2.2 பல்லவப் பேரரசர்கள்

   சிம்மவர்மன் முதல் அபராஜிதவர்மன் வரையிலான அரசர்கள் பல்லவர் ஆட்சிக்குச் சிறப்புச் செய்தனர். இவர்களில் முதலாம் மகேந்திரன் போன்றோர் கலைவல்லுநர்களாகவும் திகழ்ந்தனர்.

2.2.1 சிம்மவர்மனும் சிம்மவிஷ்ணுவும்

   செப்பேட்டுச் சான்றுகளாலும், கல்வெட்டுச் சான்றுகளாலும் சிம்மவர்மனைப் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன. சிம்மவர்மனின் மகனாகிய சிம்ம விஷ்ணு பல்லவர் ஆட்சிப் பரப்பை விரிவுபடுத்திய பெருமைக்கு உரியவன்.

 • சிம்மவர்மன் (கி.பி.550-570)

 •     இவன் காலத்தனவாக இரண்டு சாசனங்கள் கிடைத்துள்ளன. திருத்துறைப்பூண்டி வட்டம் பள்ளன் கோயில் எனும் ஊரிலிருந்து கிடைத்த செப்பேட்டுச் சாசனமும், திருவள்ளூர்வட்டம் சிவன்வாயில் என்ற கிராமத்திலிருந்து கிடைத்த கல்வெட்டொன்றும் இவனது வரலாறு அறியத் துணை புரிகின்றன. பத்து அசுவமேதயாகங்களையும், பகுசுவர்ணம் என்ற யாகத்தையும் செய்தவன் இவன் என அச்சாசனங்கள் குறிப்பிடுகின்றன. இவனது முழு வரலாறு அறியப் போதிய சான்றுகள் கிடைக்கவில்லை. இவனது மூத்த மகனான சிம்ம விஷ்ணுவின் வழியில் தோன்றிய ஏழு மன்னர்களாலும், இளைய மகனான பீமவர்மனின் வழியில் ஆறாவது தலைமுறைக்கும் பிறகு தோன்றிய ஐந்து மன்னர்களாலுமே பல்லவ அரசு தழைத்தது.

 • சிம்ம விஷ்ணு (கி.பி.570-600)

 •     காவிரிநதி பாயும் சோழநாட்டை வெற்றி கொண்டதே சிம்ம விஷ்ணுவின் போர்ச் செயல்களுள் மிகவும் முக்கியமானதாகும். இவன் மாளவ நாட்டு மன்னனையும், களப்பிரர், சோழர், மழவர், பாண்டியர், கேரளர், சிங்களர் ஆகிய தேசத்து மன்னர்களையும் போரில் வென்று பல்லவர் ஆட்சிப் பரப்பைச் சோழநாடுவரை விரிவாக்கினான். இவனது செல்வாக்கு இலங்கைத்தீவு வரை பரவி இருந்தது, இவனது வரலாற்றை, காசாக்குடிச் செப்பேட்டுச் சாசனம், வேலூர்ப் பாளையச் செப்பேட்டுச் சாசனம் ஆகியவை விவரிக்கின்றன. கும்பகோணத்திற்கு அருகில் உள்ள கஞ்சனூர், சிம்மவிஷ்ணு சதுர்வேதி மங்கலம் என்ற பெயரால் அழைக்கப்பட்டது.
  சிம்ம விஷ்ணு

  2.2.2 முதலாம் மகேந்திரவர்மன் (கி.பி. 600 - 630)

      சிம்மவிஷ்ணுவின் மகனான மகேந்திரவர்மன், மாவீரனாக வாழ்ந்தான். இவனது ஆட்சிக்காலத்தின் முதற்பகுதியில் சமணம் உயர்நிலையில் இருந்தது. பிற்பகுதியில் சைவம் உயர் நிலைக்கு வந்தது. இப் பேரரசனே சமண சமயத்தை விடுத்து, சைவத்திற்கு மாறினான். திருநாவுக்கரசர் எனும் அப்பரால் மனமாற்றம் அடைந்தவன். இவன் சைவ சமயத்துக்கு மாறிய பிறகு, சமணப் பள்ளிகளை இடித்து, அக்கற்களால் சிவன் கோயில்களை உருவாக்கியதாக, திருச்சிராப்பள்ளிக் குகைக்கல்வெட்டு கூறுகிறது. தமிழகக் கலை வரலாற்றில் ஈடிலாப் படைப்புக்களை உருவாக்கியவன். சிறந்த இசைவல்லவன், ஓவியன், நாடக ஆசிரியன். பல்லவர் வரலாற்றில் குறிப்பிடத்தக்க புகழ் எய்தியவன்
  முதலாம்
  மகேந்திரவர்மன்

 • பட்டங்கள்

 •    இப்பேரரசனுக்குப் பல பட்டப் பெயர்கள் இருந்தன. குணபரன், விசித்திர சித்தன், போத்தரையன், சத்ருமல்லன், மத்தவிலாசன் போன்ற பல பட்டப் பெயர்கள் இவனது சாசனங்களில் காணப்பெறுகின்றன.

 • வீரம்

 •    புள்ளலூர் எனும் இடத்தில் சாளுக்கிய மன்னன் புலிகேசியையும், கங்கமன்னன் துர்வீநீதனையும் இவன் வென்று தன் வீரத்திற்குப் பெருமை சேர்த்தான்.

 • நூலாசிரியன்

 •    மாமண்டூர்க் கல்வெட்டில் குறிக்கப்படும் மத்தவிலாச பிரகசனம் எனும் நாடகநூல் இப்பேரரசனால் எழுதப் பெற்றதாகும். பல்வேறு சமயங்களைப் பற்றிய செய்திகளையும், நல்லொழுக்கம் பற்றி வலியுறுத்துகின்ற செய்திகளையும் நகைச்சுவை உணர்வோடு இந்நாடகநூல் விவரித்துக் கூறுகின்றது. மகேந்திரவர்ம பல்லவனின் புலமை இந்நூல் வாயிலாக வெளிப்படுகின்றது.

 • கலைவல்லோன்

 •    சிறந்த இசைப்புலவனாக வாழ்ந்த மகேந்திர பல்லவன் ‘சங்கீர்ணஜாதி‘ எனும் இசைப் பண்ணைத் தானே அமைத்துச் சிறப்பெய்தினான். ஒப்பற்ற கவியாகவும் விளங்கினான். திருச்சிராப்பள்ளிக் குடைவரைப் பாடல்கள் இவனால் எழுதப்பெற்றவை என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும். சித்திரக்காரப்புலி என்ற பட்டம் புனைந்து, ஓவியக்கலை வளர்ப்பதில் பெரும் பணி புரிந்திருக்கிறான். மண்டகப்பட்டு, மகேந்திரவாடி, மாமண்டூர், வல்லம், பல்லவபுரம், தளவனூர், திருச்சிராப்பள்ளி போன்ற இடங்களில் மலையைக் குடைந்து, குடை வரைக் கோயில்களை உருவாக்கினான். சுதை, மண், கல், மரம், உலோகம் ஆகியவை இன்றிப் புதுமையான கோயில்களை உருவாக்கியவன் இவன் என அவனது மண்டகப்பட்டுக் கல்வெட்டு கூறுகின்றது.

  2.2.3 முதலாம் நரசிம்மனும் வழியினரும்


     முதலாம் மகேந்திரனுக்குப் பின்னர் அவன் மகன் முதலாம் நரசிம்ம வர்மனும் அவன் வழி வந்தவர்களும் பல்லவ மன்னர்களுள் சிறப்புடையவர்களாகத் திகழ்ந்தனர்.

 • முதலாம் நரசிம்மவர்மன் (கி.பி.630 - 668)

 •    முதல் மகேந்திர வர்மனின் மகன் நரசிம்ம வர்மன்; இவன் மாமல்லன் என்ற சிறப்புப் பெயர் பூண்டவன். இரண்டாம் புலிகேசியை வென்று புகழ் எய்தினான். மேலைச்சாளுக்கியர்களின் தலைநகரான வாதாபி நகரைக் கைப்பற்றிப் பேரழிவுகளுக்கு உட்படுத்தி, வாதாபி கொண்ட நரசிங்கப் போத்தரையன் என்ற பட்டம் பூண்டவன். அந்நகரில் இவனது 13ஆம் ஆண்டுக் கல்வெட்டு உள்ளது. இலங்கை மன்னனான மானவர்மன் என்பவனுக்குத் துணை புரிய ஈழத்துக்குத் தன் கடற்படையை இருமுறை அனுப்பியவன். இரண்டாம் முறை பல்லவர் படை வெற்றிகண்டது. அதன் பயனாக மானவர்மன் ஈழத்து அரியணை ஏறினான். அப்படை எடுப்பிற்குச் சென்ற பல்லவனின் கடற்படை மாமல்லபுரத்திலிருந்து சென்றது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மாமல்லபுரம் இவனது பெயரால் சிறந்த துறைமுகமாக விளங்கியது.
  முதலாம் நரசிம்மன்

 • படைத்தலைவன்

 •    முதலாம் நரசிம்ம வர்மனின் வாதாபி வெற்றிக்குக் காரணமாகத் திகழ்ந்தவர் அவனது படைத்தலைவரான பரஞ்சோதியார் என்பவரே ஆவார். அவர்தான் பின்பு சிறுத்தொண்டர் என்ற பெயரால் நாயன்மார்களில் ஒருவராகப் போற்றப்பட்டார்.

 • இயூன்சிங் வருகை

 •     ஹர்ஷனது பேரரசையும் இரண்டாம் புலிகேசியின் சாளுக்கியப் பேரரசையும், இந்தியநாட்டுப் பௌத்தப் புனிதத் தலங்களையும் காணவந்த சீனநாட்டுப் பயண எழுத்தாளன் இயூன்சிங் என்பான் நரசிம்ம பல்லவனின் ஆட்சிக் காலத்தில் காஞ்சிபுரத்திற்கு வருகை தந்தான். அவனது பயணக் குறிப்புகளில் நரசிம்ம பல்லவன் காலத்திய பல்லவப் பேரரசு பற்றிய பல குறிப்புகள் காணப்படுகின்றன.

 • குடைவரைக் கோயில்களும் கட்டுமானக் கோயில்களும்

 •     தன் தந்தை மகேந்திர பல்லவனைப் போன்றே இவனும் பாறைகளைக் குடைந்து சில குடைவரைக் கோயில்களை உருவாக்கினான். அவற்றுள் குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்தது திருக்கழுக்குன்றத்து எவையும் மலையில் அமைந்துள்ள குடைவரையாகும்.திருக்கழுக்குன்றம்,திருத்தணி போன்ற இடங்களில் இவன் காலத்திய கட்டுமானக் கோயில்கள் விளங்குகின்றன.

 • இரண்டாம் மகேந்திரவர்மன் (கி.பி.668-670)

 •    மாமல்லனாகிய முதலாம் நரசிம்மவர்மனின் மகனான இவன் இரண்டு ஆண்டுகளே ஆட்சி புரிந்தான். இவனது வரலாறு கூறும் பட்டயங்கள் எவையும் கிடைக்கவில்லை. காஞ்சிபுரத்திலிருந்த கடிகையைத் (கல்விச்சாலை) திருத்தியவன். இவனுக்குச் சமகாலத்தவனாகத் திகழ்ந்த பூவிக்கிரமன் என்ற கங்க மன்னன் பல்லவனை வென்றான் என்ற குறிப்பு கிடைப்பதால், அவன் வென்ற அரசன் இரண்டாம் மகேந்திரனே என்று கொள்ளமுடிகிறது.

 • முதலாம் பரமேஸ்வரவர்மன் (கி.பி.670-700)

 •     இவன் இரண்டாம் மகேந்திரனின் மகன். இவனது ஆட்சிக்காலத்தில் மேலைச்சாளுக்கிய மன்னன் விக்கிரமாதித்தன் காஞ்சி வரை வெற்றி கண்டான். தெற்கே காவிரி வரை முன்னேறினான். எனினும் முடிவில் பரமேஸ்வரவர்மன் தன்படைபலத்தால் பெருவள நல்லூர்ப்போரில் விக்கிரமாதித்தனைத் தோற்கடித்தான். வாதாபி வரை துரத்தி அந்நகரைக் கைப்பற்றினான் இரண ரசிகபுரத்தைக் கைப்பற்றியவன் எனப் பட்டம் கொண்டான். இரண ரசிகன் என்பது விக்கிரமாதித்தியனின் பட்டமாகும். பரமேஸ்வரவர்மன் அசுவமேதயாகம் செய்தான் என்பதை அவனுடைய மகன் அளித்த ரேயூருச்சாசனம் கூறுகிறது.

 • இரண்டாம் நரசிம்மவர்மன்(கி.பி.700-728)

 •    பரமேசுவரவர்மனின் மகன். இராஜசிம்மன் என்றும் அத்யந்தகாமன் என்றும் பட்டங்கள் பெற்றவன். கடல் கடந்த இலட்சத்தீவு முதலிய தீவுகள் பலவற்றை ஆட்சி செய்தவன். பல்லவ நாட்டில் பேரமைதியை ஏற்படுத்தியவன். ஒப்பற்ற கலை ரசிகன். சிறந்த சிவபக்தன். சிவ சூடாமணி என்ற பட்டம் பூண்டவன். சைவ சித்தாந்தத் துறையில் பல நூல்களைக் கற்றுணர்ந்தவன். பல கலைப்படைப்புக்களை உருவாக்கியவன். சீன மன்னனுக்குச் சோழநாட்டு நாகப்பட்டினத்தில் பௌத்தப்பள்ளி ஒன்று கட்டுவதற்கு அனுமதி அளித்தவன். இம்மன்னனும் ‘மாமல்லன்‘ என்ற பட்டத்தைச் சூடிக்கொண்டான். இவனது அவையைத் தண்டி என்ற சமஸ்கிருத கவி அலங்கரித்தார். இவனது மனைவியின் பெயர் ரங்கபதாகை என்பதாகும்.

 • கலைப் படைப்புகள்

 •     காஞ்சியிலுள்ள கயிலாச நாதர் கோயிலும் மகாபலிபுரத்திலுள்ள அனைத்துச் சிற்பங்களும் இவனது ஆக்கத்தால் மலர்ந்தவை என்பதே அண்மைக் கால ஆராய்ச்சிகளின் முடிவாகும். பனைமலைக் கோயில் இவனது படைப்புகளுள் குறிப்பிடத்தக்கதாகும். ஒவ்வொரு படைப்பிலும் ஒரு புதுமையைப புகுத்தியவன் என்ற சிறப்புக்குரியவனாவான். குடைவரைக் கோயில்கள், கட்டுமானக் கோயில்கள், சிற்பப் படைப்புகள், ஓவியங்கள் எனப் பன்முகமாக இராஜசிம்மனின் படைப்புகள் திகழ்கின்றன. பல்லவர் காலக் கலைச் செல்வங்களில் பெரும்பாலான படைப்புகள் இவனது ஆட்சிக் காலத்தில் உருவானவையே ஆகும்.

 • இரண்டாம் பரமேஸ்வரவர்மன் (கி.பி.728-730)

 •     இரண்டாம் பரமேஸ்வரவர்மன் இரண்டாம் நரசிம்மனின் மகன். சாளுக்கியர்களுடனும் கங்கர்களுடனும் போரிட்டான். திருவதிகையில் கோயில் எழுப்பினான். இவனது ஆட்சி மூன்றாண்டுகளே நீடித்தது. இரண்டாம் விக்கிரமாதித்யனின் காஞ்சிபுரத்துப் படை எடுப்பால் இவனது வலிமை குன்றியது. அப்போருக்குப் பின்பு இவன் நெடு நாட்கள் உயிருடன் இல்லை என்பதை அறிய முடிகிறது. சிம்மவிஷ்ணுவின் வழியில் தொடர்ந்த அரசு இவனுடன் முடிவடைந்தது.

  2.2.4 இரண்டாம் நந்திவர்மனும் வழியினரும்

      சிம்மவிஷ்ணுவால் தொடங்கப்பெற்ற பல்லவர் ஆட்சியில் பரமேசுவரவர்மனுக்கு ஆண்வாரிசு இல்லை. எனவே, சிம்மவிஷ்ணுவின் சகோதரன் பீமவர்மனின் வழிவந்த, இரண்டாம் நந்திவர்மன், ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டான். அதன்பின் அவன் வழிவந்த அவனது வாரிசுகள் ஆட்சி செய்தனர்.


 • இரண்டாம் நந்திவர்மன் (கி.பி.730 - 795)

 •     சிம்மவிஷ்ணுவின் உடன் பிறந்த பீமவர்மனின் வழியில் ஆறாவது தலை முறையில் வந்தவன் இரண்டாம் நந்திவர்மன்; இவன் இரணிய வர்மனின் மகன். பல்லவ மல்லன் என்ற பட்டம் பூண்டவன். தனது பன்னிரண்டாம் வயதில் ஆட்சியில் அமர்ந்தான். 65 ஆண்டுக் காலம் ஆட்சி புரிந்தவன். சாளுக்கியர், பாண்டியர், கங்கர், இராட்டிரகூடர் முதலியோருடன் பலமுறை போரிட்டவன். காஞ்சிபுரத்திலுள்ள வைகுந்த நாதர் ஆலயத்தை (பரமேஸ்வர விண்ணகரம்) எடுப்பித்தவன். அவ்வாலயத்தில் பல்லவர் வரலாறு முழுவதையும் சிற்பங்களாகக் கல்வெட்டுக் குறிப்புகளுடன் இடம் பெறச் செய்தவன்.
  இரண்டாம்
  நந்திவர்மன்

 • நந்திபுரம்

 •     இவனது ஆட்சியின் தொடக்க காலத்தில் காஞ்சிபுர நகரம் பலமுறை தாக்குதல்களுக்கு உட்பட்டதால் இவனது ஆட்சியின் கீழ் இருந்த சோழ நாட்டில் நந்திபுரம் எனும் இரண்டாம் தலை நகரத்தை உருவாக்கினான். அந்த நந்திபுரம் தஞ்சைக்கு அருகே உள்ள கண்டியூரினை ஒட்டி அமைந்து இருந்தது.

 • திருமங்கை ஆழ்வார்

 •     வைணவ ஆழ்வார்களுள் ஒருவரான திருமங்கை ஆழ்வார் இவனது காலத்தில் வாழ்ந்தவர். அவரது பாசுரங்களில் நந்திவர்மன் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.

 • தந்திவர்மன் (கி.பி.796-847)

 •    தந்திவர்மன், இரண்டாம் நந்திவர்மனின் மகன். இவன் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற காலத்தில் இராட்டிரகூடருக்கும் பல்லவருக்கும் இடையே உறவு சீர்குலைந்தது. பல போர்களைத் தந்திவர்மன் சந்திக்க நேர்ந்தது. திருவௌ¢ளறை எனும் ஊரில் இவன் காலத்தில் தோற்றுவிக்கப்பட்ட சுவஸ்திகக்கிணறு (நான்கு புறங்களிலும் படிக்கட்டுகளுடன் சுவஸ்திகம் என்ற அமைப்பில் உருவானது) குறிப்பிடத்தக்க படைப்பாகும். உத்தரமேரூர் சுந்தரவரதப் பெருமாள் கோயில் இப்பேரரசன் காலத்தில் கட்டப்பெற்றதாகும்.

  2.2.5 மூன்றாம் நந்திவர்மனும் வழியினரும்

      பீமவர்மனின் வழி வந்த மன்னர்களுள் மூன்றாம் நந்திவர்மன் புகழ்பெற்றவன். பாண்டிய மன்னனை வென்ற பெருமை இவனுக்கு உண்டு. இவனுக்குப் பின்னால், நிருபதுங்கவர்மனும் அபராஜிதவர்மனும் பல்லவர் ஆட்சிக்கால மன்னர்களாகத் திகழ்ந்தனர்.

 • மூன்றாம் நந்திவர்மன் (கி.பி.846 - 869)

 •     தந்திவர்மனின் மகன் மூன்றாம் நந்திவர்மன். தௌ¢ளாறு எனும் இடத்தில் பாண்டியனை வென்றதால் ‘தௌ¢ளாறெறிந்த நந்திப் போத்தரையன்‘ என்ற பட்டம் பூண்டவன். வெறியலூர், கடம்பூர், பழையாறு, குறுக்கோட்டை, வௌ¢ளாறு முதலிய பல போர்களில் பாண்டியனை வெற்றி கண்டவன். காவிரிப்பூம்பட்டினம் இவனது ஆட்சிக்கு உட்பட்டு விளங்கியது. சிறந்த கடற்படையை நிருவகித்தவன் என்பதால் கடற்படை அவனி நாரணன் என்ற பட்டம் பூண்டவன். இவன் காலத்தில் பூம்புகாரிலிருந்து பல வணிகர்கள் சயாம் நாட்டில் தக்கோலம் என்ற இடத்திற்கு வணிகம் காரணமாகக் குடியேறினர். அங்கு அவர்கள் விஷ்ணு கோயில் ஒன்றை எழுப்பியதோடு, தங்கள் மன்னன் நந்திவர்மனின் பட்டப்பெயரில் ‘அவனிநாரணம்‘ என்ற ஏரியைத் தோண்டினர் என்பதைச் சயாம் நாட்டுத் தமிழ்க் கல்வெட்டுக் கூறுகின்றது இராட்டிரகூட வம்சத்து கங்கா என்ற தேவியை மணந்தவன். இம்மன்னன் மேல் நந்திக்கலம்பகம் எனும் நூல் பாடப்பெற்றது. இவன் காவிரி வளநாடன் எனக் குறிப்பிடப்படுவதால் சோழநாடு முழுவதும் இவனது ஆட்சிக்கு உட்பட்டுத் திகழ்ந்தது என்பதை அறிய முடிகிறது. கடல் மல்லைப்புரவலன், மல்லைக்காவலன், மல்லை வேந்தன், மல்லையர் கோன் என்றெல்லாம் புகழப்படுவதிலிருந்து மாமல்லபுரம் இவனது காலத்தில் சிறப்புடன் திகழ்ந்தது என்பதை அறிய முடிகிறது.

 • நிருபதுங்கவர்மன் (கி.பி.859-896)

 •     நந்திவர்மனின் மகன் நிருபதுங்கவர்மனது ஆட்சிக்காலச் சாசனங்கள் மிகுதியாகக் கிடைக்கவில்லை. இவனுக்கும் பாண்டிய மன்னனுக்கும் இடையே போர்கள் நிகழ்ந்தன. இவனது ஆட்சிக் காலத்திலேயே (கி.பி. 885இல்) அபராஜித பல்லவனும் பல்லவநாட்டின் ஒரு பகுதியை ஆளத் தொடங்கினான். திருவதிகைக் கோயிலைப் புதுப்பித்த பெருமை நிருபதுங்கனுக்கு உண்டு.

  2.2.6 அபராஜிதவர்மன் (கி.பி.885-903)

      பதினெட்டு ஆண்டுகள் ஆட்சிபுரிந்த இவன் காலத்தில் நிகழ்ந்த சோழநாட்டுத் திரும்புறம்பியம்போர் குறிப்பிடத்தக்கதாகும். அப்போரில் பாண்டியன் வரகுணமகாராஜன் தோற்று ஓடினான். அபராஜிதனே வெற்றி கண்டான். பின்பு சோழ மன்னன் ஆதித்தனோடு நிகழ்த்திய போரில் அபராஜிதவர்மன் வீரமரணம் அடந்தான். இவனுக்குப் பிறகு கம்பவர்மன் போன்ற பல்லவ அரசர்களின் பெயர்கள் சாசனங்களில் காணப்பட்டாலும் பல்லவர் ஆட்சி பற்றி விரிவாக ஏதும் அறிய முடியவில்லை. சோழ மன்னன் ஆதித்தனின் எழுச்சியால் பல்லவப் பேரரசு முடிவு எய்தியது.

  தன் மதிப்பீடு : வினாக்கள் - I
  1)

  பல்லவர் மரபு பற்றிய கருத்துகள் யாவை?

  (விடை)
  2) பிற்காலப் பல்லவரின் இருகிளையினர் யாவர்?
  (விடை)
  3) பிற்காலப் பல்லவ மன்னர்கள் யாவர்? (விடை)
  4) மத்தவிலாச பிரஹசனம் என்பது எது குறித்த நூல்? (விடை)
  5)
  நாயன்மார்களுள் ஒருவரான சிறுத்தொண்டருக்கும் பல்லவ அரசுக்கும் உள்ள தொடர்பு யாது? (விடை)
  6)
  சீன மன்னனுக்காகச் சோழநாட்டு நாகப்பட்டினத்தில் பௌத்தப் பள்ளி கட்ட அனுமதி தந்த பல்லவ அரசன் யார்?
  7)
  பல்லவ அரசர்களில் நீண்டகாலம் ஆட்சி செய்த மன்னன் யார்? அவனது சோழ நாட்டுத் தலை நகரின் பெயர் என்ன?
  (விடை)