2.3. தலைவியின் மனநிலை

E


    தலைவன் மீது மிகுந்த அன்பு உடையவள் தலைவி. அவனைச்
சந்திக்கும் பொழுதெல்லாம் மிகுந்த மகிழ்ச்சி அடைவாள். அவன்
தன்னை விட்டுப் பிரிந்து செல்லும் பொழுதெல்லாம், தனிமையில்
இருந்து அவனை நினைத்து வருந்துவாள். மிகவும் துன்பப்படுவாள்.
அவன் தன்னோடு இல்லாததை நினைத்து சில நேரங்களில்
அவனிடம் கோபமும் அடைவாள். ஆனால் நேரில் பார்க்கும்
போது அந்தக் கோபத்தை மறந்து மகிழ்வாள். இவ்வாறு,
பலவகையான மனநிலை உடையவள் தலைவி.


2.3.1 மறந்து மகிழும் மனம்


    தலைவனை நினைத்துக் கொண்டிருந்தாள் தலைவி. அவன்
வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தாள். குறித்த நேரத்தில்
அவன் வரவில்லை. அதனால் அவன் மீது கோபம் வருகிறது.
தலைவன் வரும் பொழுது அவன் மீது தன் கோபத்தைக்
காட்டலாம் என்று எண்ணுகிறாள். தலைவன் வந்து விடுகிறான்.
ஆனால் தலைவன் நேரில் வந்ததும், கோபம் ஏனோ மறைந்து
போய்விடுகிறது. தலைவனை மகிழ்ச்சியோடு வரவேற்கிறாள். அதைத்
தன் தோழியிடம் சொல்லுகிறாள்


ஊடற்கண் சென்றேன்மன் தோழி அது மறந்து
கூடற்கண் சென்றது என் நெஞ்சு



(குறள்: 1284)


‘தோழியே! என் தலைவன் மீதுள்ள கோபத்தால் அவனிடம்
ஊடுவதற்காக நான் சென்றேன். ஆனால் நேரில் பார்த்ததும் அவன்
மீதுள்ள அன்பால், என்னை அறியாமலே என் நெஞ்சம் ஊடலை
மறந்து அவனோடு கூடியது’ என்று கூறுகிறாள்.

    உண்மையான அன்புடைய தலைவியின் மனம் பிரிவைத் தாங்கிக்
கொள்ளாது. அதனால், துன்பமும் வரும், ஏன் இன்னும் வரவில்லை
என்ற கோபமும் வரும். ஆனால் நேரில் பார்த்ததும், பார்த்த
மகிழ்ச்சியில் எல்லாம் மறந்து விடும். இதற்குக் காரணம் என்ன?
தலைவன் மீது கொண்ட அன்பும் அவனைப் பிரிய முடியாத
தலைவியின் மன நிலையும்தான் என்பது புலப்படும்.


2.3.2 பழிகாணா மனம்


    தலைவனை நேரில் பார்த்ததும் அவன் மீதுள்ள கோபம் மட்டுமல்ல,
அவன் செய்த தவறுகளைக் கூட முற்றிலுமாக மறந்து விடுகிறாள்
தலைவி.

    தலைவன் தன்னோடு இல்லாதபோது, அவன் செய்த தவறுகளை
எல்லாம், நினைத்து நினைத்து வருந்திக் கொண்டிருந்தாள். அவன்
தன்னைப் பார்க்க வரும்போது, அவன் தவறுகளையெல்லாம் சுட்டிக்
காட்ட வேண்டும் என்று எண்ணியிருந்தாள். ஆனால், தலைவன்
நேரில் தன் முன்னால் வந்து நின்ற பொழுது, அவனைப் பார்த்த
மகிழ்ச்சியைத் தவிர வேறு எதுவும் அவள் நினைவில் இல்லை.
அவனது தவறுகள் அவளுக்குப் புலப்படவே இல்லை. அது எவ்வாறு
என்று தன் தோழியிடம் அவள் விளக்கும்பொழுது,


எழுதும்கால் கோல் காணாக் கண்ணேபோல் கொண்கன் பழி காணேன் கண்ட இடத்து



(குறள் : 1285)

(கொண்கன் = தலைவன்)

என்று குறிப்பிடுகின்றாள் தலைவி.

    கண்ணுக்கு மை தீட்டும்பொழுது, மை தீட்டும் கோல், கண்ணின்
இமை அருகே செல்லும்பொழுது, கண்ணுக்கு அது தெரியாது.
அதைப்போல, தலைவனை நேரில் பார்க்காதபொழுது, அவனது
தவறுகள் தெரிந்தன. ஆனால் இப்பொழுது நேரில் பார்க்கும்பொழுது
அவனது தவறுகள் தெரியவில்லை என்கிறாள் தலைவி.

    இப்பாடலில் வள்ளுவர் காட்டிய உவமை, தலைவி பயன்படுத்தும்
ஒரு பொருள். மை தீட்டும்போது மகளிர் பயன்படுத்தும் கோல்தான்
அது. தலைவி பயன்படுத்தும் பொருளையே, தலைவியின்
மனநிலையைக் காட்டுவதற்குரிய உவமையாகக் கையாளுகின்றார்
வள்ளுவர்.

    மேற்குறிப்பிட்ட செய்திகளிலிருந்து எவை தெரிகின்றன? தலைவனை
எப்பொழுது பார்க்கலாம்? பார்த்தபின் எப்படி எப்படியெல்லாம்
பேசி மகிழலாம் என்ற தலைவியின் மனநிலையையே
தெரிவிக்கின்றன. இல்லையா? எனவேதான், தலைவனைப்
பார்த்ததும், அவன் மீதுள்ள கோபம் அவன் தவறுகள், முதலியன
எல்லாம் அவளுக்கு முழுமையாக மறந்து விடுகின்றன.


தன் மதிப்பீடு: வினாக்கள் I

  1. தலைவியைக் கண்ட தலைவனின் ஐயங்கள்
    யாவை?
  1. கண்ணுக்கு மை தீட்டுவதைத் தலைவி ஏன்
    நிறுத்தினாள்?
  1. சூடான உணவை அருந்துவதற்குத் தலைவி ஏன்
    தயங்குகிறாள்?
  1. தலைவனைப் பார்க்காத போதுள்ள அவள்
    மனநிலை எவ்வாறு இருந்தது? பார்த்த பொழுது
    என்ன மாற்றம் ஏற்பட்டது?
  1. கண்ணுக்கு மை தீட்டும் கோல், எதற்கு ஒப்பாகச்
    சொல்லப்பட்டுள்ளது?