|
3.3 அகிலனின்
சிறுகதைகளில் கருப்பொருள்
இப்பகுதியில் படைப்பாளர்
அகிலன் குறித்த செய்திகளையும்
அவருடைய கதைகளின் கருப்பொருள் தன்மையையும், ‘புயல்’
சிறுகதையில் கருப்பொருள் குறித்த விரிவான விளக்கத்தையும்
காண்போம்.
படைப்பாளர் வரலாறு
படைப்பாளர் அகிலன்
அவர்கள் 1922ஆம் ஆண்டு பிறந்தார். இவர் தம்முடைய மாணவப் பருவத்திலிருந்தே
எழுதத்
தொடங்கியவர். 1938இல் இருந்து 1988 வரை தொடர்ந்து ஐம்பது
ஆண்டுகளாக எழுதி வந்தவர். தமிழுக்கு முதன் முதலில் பாரதீய
ஞானபீடப் பரிசை இவரது சித்திரப் பாவை
என்ற சமூக நாவல்
பெற்றுத்தந்தது. கலைமகள் இதழ் நாவல்
போட்டியைத் தொடங்கிய
முதல் ஆண்டிலேயே (1946இல்) இவருடைய 'பெண்' என்ற நாவல்
பரிசு பெற்றது. இந்நாவல் தமிழில் பல பதிப்புகளைக் கொண்டதோடு,
இந்தி, வங்காளம், கன்னடம், மலையாளம் போன்ற பல
மொழிகளிலும் பெயர்க்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது.
இவரது சிறந்த
படைப்புகள் சில, பரிசுகள் பல பெற்றுள்ளன.
நெஞ்சின் அலைகள், வேங்கையின் மைந்தன், கண்ணான கண்ணன்,
கயல்விழி, எங்கே போகிறோம், பாவைவிளக்கு ஆகியவை
குறிப்பிடத்தக்கன. பாவை விளக்கு போன்ற இவரது படைப்புகள் பல
திரைப்படங்களாகவும், மேடை நாடகங்களாகவும், சின்னத்திரை
மற்றும் வானொலி நாடகங்களாகவும் வெளிவந்து புகழ்பெற்றுள்ளன.
இவரது பங்களிப்பு
1974ஆம் ஆண்டில்
மதுரைப் பல்கலைக் கழகம் இவரது
நூல்களையும், படைப்புகளையும் ஆராய நான்கு நாள் கருத்தரங்கு
நடத்தியது. இவரது படைப்புகளில் முனைவர் பட்டத்திற்கான
ஆய்வுகள் பல மேற்கொள்ளப்பட்டன. இவர் தமிழ் இலக்கிய
மாநாடுகளிலும், எழுத்தாளர் சங்கங்களிலும் பங்கேற்றுள்ளார். 1966லிருந்து இந்திய வானொலியில்
சொற்பொழிவுத்துறை
அமைப்பாளராகவும், பின்
தென்னிந்திய முதன்மை
அமைப்பாளராகவும் பணியாற்றினார்.
இவரது கருத்து
வாசகர்களுக்கு எது
பிடிக்குமோ அதை எழுதுவது எழுத்துப்
பணியாகாது; எது பிடிக்க வேண்டும் என்று ஆசிரியர்
நினைக்கின்றாரோ, எதை வெளியிட வேண்டுமென்று அவரது
உள்ளம் துடிக்கிறதோ, அதை வாசகர்களுக்குப் பிடிக்கும் முறையில்
எழுத வேண்டும் என்பது இவரது கருத்தாகிச் சிறப்புப் பெறுகிறது.
இவரது இலக்கியக் கொள்கை
தமக்கு எது உண்மையென்று
தோன்றுகிறதோ, எது நன்மை என்று படுகிறதோ, அதை
யாருக்கும் அஞ்சாமல் கலைத்தன்மையோடு வெளியிட வேண்டுமென்பது
இவருடைய இலக்கியக் கொள்கையாகிறது.
இவர் 1988 ஜனவரி 31ஆம் தேதியில் அமரர் ஆனார். இனி இவரது படைப்புகளுக்கான
பிறப்பிடம், கருப்பொருள்கள் ஆகியவற்றைக் காண்போம்.
இவரது படைப்புகளுக்கான
பிறப்பிடம்
வாழ்க்கை அனுபவங்களும்,
கற்பனை அனுபவங்களும்,
எழுத்தாற்றலும் சேர்ந்ததே
படைப்பிலக்கியமாகிறது.
இலக்கியவாதியான படைப்பாளனுக்குக் கற்பனை ஆற்றல் என்பது
அனுபவங்களிலிருந்தே பிறக்கிறது. படைப்பாளனின் சொந்த
வாழ்க்கை அனுபவம் அவன் எழுத்திற்கான மூல வித்தாக
அமைகிறது. படைப்பாளனின் குடும்ப வாழ்க்கை, பிறப்பு, வளர்ப்பு,
உற்றம், சுற்றம், சமூகம், அரசியல், பொருளாதாரம், கலாச்சாரம்
ஆகியவை அனைத்தும் அவனுடைய அக, புற வாழ்விற்கான
அனுபவங்களாகின்றன. வாழ்க்கையும் இலக்கியமும் ஒன்றிலிருந்து
ஒன்று பிரிக்க முடியாதவை. வாழ்க்கை, இலக்கியப் படைப்பாளனைப்
பாதிக்கிறது. அதேபோல் வாழ்க்கையை இலக்கியப் படைப்பாளனும்
பாதிக்கிறான். வாழ்க்கையே படைப்பாளனுக்கு மூலப்பொருளாய்
அமைகிறது. அதைக்கொண்டு புதியது ஒன்றைப் படைத்து அதை
அவன் அந்த வாழ்க்கைக்கே திருப்பித் தருகிறான்.

இதிலிருந்து தனிமனித
வாழ்க்கை அனுபவங்களும், சமூக வாழ்க்கை அனுபவங்களுமே இவரது கதைகளின் பிறப்பிடமாய்
அமைந்துள்ளதை அறிய முடிகிறது.
கருப்பொருள்
அகிலனின் தொடக்க
காலக் கதைகள் முதல் இறுதிக் காலக் கதைகள் வரை குடும்பம் சார்ந்த நிகழ்வுகளும்,
சமூகச் சிக்கல்களுமே முக்கிய இடத்தைப் பெற்று வருகின்றன. இவையே அவருடைய கதைகளில்
கருப்பொருளாகவும் அமைகின்றன. இதனடிப்படையில் அகிலனின் சிறுகதைகளை இரண்டு
வகைகளாகப் பிரிக்கலாம். 1) குடும்பம் சார்ந்த கதைகள் 2) சமூகம் சார்ந்த கதைகள்.
வாழ்க்கைப் பிரச்சனைகள், அவற்றுக்கான தீர்வுகள் இவையே
அவருடைய கதைகளில் மையத் தன்மை பெற்றுக் கருப்பொருளாகின்றன.
பிரச்சனைகளும், போராட்டங்களுமே மனிதனை உருவாக்கும்
என்பது இதன் வழி அறியப்படும் கருத்தாகிறது.
குடும்பக் கதைகள்
அகிலனின் குடும்பம்
சார்ந்த கதைகளில் அதன் சிக்கல்களும்,
நிகழ்வுகளுமே கருப்பொருள்களாகின்றன. குடும்பச் சூழல்களாக
இலட்சிய வாழ்க்கை, அன்பு வாழ்க்கை, உறவுநிலைச் சிக்கல், காதல்,
வறுமை, பொருளாதாரக் கவலைகள், போராட்டங்கள், பூசைகள்,
மந்திரங்கள், தந்திரங்கள் ஆகியவை காட்டப்படுகின்றன. இவையே
கதைப் பொருளாகவும், கருப்பொருளாகவும் வெளிப்பட்டு
வாழ்க்கைப் பாடங்களாகின்றன. அடிமைத்தனம் வெறுக்கப்பட்டு, மனிதநேயம் பேணும் உத்தமர் வாழ்க்கையும் கருப்பொருளாகிறது.
பயன் விளைவிக்கும் கருப்பொருள்கள் இவரது குடும்ப
வாழ்க்கைக் கதைகளுக்கு உரியனவாகின்றன.
சமூகக் கதைகள்
இவரது சமூகம் சார்ந்த
கதைகள் சமூகப் பிரச்சனைகளை அலசி ஆராயுமளவிலான கருப்பொருள்களைக் கொண்டுள்ளன.
சமூக
அவலங்களாலும், பொருளாதார இடர்ப்பாடுகளினாலும் சமூகம்
பாதிக்கப்படுவதைக் கண்டு படைப்பாளர் பொங்கியெழுவதைக்
காணமுடிகிறது. இவரது படைப்புகளில் சாதி வேற்றுமை, சமூக
உயர்வு தாழ்வு, அரசியல்
புரட்சிகள் ஆகியவை
கருப்பொருள்களாக உருப்பெற்றுள்ளன. நாட்டுப்பற்று, விடுதலைப்
போராட்டம் இவையனைத்துமே இவரது கதைகளில் சமயப்பற்றாக
வெளிப்பட்டுள்ளன. இவரது சமூகக் கதைகள் அனைத்தும்
சமூகப்பயன் விளைவிக்கும் வகையில் அமைந்திருப்பதைக் காண
முடிகிறது.
அகிலனின் சிறுகதைகளுள்
ஒன்றான 'புயல்' சிறுகதை இப்பகுதியில்
இடம்பெற்றுள்ளது. இக்கதையின் கதைப்பொருள், இப்பாடத்தில் விளக்கம் பெறுகிறது.
3.3.1
‘புயல்’ சிறுகதையின் கதைப்பொருள்
மனித
நேயமிக்க ஒரு சிறுவனின் மனநிலையானது இச்சிறுகதையில் வெளிப்பட்டுள்ளது. கடலோரமாக
இருந்த அந்தக் கிராமம் புயலால் கடுமையான தாக்குதலுக்கு ஆளாகிக் கொண்டிருந்தது.
அங்கிருந்த குடிசைகள் எல்லாவற்றையும் கடல் விழுங்கிக்
கொண்டிருந்தது. ஊருக்கு
மத்தியிலிருந்த மாடிவீட்டிலிருந்து பெரிய மனிதர் அவர் மனைவி, அவர் பையன்
மூவரும் அக்காட்சியை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தனர். பையன் திறந்த கண்களை
இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். நூற்றுக்கு மேற்பட்ட குடிசைகள் இருந்த
இடம் தெரியாமல் போனதைப் பார்த்து, கண்களில் தேங்கும் கண்ணீரை யாரும் அறியாமல்
துடைத்துக் கொண்டான். அப்பொழுது பெரிய மனிதர் மனைவி பக்கம் திரும்பி, 'மனிதப்
பட்டாளமே
ஊருக்குள் ஓடி வருகிறது' என்றார். 'ஊருக்குள் ஓடி வராம கடலுக்குள்ளேயா
போய் விழுவாங்க' என்றான் பையன். ‘அத்தனை பேருக்கும் இடம்
எங்கே போவது' என்றார் பெரியவர். 'மனம் இருந்தால் மார்க்கம்
இருக்கும்' என்றான் பையன்.
தகப்பனுக்கும், மகனுக்கும்
பேச்சு ஆரம்பமாவதைப் பார்த்து
அது பிடிக்காமல் தாயார் குறுக்கிட்டுச் சமாதானப்படுத்தினார்.
புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூட்டத்தின் ஒரு பகுதியினர்
அவர்களின் வீட்டின் முன் நின்றனர். 'அவர்களுக்கு ஹாலில் இடம்
தர வேண்டும்' என்று பையன் கேட்கிறான். அதற்கு அவன் அப்பா
மறுக்க, அம்மா சமாதானப்படுத்தும் நோக்கில், 'அவர்கள் அத்தனை
பேரும் திருட்டுக் கழுதைகள், அவர்களை வீட்டில் விட்டால் காவல்
காக்க முடியாது' என்கிறாள். அவர்கள் இருவரும் மறுப்புத்
தெரிவிப்பதைப் பார்த்துப் பையன் முகத்தைத் தொங்கப்போட்டுக்
கொண்டு இருந்துவிடுகிறான். பெரியவர், புயலினால் தங்களின்
சொத்து ஏதும் பாதிக்கப்படவில்லை என்று தாயிடம் பேசிக்
கொண்டிருப்பதைக் கேட்டு மேலும் வெறுப்படைகிறான்.
அன்றிரவு அவனுக்குத்
தூக்கம் வராமல் துக்கத்துடன் கண்ணை மூடிப் படுத்துக் கொண்டிருந்தான். தாயார்
அவனை
அழைத்தபோதும் பதில் பேசாமல் படுத்திருந்தான். பிறகு
பெற்றோர் தம் பையன் தூங்கிவிட்டதாக எண்ணி அவர்களுடைய
எண்ணங்களை வெளிப்படுத்துகின்றனர். பெரியவர், 'பையன் போற
போக்கைப் பார்த்தியா? நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில்
வைத்தாலும்' என்று தொடர, பையனுக்குச் சுரீர் என்றது. 'நமக்குன்னு
ஒரு குழந்தை பிறந்திருந்தா இப்படியெல்லாம் இருக்குமா?' என்றார்.
'ராத்திரி அவன் சாப்பிடறப்பச் சொன்னதைக் கேட்டியா' என்று
பெரியவர் கூற, பையன் அப்பொழுது அதைப்பற்றி எண்ணிப்
பார்க்கிறான். இழப்பினாலும், பசியினாலும் அழுது கொண்டிருக்கும்
அவர்களுக்குக் கஞ்சி காய்ச்சி ஊற்றச் சொல்ல, அவர்கள் இருவரும்
மறுத்து விட, அவன் சாப்பிடாமல் இருந்து விட்டான். தத்து
எடுத்துக்கொண்ட பெற்றோர்களிடமிருந்து அவனுக்கு எல்லாம்
கிடைத்தது, இரத்தத்தில் ஊறிய
அன்பைத் தவிர.
அவன், 'நம் தகப்பனாராக இருந்தால் இப்படி மனம்
இரங்காமல் இருப்பாரா?' 'நாயைக் குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்து
விட்டால் எல்லா நாய்களின் மீதும் இவருக்குப் பிரியம் என்று
அர்த்தமா?' என்று இப்படிப் பலவாறு எண்ணுகிறான்.
பையன் ராஜு, தான்
கதையெழுதிச் சம்பாதித்த பணம் பதினைந்து
ரூபாய் வைத்திருந்தான். பொழுது விடிந்ததும் ஊருக்குள் இருக்கும் கிராமத்தினரின்
நிலையை அறியச் சென்றான். நல்ல உள்ளம் படைத்த
சில பேர் அவர்களுக்குக் கஞ்சி காய்ச்சி ஊற்றிக் கொண்டிருந்தனர். தான்
வைத்திருக்கும் பதினைந்து ரூபாய் அவர்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற
நோக்கோடு குளிருக்கு உதவும் வகையில் மூன்று போர்வைகளை
வாங்குகிறான். கணவரை இழந்த மூன்று பெண்களுக்கு அதைக் கொடுக்கிறான்
அவர்கள், 'எங்கள் பிள்ளை குட்டிகளை எப்படி ஐயா காப்பாற்றுவோம்' என்று
அழுவதைப் பார்த்து அவனும் அழுத வண்ணம் அந்த இடத்தை
விட்டு நகர்கிறான்.
மூன்று நாள் கழித்து
அவன் ஊருக்குப் புறப்படும்போது அவன் தாயார் அவன் எடுத்துச்செல்லும் பொருட்டு
ஒரு போர்வையைக் கொடுக்கிறாள். அதைப் பார்த்தவுடன் அவனுக்குப் பொறிதட்ட, தாயாரிடம்,
'இது எப்போ வாங்கியது?' என்றான். அதற்கு அவள், 'முந்தா நாள் வாங்கினேன்.
கொள்ளை மலிவு, பேரம் பேசி மூன்று போர்வை ஐந்து ரூபாய்க்கு வாங்கினேன்' என்கிறாள்.
அதைக் கேட்டவுடன் ஈரம் நிறைந்த அந்த இளநெஞ்சில்
அப்பொழுதுதான் பயங்கரமான கோரப்புயல் ஆரம்பமாகிறது. 'அந்தப்
புயலுக்கு முன்னே சில தினங்களுக்கு முன்பு வீசிய புயல் அற்பச் சூறாவளி
போன்றது' என்பதோடு கதை நிறைவு செய்யப்பட்டுள்ளது.
அன்புள்ளம் கொண்ட
சிறுவனின் மனிதநேயம் எவ்வாறெல்லாம்
மற்றவர்களால் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுகிறது என்பது 'புயல்'
சிறுகதையின் கருப்பொருளாக அமைகின்றது.
கருப்பொருள்
- ஏழை எளியவர்களின் அவல வாழ்க்கை.
நாட்டில் இருக்கும் உயர்வு, தாழ்வுகள் சமூக
அவலங்களாக வெளிப்படுதல்.
- மனிதர்கள் மனித நேயமிக்கவர்களாக விளங்க வேண்டும்.
இவை சிறுகதை சுட்டும் கருப்பொருள்களாகின்றன.
3.3.2
'புயல்' சிறுகதையின் வாழ்க்கைப் பயன்
இலக்கியம்
தோன்றிய காலத்திலிருந்து இன்றுவரை தோன்றியுள்ள படைப்புகள் பலவும் அறத்தையும்,
நீதிக் கருத்துகளையும் வலியுறுத்தத் தவறவில்லை. சிறுகதைகளும் மனித வாழ்க்கைக்குப்
பயன்படும் வகையில் கருத்துகளை நேரடியாகவோ அல்லது
மறைமுகமாகவோ உரைக்கத் தவறவில்லை. 'புயல்' சிறுகதை
சிறந்த வாழ்க்கைப் பயனுக்கு உரியதாகவே கருத இடமளிக்கிறது.
'புயல்' சிறுகதையில்
பயனுடைய வாழ்க்கை வாழும் கதை
மாந்தர்களும், பயனில்லா வாழ்க்கை வாழும் கதைமாந்தர்களும்
காட்டப்படுகின்றனர். ராஜு வாழ்க்கைக்குப்
பயனுடைய
கதைப்பாத்திரம். அவனுடைய
தகப்பனார், தாயார்
பயனற்ற வாழ்க்கைக்கு உரிய கதைமாந்தர்கள் ஆகின்றனர்.
ராஜு
வாழ்க்கைப் பயன் என்பது
பிறருக்குப் பயன்பட வாழ்தல்.
இத்தகைய வாழ்க்கைக்குப் பொருத்தமானவனாக ராஜு
விளங்குகிறான். புயலால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு
உதவ வேண்டும் என்ற எண்ணம் மற்றும் அவனது
கருணை உள்ளம் அறத்தை அடிப்படையாகக் கொண்டது. தாய்,
தந்தையரை எவ்வளவு வற்புறுத்தியும்,
அவர்கள்
துன்பப்பட்டவர்களுக்கு உதவாத நிலையில் கோபம் கொள்ளாமல்,
தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று வேதனைப்படுவது,
அவன் நல்ல பண்பினைக் காட்டுகிறது. அந்த இளம் வயதிலேயே
தன் உழைப்பின் மூலம் பெற்ற பதினைந்து ரூபாய்க்குக் கூட அவன்
சொந்தக்காரனாய் இருக்க விரும்பாமல் அதைப் பிறருக்குச்
செலவிடுவதன் மூலம் அவன் வாழ்க்கை அர்த்தமுள்ளதாகிறது.
மற்றவர் துன்பத்தைத் தன் துன்பம்போல் கருதும் ராஜு பாத்திரம்
பிறருக்கு வழிகாட்டும் அளவில் பயனுள்ளதாகிறது. இதேபோல்
தனியொருவனுக்கு உணவில்லாத நிலையில் ராஜு படும்பாடு
அவனது பயனுள்ள வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாகிறது.
தாய், தந்தையர்
'பிறருக்குக் கொடுத்து
உதவுதலே பேரின்பம்' என்பதை
உணராதவர்களாய் இவர்கள் காட்டப்படுகின்றனர். பிறருக்கு உதவச்
சொல்லிக் கேட்கும் போது மகனை வெறுக்கும் தந்தையையும்,
அவருக்குத் துணைபோகும் தாயையும் காணமுடிகிறது. அளவற்ற
செல்வம் இருந்தும் மனிதநேயம் பேணப்படாத காரணத்தால்
பயனற்ற வாழ்க்கைக்கு உரியவர்களாகின்றனர். தானும் நன்றாக
அனுபவிக்காமல், பிறருக்கும் கொடுக்காமல் வீணே வாழும்
அர்த்தமற்ற வாழ்க்கைக்கு உரியவர்களாகின்றனர். சுயநலம்
மேலோங்கியிருக்கும் நிலையில் இவர்கள் பயனற்ற வாழ்க்கைக்கு
உதாரணமாகின்றனர். அளவற்ற செல்வத்தை அனுபவிக்கக்
குழந்தையில்லாத காரணத்தால் தத்தெடுத்துக் குழந்தையை
வளர்க்கும் நிலையிலும்கூட, வாழ்க்கையின் தத்துவத்தை
உணராதவர்களாய்ச் செயல்படுவது இவர்களது குறுகிய
மனப்போக்கைக் காட்டுவதாயுள்ளது. தத்தெடுத்த மகனைக்
கேவலமாய்ப் பேசுவது இவர்களது மனித நேயமற்ற செயலைக்
காட்டுகிறது. இங்ஙனம் இப்பாத்திரங்கள் போற்றுதலுக்கு இடமின்றி,
பயனற்ற வாழ்க்கைக்கு உரியவர்களாக அறியப்படுகின்றனர்.
இனி, அடுத்து வரும்
பகுதியில் இச்சிறுகதை காட்டும் சமூகப்
பயன்களைக் காண்போம்.
3.3.3
‘புயல்’ சிறுகதையின் சமூகப் பயன்
ஒவ்வொரு தனிமனிதனும்
மனிதப் பண்புகளைப் பெற்றுப் பயனுடைய வாழ்க்கை வாழ்வதன் மூலமே அவர்கள் வாழும்
சமூகம் பயனடைய முடியும். தனி மனிதர்கள் ஆற்றும் சமூகக் கடமைகளே சமூகத்தை
முன்னேற்ற உதவும். இச்சிறுகதையில் சமூகக் கடமையாற்றும் கதைப்பாத்திரமாக ராஜு
விளங்குகிறான். அவன் மூலம் பெறப்படும் சமூகப் பயன்களாகப்
பின்வருபவை அமைகின்றன.
புயலால் பாதிக்கப்பட்டு அந்தக் கிராம மக்களின் வாழ்க்கை
சீரழிந்து விட்டதை எண்ணிக் கண்ணீர் விடும் நிலையில் ராஜுவின் சமூக அக்கறை வெளிப்படுகிறது.
துன்பப்பட்டவர்களுக்கு இடமளித்து உதவ வேண்டும் என்ற
நிலையில் தந்தையிடம், 'மனமிருந்தால் மார்க்கம் உண்டு'
என்று கூறுவதன் மூலம் அவனது சமூக சேவை
மனப்பாங்கு வெளிப்படுகிறது.
நாம் உபயோகப்படுத்தாத கூடத்தை அவர்களுக்கு ஒதுக்கித்
தந்தால் என்ன? என்று கேட்பதன் மூலம் அவன் சமூக
நோக்கம் தெரிகிறது.
'கண்டவனுங்க எல்லாரையும் வீட்டுக்குள்ளே விடச்
சொல்லறயா?' என்று கேட்கும்
தந்தைக்கு,
'கோயிலுக்குள்ளே எல்லோரும் செல்வதில்லையா?' என்று
பதிலளிப்பதன் மூலம் 'கடவுள் வாழும் கோயிலை விட
மனிதன் வாழும் மாளிகை உயர்ந்ததா?' இல்லை என்பது
உணர்த்தப்பட்டு, அவனது சமூகச் சமதர்மச் சிந்தனை
அறியப்படுகிறது.
தாயும், தந்தையும் கிராமத்தினருக்குச் சிறு உதவி கூடச்
செய்ய மறுத்த நிலையிலும், அவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவிசெய்ய முடியுமா?
என்று மீண்டும் மீண்டும் செயல்படும் அளவில் அவனது சமூகக்கடமை வெளிப்படுகிறது.
குளிராலும், பசியாலும் நடுங்கிக் கொண்டிருக்கும் கிராம
மக்களுக்குக் கஞ்சி காய்ச்சி ஊற்றும்படி கேட்பது
சமூக மனப்பான்மையைக் காட்டுகிறது.
தன்னால் இயன்ற அளவு உதவியாவது கிராம மக்களுக்குச்
செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களுக்குப் போர்வை வாங்கித் தருவது
ராஜுவின் சமூக ஈடுபாட்டினைச் சுட்டுகிறது.
மூன்று விதவைப் பெண்களின் நிலையைப் பார்த்து அவன்
வருந்துவதும், அழுவதும் சமூக நேயத்தைக் காட்டுகின்றன.
விதவைப் பெண்களுக்குக் கொடுத்த போர்வையைத் தாய்
வாங்கிக் கொண்டு வந்ததை அறிந்த மாத்திரத்தில் அவன் உள்ளத்தில் புயல் வீசுவது
சமூகக் குறைபாடுகளைக்
களைய முனையும் முயற்சியாக விளங்குகிறது. இங்ஙனம், ராஜு
பாத்திரப்படைப்பின் மூலம்
சமூகப் பயன்கள் உரைக்கப்படுவதோடு, பிறர் துன்பத்தில்
பங்கெடுக்கும் நல்ல மனிதநேயப் பண்புகளை ஒவ்வொருவரும் வளர்த்துக் கொள்ள
வேண்டும் என்பதும் அறியப்படுகிறது.
மனிதநேய மாற்றங்கள்
எல்லாக் காலங்களிலும், எல்லாச்
சமூகங்களிலும் தடையின்றி நிகழ வேண்டும். அப்பொழுது தான்
சமூக முன்னேற்றத்திற்கு வழியேற்பட்டு நாடு நலம் பெற முடியும்.
தன்
மதிப்பீடு : வினாக்கள் - I |
1.
|
சிறுகதையின்
கருப்பொருள் எங்ஙனம்
அமைய
வேண்டும்? |
|
2.
|
'கேதாரியின் தாயார்' சிறுகதையின் கருப்பொருள்
யாது? |
|
3.
|
அகிலனின் ஞானபீடப் பரிசைப்பெற்ற
நாவல் எது? |
|
4.
|
'புயல்' சிறுகதை காட்டும் சமுதாயப் பயன் இரண்டு
கூறுக. |
|
|