6.3 விடுதலைப் போர்கள்


    தமிழகத்தை இசுலாமியர் மற்றும் வெள்ளையர் பிடியிலிருந்து
மீட்க, பூலித்தேவன், வீரபாண்டிய கட்டபொம்மன் போன்ற
பாளையக்காரர்கள் பதினெட்டாம் நூற்றாண்டில் பொங்கி
எழுந்தனர், ஆனால் பல பாளையக்காரர்கள் ஆங்கிலேயருக்கு
அடிவருடிகளாகவே, தன்மானம் இன்றிச் செயல்பட்டதால்
மானம் உள்ளவர்களின் எதிர்ப்புகள் வெற்றிபெற முடியவில்லை.

6.3.1 பூலித்தேவன்


    திருநெல்வேலி மாவட்டம் நெற்கட்டுச் செவ்வலிலிருந்து
ஆண்ட பூலித்தேவன் வெள்ளையர்களைத் தென்தமிழகத்து
மண்ணிலிருந்து      வெளியேற்ற,     பாளையக்காரர்களை
ஒன்றிணைத்தான். கட்டபொம்மு எனும் பாளையக்காரன் ஒருவன்
தவிரப் பிறர் இவன் கீழ் ஒன்றுபட்டனர். மாபூசுக்கான் என்பான்
கீழ் இருந்த திருவில்லிபுத்தூரை பூலித்தேவன் கைப்பற்றினான்.
இவனிடம் 20 ஆயிரம் குதிரைப்படையும் 25     ஆயிரம்
காலாட்படையும் சேர்ந்தன. ஆனால் கட்டபொம்முவும் பிறரும்
மாபூசுக்கான் பக்கம் சேர்ந்து 1756-இல் பூலித்தேவனைத்
தோற்கடித்தனர். இதனால் பாளையக்காரர்கள் வலிமை குன்றினர்.
சென்னையிலிருந்து ஆங்கிலேயர் திருநெல்வேலியை அழகப்ப
முதலியார் என்பவருக்குக் குத்தகைக்கு விட்டு , பல இலட்சம்
ரூபாய் பெற்றுக் கொண்டனர். மாபூசுக்கான் திருநெல்வேலி
கைநழுவியது கண்டு, பூலித்தேவன் பக்கம் சேர்ந்து வெள்ளையரை
எதிர்த்தான். திருநெல்வேலி பூலித்தேவன் வசமானது. கி.பி. 1760-
இல் கான்சாகிபு என்பான் நெற்கட்டுச் செவ்வல் கோட்டையை
முற்றுகையிட்டான். வெற்றி     பூலித்தேவனுக்கே கிட்டியது.
மாவீரன் பூலித்தேவன் முடிவு பற்றிச் சரியாக அறியமுடியவில்லை.
எப்படி இருப்பினும்     மாற்றாரை     எதிர்த்து, தமிழக
விடுதலை வேள்விக்கு வித்திட்டவன் பூலித்தேவன் ஆவான்.

பூலித்தேவன்
6.3.2 வீரபாண்டிய கட்டபொம்மன்

    வீரபாண்டிய கட்டபொம்மன் தன் முப்பதாம் அகவையில்
(கி.பி. 1790-இல்) பாஞ்சாலங்குறிச்சியின் அரசன் ஆனான்.
பாஞ்சாலங்குறிச்சிப் பாளையத்தில் 96 ஊர்கள் இருந்தன. ஏறத்தாழ
20,000 படை வீரர்கள் இவனது படையில் இருந்தனர். கி.பி. 1792-
இல், ஆங்கிலேயர், ஆர்க்காட்டு நவாப்பின் பிடியில் இருந்த
திருச்சி      திருநெல்வேலி பகுதியிலிருந்த ஊர்களில்
வரித்தண்டல் செய்து கொள்ளும் உரிமையைப் பெற்றனர்.
இதன்     காரணமாக     ஆங்கிலேயருக்கும்      வீரபாண்டிய
கட்டபொம்மனுக்கும் பகைமை ஏற்பட்டது. அவன் வரி கொடுக்க
மறுத்தான்.

    மூன்றாம் மைசூர்ப் போருக்குப் பின்பு, கி.பி. 1792-இல்
சீரங்கப்பட்டணத்தில ஏற்பட்ட உடன்படிக்கைக்கும் பின்னரே
ஆங்கிலேயர்கள் தமிழகத்தின் மீது ஆளுமை உரிமை பெற்றனர்.
1795-இல் இராமநாதபுரமும் பிற இடங்களும் அவர்களின்கீழ்
வந்தன. ஜாக்சன் எனும் திருநெல்வேலி கலெக்டருக்கும்
வீரபாண்டிய கட்டபொம்மனுக்கும் பகைமை மூண்டது.

    கி.பி. 1797-இல் மருது பாண்டியர்களால் பல பாளையங்கள்
ஒருங்கிணைந்து     கூட்டணிப்படைகள்     அமைக்கப்பெற்றன.
கட்டபொம்மன் இவ்வணிக்குத் தலைமை பூண்டான். இதனை
அறிந்த தலைமை ஆளுநர் வெல்லஸ்லி, தஞ்சை, திருச்சி,
மதுரை ஆகிய இடங்களில் இருந்த ஆங்கிலப் படைகளை,
தளபதி பானர்மென் தலைமையில் பாஞ்சாலங்குறிச்சிக்கு அனுப்பி
வைத்தான். 1799-இல்     பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையை
ஆங்கிலப்படைகள் முற்றுகை இட்டன.     எட்டையபுரத்துப்
பாளையக்காரன் எட்டயப்பனும், திருவிதாங்கூர் மன்னனும்
ஆங்கிலேயருக்கு உதவினர். கடும்போரில் கட்டபொம்மனின்
அமைச்சர் சிவசுப்பிரமணியபிள்ளை சிறைபிடிக்கப்பட்டார்.
காட்டுக்குள் மறைந்திருந்த வீரபாண்டிய கட்டபொம்மனை,
புதுக்கோட்டை அரசன் இரகுநாத தொண்டைமான் துரோகம்
செய்து பிடித்துக் கொடுத்தான். பின்னர் 17.10.1799- இல்
ஆங்கிலேயர்கள் வீரபாண்டிய கட்டபொம்மனைக் கயத்தாறு எனும்
இடத்தில் தூக்கிலிட்டுக் கொன்றனர்.

வீரபாண்டிய கட்டபொம்மன்

6.3.3 மருது பாண்டியர்கள்

     கி.பி. 1800-இல் தமிழகத்திலிருந்து வெள்ளையர்களை
விரட்டும் மாபெரும் புரட்சி தோன்றியது. பாளையங்கோட்டைச்
சிறையில் இருந்த கட்டபொம்மனின் தம்பி ஊமைத்துரை தன்
உறவினர்களுடன் தப்பி, புரட்சியில் ஈடுபட்டான். சிவகங்கையில்
இருந்த வெள்ளைமருதுவும் (பெரிய மருது) அவர் தம்பி
சின்னமருதுவும் இப்புரட்சிக்குத் தலைமை ஏற்றனர். திண்டுக்கல்
கோபால நாயக்கர், மலபார்     மன்னர்     கேரளவர்மர்,
கிருஷ்ணப்பநாயக்கர், மைசூர் தூந்தாசி ஆகியோர் இணைந்து
ஆங்கிலேயரை ஒழிக்கச் சதித்திட்டம் தீட்டினர். கி.பி. 1800-இல்
கோயம்புத்தூரில் ஒரு புரட்சி தோன்றியது. ஆனால் அது வெற்றி
பெறவில்லை. கி.பி. 1801-இல் மருது பாண்டியர்களின் 30,000
வீரர்கள் திருநெல்வேலி மாவட்டப் பகுதிகளைக் கைப்பற்றினர்.
வெள்ளை மருதுவின் மகன்     செவத்தம்பியும் இப்போரில்
கடுமையாக ஈடுபட்டான். ஆனால் ஆங்கிலேயர்களின் படை
பலமே இறுதியில் வென்றது. பெரிய மருதுவும், சின்ன மருதுவும்
ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பெற்று, தூக்கிலிடப் பெற்றனர்.
மருது பாண்டியர்

தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1)

கி.பி. 1639-இல் ஆங்கில வணிகக் கழகத்தார்
சென்னைக் கடற்கரையில் வாங்கிய இடத்தில்
கட்டப்பெற்ற கோட்டையின் பெயர் என்ன? அந்த
இடத்தை யாரிடமிருந்து வாங்கினர்?

(விடை)
2) பிரஞ்சுக் கிழக்கிந்திய வணிகக்குழு தமிழ்நாட்டில்
எங்கே வணிகமையம் அமைத்தது?
(விடை)
3) ஆர்க்காட்டு நவாப், ஆங்கிலேயர் இணைந்த
இரட்டை ஆட்சி எந்த ஆண்டு ஏற்பட்டது?
(விடை)
4) ஆங்கிலேயர எதிர்த்த தஞ்சை மராட்டிய அரசரின்
பெயர் என்ன? அவருக்குப் பதிலாக யாரை
ஆங்கிலேயர் தஞ்சை அரசராக நியமித்தனர்?
(விடை)
5)
தொடக்க காலத்தில் வெள்ளயரை எதிர்த்து
வீரப்போர் நிகழ்த்தியவர்கள் யாவர்?