைகளுடன் பாணரும் செல்வர். அப்பாணர்கள் இறந்துபட்ட வீரர்களுக்குச் சாப்பண் பாடி இறுதிக்கடன் செய்யும் உரிமை படைத்தவர்கள். உறவினர்கள் வந்து இறுதிக் கடன் செய்ய இயலாது என்பதால் இத்தகைய ஏற்பாடு உருவாகியிருக்கலாம். பாண்பாட்டுத் துறை இதை விளக்குகிறது.

வெண்கோட்ட களிறுஎறிந்து செங்களத்து வீழ்ந்தார்க்குக்
கைவல்யாழ்ப் பாணர் கடனிறுத் தன்று.         - (கொளு-11)

‘குருதியால் சிவந்த போர்க்களத்தில் பகைவரது யானைகளைக் கொன்ற பின்னர், இறந்த வீரர்களுக்கு யாழிசை வல்ல பாணர்கள் உரிமை செய்தது’ என்பது இதன் பொருள்.

இதற்கான வெண்பா, பாணர் கடன் செய்யும் முறையை எடுத்துக் காட்டுகிறது.

. . . . . . . . . . . . . . . . . .
களரிக் கனல்முழங்க மூட்டி - விளரிப்பண்
கண்ணினார் பாணர் களிறெறிந்து வீழ்ந்தார்க்கு

என்னும் அடிகளில் நெருப்பு மூட்டி, விளரிப்பண் பாடிக் கடன்செய்வது காட்டப்படுகிறது. பாணர் பாடிக் கடன் செய்வதால் பாண்பாட்டு எனப்படுகிறது. இத்துறை புறப்பொருள் வெண்பாமாலை ஆசிரியரால் புதிதாகக் கூறப்பட்டதாகும்.

1.4.2 இருவரும் தபு நிலை

‘இருவரும் இறந்து போதல்’ என்பது இதன் பொருள். தும்பைப் போரில் ஈடுபட்ட இரு வேந்தரும் படையினரும் போரில் இறந்து போதலைக் குறிப்பது இருவரும் தபுநிலை என்னும் துறை.

பொருபடை களத்தவிய
இருவேந்தரும் இகல்அவிந்தன்று            - (கொளு-12)

இருதிறத்துப் படையும் போரிட்டு மடிந்தமையால் ‘தும்பை அரசர் இருவரும் போரிட்டு மடிதல், இரு அரசரும் போரிட்டு மடிந்த பின்னர், இரு படையினரும் போரிட்டு மடிதல்’ என இருவகையாக இதைக் கொள்ளலாம். இத்துறைக்குரிய வெண்பா, இரண்டாம் கருத்தையே கூறுகிறது.

வேந்தர் இருவரும் விண்படர. . .
. . . . . . . . . . . . . . . . . . . .
இருபடையும் நீங்கா இகல்.

என்கிறது வெண்பா.

 
தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1.
தும்பைப் போர் எதைப் பொருளாகக் கொண்டு நிகழ்த்தப்படுகிறது?
2.
தும்பைப் போர்ச் சூழலைக் காட்டும் துறைகள் பற்றிக் குறிப்பிடுக.
3.
தானை மறம் என்னும் துறை எதைக் காட்டுகிறது?
4.
தொல்காப்பியர் ‘தேர் மறம்’ என்னும் துறையை ஏன் சுட்டவில்லை?
5.
பாண்பாட்டு என்னும் துறையை விளக்குக.