ஒரு காலத்தில் பௌத்த சமயம் வளம் பெற்று வாழ்ந்ததற்கான சான்றுகள் பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன. இனி அவற்றைச் சான்றுகளுடன் காணலாம்.

பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களைச் சங்ககால நூல்கள் என வழங்குகிறோம். அவற்றுள் பௌத்த சமயம் பற்றிய குறிப்புகளைப் பார்க்கலாம்.

    

5.2.1 மதுரைக்காஞ்சி

பழந்தமிழ் நூல்களில் தலைசிறந்து விளங்கும் பத்துப்பாட்டில் ஒன்று மதுரைக்காஞ்சி என்னும் நூலாகும். இது மாங்குடி மருதனார் என்ற நல்லிசைப் புலவரால் பாடப்பெற்றது. இது பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மீது பாடிய பாடலாகும்.

பழங்காலத் தமிழகத்தில் தமிழ்வேந்தர் ஆட்சியின் கீழ் தமிழ் மக்கள் வாழ்ந்த வாழ்க்கையின் சிறப்பினை அறியச் சிறந்த சான்றாகத் திகழ்வனவற்றுள் இம்மதுரைக் காஞ்சியும் ஒன்றாகும். மேற்கூறிய பாண்டியனின் ஆட்சியில் அமைந்த மதுரை நகரின் அழகும் மக்களின் பழக்க வழக்கங்களும் விரிவாகப் பேசப்படுகின்றன. மக்கள் பின்பற்றிய பல்வேறு சமயங்களின் சிறப்பும் புலவரால் பெரிதும் விளக்கமாகக் கூறப்படுகின்றது. அவ்வாறு குறிப்பிடப்படும் பல சமயங்களுள் பௌத்த சமயமும் சிறந்த இடத்தைப் பெறுகிறது.

பௌத்தப் பள்ளியின் வருணனை

மதுரை நகரின் சிறப்பையும் மன்னனின் பல்வேறுபட்ட சிறப்புகளையும் விரிவாகக் கூறிச் செல்லும் மாங்குடி மருதனார் சிவனுக்கும், மாயோன், முருகன் ஆகிய தெய்வங்களுக்கும் பூசைப் பொருள் தரும் பொருட்டு மாலைநேரத்தே முழங்கும் இசைக் கருவிகள் பற்றிக் குறிப்பிடுகிறார். அதன்பின் மதுரை மாநகரத்திலுள்ள ஏனைய பிற சமயங்களையும் விளக்கிச் செல்கிறார். அப்போது பௌத்தப் பள்ளியைப் பற்றியும் குறிப்பிடுகிறார். அக்குறிப்பு என்ன என்பதைப் பார்ப்போமா?

அழகிய ஒளிபொருந்திய ஆபரணங்களை அணிந்துள்ளனர் சிறுபிள்ளைகள். திருவிழாக் கூட்டத்தில் சிறுபிள்ளைகள் தங்களை விட்டுப் பிரிந்து போகாமல் இருக்கத் தாய்மார் தம் கைகளால் அவர்களை அணைத்துப் பாதுகாப்பாக அழைத்துச் செல்கின்றனர். அவர்கள் மீது கொண்ட விருப்பத்தாலும் அன்பாலும் அவ்வப்போது அவர்களைத் தம் உடலோடு அரவணைத்துக் கொள்கின்றனர். சிறுவர்களின் சிறிய கைகளைத் தம் கையால் பிடித்திருப்பதைப் புலவர், தாமரை மலர் தாமரை மொட்டினைத் தாங்கியிருப்பதுபோல் இருக்கிறது எனக் கூறுகிறார். எத்தகைய இனிய காட்சி! அழகு விளங்கப் பெண்கள் பலரும் பூசைக்கு வேண்டிய மலர், புகை முதலியவற்றோடு புத்தரை வழிபாடு செய்து, வாயால் புகழ்ந்து பாடுவதால் பௌத்தப்பள்ளி சிறந்து விளங்குகிறது என்பார். இக்கருத்தைக் கூறும் பாடலடிகளைக் காண்போமா?

திண்கதிர் மதாணி யொண்குறு மாக்களை
ஓம்பினர்த் தழீஇத் தாம்புணர்ந்து முயங்கி
தாதணி தாமரைப்போது பிடித் தாங்குத்
தாமும் அவரும் ஓராங்கு விளங்கக்
காமர் கவனிய பேரிளம் பெண்டிர்
பூவினம் கையினர் தொழுவனர் பழிச்சிச்
சிறந்து புறங்காக்குங் கடவுட் பள்ளியும்
(மதுரைக்காஞ்சி: 461-467)

(மதாணி = குழந்தைகள் அணியும் ஆபரணம், பதக்கம்; குறுமாக்கள் = சிறுவர்; முயங்கி =  கட்டியணைத்து; தாதணி =  மகரந்தம் (தாது) சேர்ந்த; போது = மொட்டு;  காமர் = விருப்பம்; கவினிய = அழகிய; பழிச்சி = போற்றி; கடவுட்பள்ளி = பௌத்தப் பள்ளி)

பௌத்த சமயப் பெண்கள்  எத்துணை மகிழ்ச்சியோடும் மனநிறைவோடும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு புத்தரின் ஆலயத்திற்குச் சென்று வழிபடுகிறார்கள் என்பதை இவ்வரிகள் நமக்குக் காட்டுகின்றன. மேற்கூறிய காட்சியைக் கற்பனை செய்து பார்ப்பின், பௌத்த சமயத்தைத் தழுவிய மக்கள் எத்தகைய இயல்பான அமைதியான வாழ்க்கையை  வாழ்ந்தார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். பழந்தமிழ்நாட்டில் பௌத்த சமயம் பரவியிருந்தமையும் சமயம் காரணமாக ஒருவரோடு ஒருவர் வேற்றுமையின்றி மக்கள் வாழ்ந்ததையும் இவ்வரிகள் நமக்கு விளக்குகின்றன அல்லவா?

5.2.2 எட்டுத்தொகை நூல்கள்

எட்டுத் தொகை நூல்கள் சங்க நூல்களின் ஒரு தொகுதியாகும். இத்தொகுதியில் நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, அகநானூறு ஆகியவற்றில் சீத்தலைச் சாத்தனார் என்பாரின் பாடல்களும் நற்றிணையில் இளம்போதியார் என்பாரின் பாடலும் (72-ஆம் பாடல்) இடம்பெற்றுள்ளன.

போதி என்பது அரசமரத்தைக் குறிக்கிறது. அரசமரம் பௌத்த சமயத்தில் புனிதமானதாகக் கருதப்படுகிறது. ஏனென்றால் புத்தர் போதிமரத்தின் கீழ் அமர்ந்து பல ஆண்டுகள் தவம் செய்து ஞானம் பெற்றதால் பௌத்த சமயத்தவர் அரசமரத்தைப் புனிதமாகக் கருதிப் போற்றினர். அதனால் புத்தர் போதியார் என்று வழங்கப்பட்டார். அந்தப் பெயரைத் தாங்கியிருப்பதால் இளம்போதியார் பௌத்தராக இருக்கலாமென்று தோன்றுகிறது.

சீத்தலைச் சாத்தனார் மணிமேகலை என்னும் பௌத்த சமயக் காப்பியத்தைப் படைத்த பெரும்புலவர்.  பௌத்த சமயத்தைச் சார்ந்தவர். தொகை நூல்களில் மேற்கூறிய இரு புலவர்களின் பாடல்கள் இடம் பெற்றிருப்பதால் பௌத்த சமயத்தைச் சார்ந்தவர்கள் அத்தொகை நூல்கள் தொகுக்கப்படுவதற்கு முன் தமிழகத்தில் வாழ்ந்திருக்க வேண்டும் என்பதையும் பௌத்த சமயக் கருத்துகள் மக்களிடையே பரவியிருந்திருக்க வேண்டுமென்பதையும் அறிந்து கொள்ளலாம்.

தன்மதிப்பீடு : வினாக்கள் - I

1.

பௌத்த சமயம் யார் காலத்தில் தமிழகத்தில் கால்கொண்டது?

விடை
2.

தொகைநூல்கள் தொகுக்கும் முன்னரே பௌத்தம் தமிழகத்தில் வேரூன்றியிருந்தது என்பதற்கான சான்று ஒன்றினைக் குறிப்பிடவும்.

விடை
3.

பௌத்தத் துறவிகள் மக்களுக்கு எவ்வகையில் தொண்டாற்றினர்?

விடை
4.

இலங்கையில் பௌத்தம் பரவக் காரணமாக இருந்தவர் யார்?

விடை
5. பௌத்த சமயத்தின் பெரும் பிரிவுகள் யாவை?

 

விடை