1.3
திருக்குறளும் சமயமும்
|
‘ஒன்றே
குலம் ஒருவனே தேவன்’, ‘யாதும்
ஊரே
யாவரும்கேளிர்’ என்பன போன்ற உயர்ந்த சிந்தனைகள்
யாரிடமிருந்து வெளிப்படும்? எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல்,
மனித நேயத்துடன் சிந்திக்கும் உயர்ந்த நோக்கம் கொண்ட,
சிறந்த பண்பும், பரந்த
மனப்பான்மையும்
கொண்டவர்களிடமிருந்தே வெளிப்படும். இத்தகைய சிறந்த
சிந்தனையாளர்களின் பாரம்பரியத்தைச் சார்ந்தவர் திருவள்ளுவர்.
|
உலகிலுள்ள மனிதர் அனைவரையும் ஒரு குடும்பமாகக் கருதியவர்
வள்ளுவர். வேறுபாடற்ற சமுதாயத்தைக் காண
விழைந்தவர்
வள்ளுவர். எனவே திருக்குறளில் அவர் கூறிய கருத்துகள்
அனைத்தும் பொதுத்தன்மை கொண்டவை.
எல்லாச்
சமயத்தவருக்கும் பொருந்துகின்றவை. இதனால், திருக்குறளை
எல்லாச் சமயத்தவரும் போற்றுகின்றனர். சமயம்,
கடவுள்
முதலியன பற்றி குறளில் இடம் பெற்றிருக்கும் கருத்துகளைக்
கற்றால் இவ்வுண்மை வெளிப்படும்.
|
1.3.1 கடவுள் கொள்கையும் குறளும்
|
‘கடவுள்’
என்ற தமிழ்ச் சொல்லுக்கு எல்லாம் ‘கடந்தவர்’ (கடவு =
கடத்தல்) என்று பொருள் கூறுவர். எல்லாம் கடந்தவர் என்றால்,
பற்று, பாசம் முதலிய எல்லாவற்றையும் கடந்த ஒரு
நிலை.
இதைத் திருக்குறள் ‘பற்றற்றார்’ என்று குறிப்பிடுகிறது. யாரை
வழிபாடு செய்ய வேண்டும்? என்று கேட்பார்க்கு,
பற்றை
முற்றிலும் விட்டு விடுகின்ற, பற்று இல்லாதவர்களை வணங்குங்கள் என்கிறதுதிருக்குறள்.
|
பற்றுக
பற்றுஅற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு
|

(குறள்:350)
|
|
(அற்றான் = இல்லான்)
இந்த
உலகிலுள்ள பற்றிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்வதற்கு
உரிய ஒரே வழி, எந்தப் பற்றும் இல்லாதவனாகிய இறைவனைப்
பற்றவேண்டும் என்பதே.
|
• பற்று
|
இந்தக்
குறளில் ‘பற்று அற்றான்’
என்ற சொல்
கையாளப்பட்டுள்ளது. இது யாரைச் சுட்டும்? கடவுளைச் சுட்டும்.
எவ்வாறு? உலகிலுள்ள உயிரினங்கள் அனைத்தும் ஏதாவது
ஒன்றின் மீது பற்றுக் கொண்டிருக்கும். இல்லற வாழ்க்கையைத்
துறந்து வாழும் துறவிக்குக் கூட, துறவறத்தின் மீது ஒரு பற்று
வருகிறது. எனவே எந்தவிதப் பற்றும் இல்லாத
ஒருவன்
இறைவனே. அவனைப் பற்றுங்கள் - வழிபடுங்கள் என்று
குறிப்பிடுகிறது திருக்குறள்.
|
• பொதுமை
|
மேலும்,
கடவுளைப் பற்றி விளக்கும்போது, கடவுள்
விருப்பு
வெறுப்பிற்கு அப்பாற்பட்டவன் என்பதனையும்
திருக்குறள்
குறிப்பிடுகிறது. நல்வினை, தீவினை என்ற இரண்டும் இல்லாதவன்
என்று குறிப்பிடுகிறது. இவை எல்லாம் ஒரு
குறிப்பிட்ட
சமயத்திற்கு உரியனவா? இல்லையே! எந்த ஒரு சமயத்தோடும்,
அல்லது எல்லா கடவுளோடும் பொருந்தும் பொதுத்தன்மை
உடையன. இவ்வாறு எந்த ஒரு சார்பும் இல்லாமல் கடவுளைப்
பற்றிய விளக்கம் பல இடங்களில் இடம் பெற்றுள்ளன. இவை
எல்லாச் சமயத்திற்கும் பொதுவானவை. எனவே, குறள் கூறும்
‘கடவுள்’ கொள்கை, எல்லாச் சமயத்தினரும்
ஏற்றுக்
கொள்ளுகின்ற ஒன்று. எனவே, திருக்குறள் ஒரு பொதுமறை
என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
|
• சார்பு இல்லாதது
|
பொதுவாகக்
‘கடவுள்’ என்பது பற்றிய கருத்துகள் திருக்குறளில்
கூறப்படுகின்றன. ஆனால் அதில் எந்தச் சமயச்சார்பும் இல்லை.
மனிதன்
கல்வி கற்று அறிவைப் பெருக்கிக் கொள்கிறான்.
கல்வியும் அறிவும் எவ்வளவு வளர்ந்தாலும் மனிதன் அந்தத்
துறைகளில் முழுத்தூய்மை பெறுவது இல்லை. மனித அளவில்
மூன்று குறைகள் குறிப்பிடத்தக்கனவாக உள்ளன.
அறிவு
பெருகப் பெருக அறியாமையும்
நிழல்போல்
தொடருகிறது. அறிவுப் பெருகப் பெருக ஐயமும் விடாமல்
தொடருகிறது. அறிவு பெருகப் பெருக ஒன்றை வேறொன்றாகக்
கொள்ளும் மருட்சி தோன்றுகிறது. இவற்றைக் குறள், இருள்,
ஐயம், மருள், என்று குறிப்பிடுகிறது. எனவே, இருள், ஐயம்,
மருள் ஆகிய மூன்றும் நீங்கிய ஒருவன் இறைவன். அவன்
‘வாலறிவன்’ என்று சுட்டப்படுகிறது.
இவ்வாறு
எந்த ஒரு சார்பும் இல்லாமல், கடவுளைப் பற்றிய
விளக்கம் குறளில் பல இடங்களில் இடம் பெற்றுள்ளன.
|
1.3.2 இம்மையில் வீடுபேறு
|
சமய
ஞானிகள், இந்த உலகம் துன்பம் நிறைந்தது. இது நிலை
இல்லாதது, பொய்யானது, மாயமானது என்று கூறுவார்கள்.
துன்பம் இல்லாத, இன்பம் நிறைந்த,
சொர்க்கமே
நிலையானது, உண்மையானது என்பர். எனவே உலக வாழ்வில்
எந்தவிதப் பற்றும் இல்லாமல் இருக்கவேண்டும் என்பர்.
ஆனால்
திருவள்ளுவர், இந்த உலக வாழ்க்கையைக் கண்டு
அஞ்ச வேண்டாம். இங்கு இன்பம் உண்டு. அமைதி உண்டு
என்று கூறுகிறார். நல்ல நெறியை - நல்ல
ஒழுக்கத்தைப்
பின்பற்றினால், துன்பம் இல்லை. வாழ்வில் முழுமை கிடைக்கும்.
வீடுபேறு எனும் சொர்க்க இன்பம் இங்கேயே கிடைக்கும்.
இவ்வுலகிலேயே இறைவனை அடைய வழி செய்யும் இந்தக்
கருத்துகளைக் கீழே குறிப்பிடும், குறள் வெளிப்படுத்துகிறது.
|
வையத்துள்
வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
|

(குறள்:50)
|
|
‘வையம்’ என்றால் இந்த உலகம், ‘வாழ்வாங்கு’
என்பதற்கு
வாழவேண்டிய நல்ல வழியில் வாழ்வது என்பது பொருள். ‘வான்’
என்றால் வீடுபேறு அல்லது சொர்க்கம். ‘உறைதல்’
என்றால்
தங்குதல் என்று பொருள்.
இந்த
உலகத்தில், வாழவேண்டிய முறையில் ஒழுக்கமாக
வாழ்ந்தால், மேல் உலகம் எனும் வீடுபேற்றில்
எத்தகைய
சிறப்பு, இன்பம் முதலியன கிடைக்கும் என்று நம்புகிறோமோ
அவை இந்த உலகத்திலேயே கிடைக்கும். எனவே இந்த உலக
வாழ்வை வெறுக்காதீர். இந்த உலகிலும் பற்றுக் கொள்ளுங்கள்
என்று கூறுகிறார் வள்ளுவர். இவ்வாறு சமயவாதிகளுக்கும்
மாறுபட்ட கருத்தை வழங்குகிறார் வள்ளுவர்.
|