1.3 வாழ்க்கை வட்டச் சடங்குகள் (Life Cycle Rituals)


     மனிதருடைய வாழ்க்கைச் சுழற்சியில் மேற்கொள்ளப்படும்
சடங்குகளே வாழ்க்கை வட்டச் சடங்குகள் எனப்படும். இச்சடங்குகள்
அனைத்தும் மனித வாழ்வைப் பல தொடர் நிலைகளாகப் பகுத்து
(பிறப்பு, பூப்பு, திருமணம், இறப்பு) ஒரு நிலையிலிருந்து மற்றொரு
நிலைக்கு அறிமுகப் படுத்தும் பொருட்டு மேற்கொள்ளப் படுவதாக
அமைகின்றன. மனித வாழ்வில் அடுத்தடுத்து நிகழும் ஒவ்வொரு நிலை
மாற்றமும் ஏதேனும் ஒரு சடங்கு நிகழ்வோடு பண்பாட்டு வயப்படுத்தப்
படுவது இங்குக் குறிப்பிடத் தக்கதாகும். இவற்றைத்
தகுதிப் பெயர்ச்சிச் சடங்குகள் (Rites of passage) என்றும்
குறிப்பிடுவதுண்டு.

நாட்டுப்புற     மக்களால் பல்வேறு வகையான வாழ்வியல் சடங்குகள்
காலங் காலமாக நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இவற்றில் பிறப்புச் சடங்கு,
பூப்புச் சடங்கு, திருமணச் சடங்கு, இறப்புச் சடங்கு ஆகியவை
குறிப்பிடத் தக்கவை ஆகும்.


1.3.1 பிறப்புச் சடங்குகள்


    மக்களின் வாழ்வில் மாபெரும் செல்வமாகப் போற்றப்படுவது
மக்கட் செல்வமாகும்.

பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த

மக்கட்பேறு அல்ல பிற

(திருக்குறள்-61)    

என்று வள்ளுவர் மக்கட் செல்வத்தின் பெருமையைச் சொல்லியுள்ளார்.
கிடைத்தற்கு அரிய இம்மக்கட் செல்வத்தைக் காக்கச் செய்யப்படும்
சடங்குகளே பிறப்புச் சடங்குகள் எனப்படுகின்றன. பிறப்புச் சடங்கில்
சேனை தொடுதல், தொட்டில் கட்டுதல், காது குத்துதல் ஆகிய
சடங்குகள் நாட்டுப்புற மக்களின்     வாழ்வில்     சிறப்பிடம்
பெறுபவையாகும். அவற்றை இங்குக் காண்போம்.

சேனை தொடுதல்


     சேய்+நெய்+தொடுதல் என்பதே சேனை தொடுதல் என
வழங்குகிறது. குழந்தை பிறந்தவுடன் பெரியவர்களை அழைத்துக்
குழந்தையின் நாவில் இனிப்புக் கலந்த நெய் அதாவது எண்ணெய்யைத்
தொட்டு வைக்கும் வழக்கத்தையே சேனை தொடுதல் என்பர். சேனை
என்பதைக் ‘குழந்தை பிறந்தவுடன் புகட்டும் இனிப்புக் கலந்த திரவ
உணவு’ என்கிறது தமிழ் அகராதி. சேனை தொட்டு வைக்கும்
பெரியோரின் குண நலன்கள் குழந்தைக்கு வரும் என்ற நம்பிக்கையின்
அடிப்படையில் இச்சடங்கு செய்யப்படுகின்றது.

தொட்டிலிடுதல்


     குழந்தையைத் தொட்டிலில் கிடத்தித் தாலாட்டுப் பாடித் தூங்க
வைக்கும் பழக்கம் தமிழரின் தனிப்பண்பாகும். குழந்தையை
முதன்முதலில் தொட்டிலில் இடுவது நாட்டுப்புற மக்களால் ஒரு
சடங்காகவே மேற்கொள்ளப் படுகிறது. குழந்தையின் தாய் மாமன்
தொட்டில் துணி, தொட்டில் கம்பு, தொட்டில் கயிறு, புத்தாடை
ஆகியவற்றைக் கொண்டு வந்து தொட்டில் கட்டி அதில்
குழந்தையைக் கிடத்தி மூன்று முறை ஆட்ட வேண்டும். இவ்வாறு
செய்வதே தொட்டிலிடுதல் சடங்காகும். தமிழரின் தாலாட்டுப்
பாடல்களில் இது குறித்த செய்திகளைக் காணலாம்.

பச்சை இலுப்பை வெட்டி - என்கண்ணே உனக்கு
பால்வண்ணத் தொட்டில்கட்டி
தொட்டிலிட்ட அம்மானும் -என்கண்ணே
தூரவழி போறாரம்மா


என்ற தாலாட்டுப் பாடல் தொட்டிலிடுதல் குறித்து எடுத்துரைக்கும்.

காது குத்துதல்


    குழந்தைகள் தொடர்பான சடங்குகளில் சிறப்பிடம் பெறுவது
காது குத்துதல் சடங்காகும். அவரவர் தம் குல தெய்வக் கோயில்களில்
குழந்தைகளுக்கு முடியெடுத்து காது குத்தும் சடங்கு அனைத்துக்
குழந்தைகளுக்கும் தவறாது நடத்தப்படுகிறது. குழந்தை பிறந்து ஓராண்டு
முடிவதற்குள் குழந்தைக்கு மொட்டை போட்டுக் காது குத்த வேண்டும்
என்பது வழிவழி வரும் மரபாக உள்ளது. குழந்தைக்குக் கருவில்
உண்டான பாரம்பரியக் குறைகளை நீக்குவதற்காக இச்சடங்கு
செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.


    தீமை தரும் ஆவிகளிடமிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கக் காது,
மூக்கு ஆகிய பகுதிகளில் துளையிட்டு உலோக ஆபரணம்
பூட்டுவதாகவும் கூறப்படுகிறது.
வழிவழி வந்த பழக்கம் சடங்காகவே
மாறிவிட்டது.     தாய்     மாமன்     மடியில்     குழந்தையை
அமர வைத்துக் காது குத்துதல் என்பது மாறாத வழக்கமாக இருந்து
வருகிறது.


கண்ணான அம்மாளுக்கு - ஏனம்மா
காதுகுத்தப் போறாகன்னு
கிண்ணியில் சந்தனமும்
கிளிமூக்கு வெத்தலையும்
தங்கத்தினால் ஆபரணமும் - ஏனம்மாளுக்கு
கொண்டு வந்தார் தாய்மாமன்


என்று தாலாட்டுப் பாடல் எடுத்துரைக்கிறது. குழந்தையின் எதிர்காலம்
சிறப்படையவும் உறவுகளை வலுப்படுத்தவும் பிறப்புச் சடங்குகள்
மேற்கொள்ளப் படுகின்றன எனலாம். உங்களின் குழந்தைப்
பருவத்திலும் இதுபோன்ற     சடங்குகள்     இடம்பெற்றிருக்கும்;
நினைவுபடுத்திப் பாருங்கள்.

1.3.2 பூப்புச் சடங்கு (maturity)


    மண்ணின் பூப்பை மகிழ்ச்சியோடு கொண்டாடுவதைப் போல்
பெண்ணின் பூப்பையும் சீர் வரிசையோடு சிறப்பாகச் கொண்டாடி
மகிழ்வது நாட்டுப்புற மக்களின் பண்பாட்டு மரபாகும். பெண்ணின்
உடல் தாய்மைக்கு உரிய கன்னித் தன்மையை அடையும் நிகழ்வே
பூப்படைதல் ஆகும். இப்பூப்புக் காலத்தை ஒட்டிப் பெண்ணிற்கு
நிகழ்த்தப்படும் சடங்கே பூப்புச் சடங்கு. பூப்பு நீராட்டு எனப்படுகிறது.
கிராமப் புறங்களில் சடங்கு என்றாலே அது பூப்புச் சடங்கையே
குறிக்கும் என்னும் அளவிற்கு இச்சடங்கு மிகுந்த முக்கியத்துவம்
பெற்றதாக நிகழ்த்தப் படுகிறது. சுமங்கலிப் பெண்கள் கூடி மஞ்சள்
கலந்த நீரால் பூப்படைந்த பெண்ணைக் குலவை இட்டுப் புனித
நீராட்டுவது பூப்புனித நீராட்டுச் சடங்காகும்.


     பூப்புச் சடங்கில் தாய் மாமன் பூப்படைந்த பெண்ணிற்குப் பச்சை
ஓலைகளால் குச்சில் கட்டுதல் (குடிசை கட்டுதல்) என்பது முக்கிய
நிகழ்வாகும். இக்குடிசையில் பெண் பதினாறு நாட்கள் தங்க வேண்டும்.
பெண் குடிசையில் தங்கியிருக்கும் நாட்களில் எதிர்காலத்தில் அவள்
குழந்தையைத் தாங்கும் வலிமையைப் பெறவேண்டும் என்பதற்காக
ஊட்டச் சத்தான உணவு வகைகளை உறவினர்கள் கொடுத்து வலுச்
சேர்ப்பதுண்டு. பெண் இல்வாழ்க்கைக்கு உரிய தகுதியைப் பெற்ற
நிலையை உறவினர்களுக்கும் உலகத்தார்க்கும் தெரிவிப்பதே பூப்புச்
சடங்கின் முக்கிய நோக்கம் எனலாம்.

1.3.3 திருமணச் சடங்கு


    ‘திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர்’ என்று கூறப்படுவது
ண்டு. தமிழர் வாழ்வில் திருமணம் என்னும் நிகழ்வானது ஒரு தனி
மனிதனுக்குச் சமூகத் தகுதியையும், சடங்கியல் வாழ்வில் பங்கேற்கும்
தகுதியையும் அளிக்கும் அங்கீகாரமாக விளங்குகிறது. திருமணத்தால்
அமையும் வாழ்வே முழுமை பெற்றது என்றும், திருமணம் ஆகாத
வாழ்வு முழுமை பெறாத வாழ்வு என்றும் நம்பப்படுகிறது. நாட்டுப்புற
மக்களின் வழக்கில்
ள்ள திருமணம் அக மணம், புற மணம் என
இருவகைப்படும். ‘தான் சார்ந்த குலத்திலேயே பெண் பார்த்துத்
திருமணம் செய்து கொள்ள வேண்டும்’ என்ற சமூக அமைப்பு முறை
அக மணம் எனப்படும். அதாவது ஒரு குலப் பிரிவினர் அக்குலப்
பிரிவிற்கு
ள்ளேயே திருமணம் செய்து கொள்வதாகும். புற மணம்
என்பது ஒரு குலப் பிரிவினர் பிற குலப் பிரிவில் திருமணம் செய்து
கொள்வதைக் குறிக்கும். இந்த இருவகை மண முறையும் இன்று
வழக்கில் உள்ளது. திருமணச் சடங்கில் பரிசம் போடுதல், முகூர்த்தக்
கால் நடுதல், தாலி கட்டுதல் ஆகியவை குறிப்பிடத் தக்கவையாகும்.

பரிசம் போடுதல் (Betrothal)


     திருமணத்திற்கான தொடக்க நிலைச் சடங்கு இதுவாகும்.
மணமகன் வீட்டார் தம் உறவினருடன் பெண் வீட்டிற்குச் சென்று
தாம்பூலம் மாற்றி மண ஒப்பந்தம் செய்து கொள்வது பரிசம் போடுதல்
எனப்படும். இதனை உறுதி     செய்தலை     நிச்சயதார்த்தம்,
நிச்சய தாம்பூலம்
என்றும் கூறுவதுண்டு. இச்சடங்கு திருமணத்திற்கு
முன் ஒரு நல்ல நாளிலோ திருமணத்திற்கு முந்தைய நாளிலோ பெண்
வீட்டில் வைத்து நடத்தப் பெறும். இன்னார்க்கு இன்னார் என்று
மணமக்களை உற்றார் உறவினர் அறிய உறுதி செய்வதே இச்சடங்கின்
நோக்கமாகும்.

முகூர்த்தக் கால் நடுதல்


     மணப்பந்தலின் ஒரு கால்தான் முகூர்த்தக் கால் ஆகும்.
திருமணத்தின் போது மணமகன் இல்லத்திலும் மணவறையிலும்
முகூர்த்தக் கால் நடுவது மரபாக இருந்து வருகிறது. மூங்கில் அல்லது
பால் ஊறும் மரக் கிளைகளை மணமகன், மணப்பெண் இவர்களுக்கு
மிக நெருக்கமான உறவினர்கள் சேர்ந்து இவர்களின் வீடுகளில்
இடப்படும் மணப்பந்தலுக்கான முகூர்த்தக் காலாக நடுவார்கள்.
மூங்கிலும் பால் ஊறும் மரமும் தழைத்துச் செழிப்பது போல்
மணமக்களின் வாழ்வும் செழிக்கும் என்ற நம்பிக்கை குறித்த சடங்கே
இதுவாகும். பெரியோர்கள்,

ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரிட்டு
மூங்கில்போல் சுற்றம் முசியாமல் வாழ்க


என்று மணமக்களை வாழ்த்தும் வழக்கமும் இதனால் ஏற்பட்டதே.

தாலி கட்டுதல் (தாலி - Holy Thread)


    திருமணத்தில் மணமகன் மணமகள் கழுத்தில் தாலி கட்டுதல்
(மஞ்சள் கயிறு கட்டுதல்) என்பது தமிழர் பண்பாட்டில் இருந்துவரும்
குறிப்பிடத் தக்க நிகழ்வாகும். திருமணச் சடங்கில் தாலி கட்டுதலே
மிகவும் முக்கியமானது. மங்கல அணியான தாலியை ஒரு தாம்பூலத்தில்
வைத்துத் தேங்காய், பூ, மஞ்சளில் புரட்டிய அரிசி இவற்றுடன்
பெரியவர்களிடம் ஆசி வாங்குவர். பின்னர் கெட்டி மேளம் முழங்க,
மங்கலப் பெண்கள் குலவைவிட மணமகன் மணமகள் கழுத்தில் தாலி
கட்டுவார். தாலி கட்டும் போது மூன்று முடிச்சுப் போட வேண்டும்
என்பது மரபாகும். பெரியோர்களிடம் அங்கீகாரத்தையும் வாழ்த்தையும்
பெறுவதே தாலி கட்டுதலின் நோக்கமாகும். நாட்டுப்புற மக்களின்
திருமணத்தில் வைதீக மரபுகள் (பிராமணர்கள் மந்திரம் ஓதுவது,
வேள்வித்தீ வளர்ப்பது) இடம் பெறுவதில்லை என்பது இங்கு மனத்தில்
கொள்ளத் தக்கது. திருமணச் சடங்குகள் வாழ்க்கை ஒப்பந்தத்தை
உறுதிப் படுத்தவும் பெரியோர்களின் ஆசிகளைப் பெறவும் மேற்கொள்ளப்
படுகின்றன எனலாம்.

வளைகாப்புச் சடங்கு


     திருமணமாகிக் கருவுற்ற பெண்ணுக்கு ஐந்து, ஏழு அல்லது
ஒன்பதாவது மாதத்தில் வளைகாப்புச் சடங்கு நடத்துவது நாட்டுப்புற
மக்களின் மாறாத வழக்கமாக உள்ளது. இது கட்டுச் சோறு கட்டுதல்,
சோறாக்கிப் போடுதல், சீமந்தம் செய்தல் என்று நாட்டுப் புறங்களில்
வழங்கப் படுவதுண்டு. பெண் வீட்டாரும் அவர்தம் உறவினர்களும்
பல்வேறு உணவு வகைகளைச் சமைத்து மாப்பிள்ளையின் வீட்டிற்கு
எடுத்துச் சென்று பெண்ணுக்கு வளையல் அணிவித்து வளைகாப்பு
நடத்திப் பிள்ளைப் பேற்றிற்காகப் பெண்ணைத் தாய் வீட்டிற்கு
அழைத்து வருவர். இதுவே வளைகாப்புச் சடங்காகும். பிள்ளைப் பேறு
என்பது பெண்ணிற்கு மறுபிறவி போன்றதாகும். கருவுற்ற பெண்ணிற்கும்
பிறக்கப் போகும் குழந்தைகளுக்கும் எவ்விதத் துன்பமும் நேர்ந்துவிடக்
கூடாது. தாயும் சேயும் நலமுடன் இருக்க வேண்டும் என்பதற்காக
வளைகாப்புச் சடங்கு நிகழ்த்தப்படுகிறது.

1.3.4 இறப்புச் சடங்கு


    மனிதன் பிறப்பதற்கு முன்பே தொடங்கும் சடங்குகள் அவன் இறந்த
பின்பும் தொடர்கின்றன. இறந்தோருக்காகச் செய்யப்படும் சடங்குகளே
இறப்புச் சடங்குகள், ஈமச் சடங்குகள், ஈமக் கிரியைகள் என
வழங்கப்படுகின்றன. நாட்டுப் புறங்களில் ஒருவர் இறந்தவுடன் நிறை
மரக்காலில் நெல்லை நிரப்பி அதன்மேல் விளக்கேற்றி வைக்கும்
வழக்கம் உள்ளது. இறந்தவரின் உயிர் ஒளியாக - சோதியாக
மாறியுள்ளது என்பதைக் குறியீடாய் இச்செயல் உணர்த்துகிறது.

கொள்ளி வைத்தல்


    இறப்புச் சடங்கில் கொள்ளி வைத்தல் என்பது மிக முக்கியமான
சடங்காகும். சுடுகாட்டில் உடலுக்கு எரியூட்டும் முன் இறந்தவரின்
மகன் நீர் நிறைந்த கலயத்தைத் தோளில் வைத்து மூன்று முறை
உடலை வலம் வந்து குடம் உடைத்துக் கொள்ளி (தீ) வைக்கும்
நிகழ்வே கொள்ளி வைத்தல் என்பதாகும். தாய் இறந்தால் தலைமகனும்
தந்தை இறந்தால் இளைய மகனும் கொள்ளி வைக்க வேண்டும்
என்ற வழக்கம் இன்று இருந்து வருகின்றது. வயதாகியோ, நோய்வாய்ப்
பட்டோ இயல்பாக இறப்போர்க்கு மட்டுமே இறப்புச் சடங்குகள்
மேற்கொள்ளப் படுகின்றன. அகால மரணம் அடைந்தோருக்கு (விபத்து,
கொலை, தற்கொலை) எவ்விதச் சடங்கும் நிகழ்த்தப் படுவதில்லை
என்பது குறிப்பிடத் தக்கதாகும்.


     ஆதி மனிதர்களிடம் முதன்முதலில் தோன்றிய சடங்குகள்
ஈமச் சடங்குகளே என்று கூறுவதுண்டு. இறந்தோரைப் புனிதப்
படுத்துவதற்காகவும் இறந்தோரால் எவருக்கும் எத்தகைய தீங்கும்
விளையக் கூடாது என்பதற்காகவும் இறப்புச் சடங்குகள் கடைப்பிடிக்கப்
படுகின்றன எனலாம். இறந்தோருக்காகப் பாடப்படும் ஒப்பாரிப்
பாடல்கள் நாட்டுப்புற இலக்கியத்திற்குக் கிடைத்த கொடையாகும்.

தன்மதிப்பீடு : வினாக்கள் - I

1.

மரபு என்பதற்கு நன்னூலார் கூறும் விளக்கம் யாது?

விடை
2.

சடங்குகளை வகைப்படுத்தி எழுதுக.

விடை
3.

சேனை தொடுதல் என்றால் என்ன?

விடை
4.

தமிழர்தம் இருவகைத் திருமண முறைகள் எவை?

விடை
5.

இறப்பின் போது பாடப்படும் நாட்டுப்புறப்
பாடலின் பெயரைக் குறிப்பிடுக.

விடை