3.5 தொகுப்புரை

முடியாட்சிக் காலத்தில் வாழ்ந்த வள்ளுவர், அரசியல் அமைப்பில்,
அரசனுக்கு அடுத்த நிலையிலிருந்த அமைச்சனின், தகுதிகள்,
கடமைகள், ஆற்றல்கள் ஆகியவற்றிற்குரிய இலக்கணங்களைக்
குறிப்பிடுகிறார்.

ஓர் அமைச்சன், தனக்கு இயற்கையாக அமைந்திருக்கும்
கூர்மையான அறிவோடு, ஆட்சிக்குத் தொடர்பான மேலும்
பலநூல்களைக் கற்பானானால் அவனால் செய்ய முடியாத செயல்
என்று எதுவுமே இருக்க முடியாது. எனவே அரசனுக்கு உரிய
தகுதிகளில் அது முதலில் கூறப்படுகிறது. அதைப்போல, அறனை
அறிந்து, பிறர் மனம் புண்படாதவாறு, நன்மை விளைவிக்கும்
சொற்களைச் சொல்லும் தன்மையும் அமைச்சனுக்குரிய தகுதிகள்
என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

ஒரு     செயலை     மேற்கொள்ளும்போது, காலத்தையும்,
வழிமுறையையும் மனத்திற்கொண்டு ஆய்ந்து செயல்படவேண்டும்.
நாட்டின் நலனையும், அரசனின் ஆட்சிச் சிறப்பையும் கருதும் அமைச்சன், மன்னனிடம் இருந்து நீக்குவோரை நீக்கி, சேர்க்க வேண்டியவர்களைச் சேர்த்து மன்னனையும் நாட்டையும்
காப்பாற்றவேண்டும். இவை ஓர் அமைச்சனுக்கு உரிய
ஆற்றல்களாக வள்ளுவரால் குறிக்கப்பட்டுள்ளன.

நாட்டின் நடப்பிற்கு ஏற்ப, ஊரோடு ஒத்துச் செல்கின்ற
செயல்பாடும், அரசன் ஏற்றுக் கொண்டாலும் கொள்ளாவிட்டாலும்
நாட்டின் நன்மை கருதி அறிவுரை கூறும் தன்மையும் ஓர்
அமைச்சனுக்கு உரிய கடமைகளாகக் கூறப்பட்டுள்ளன.

உடனிருந்தே கெடுக்கும் தீய எண்ணம் கொண்டோரையும், திறமை
இல்லாதோரையும் அமைச்சனாகக் கொள்ளக் கூடாது. அவர்களால்
தீமையே விளையும் என்கிறார் வள்ளுவர்.



தன் மதிப்பீடு : வினாக்கள் - II


1.


அமைச்சனின் கடமைகளாக எவை
சுட்டப்படுகின்றன?

2.

கடமை உணர்வு கொண்ட அமைச்சன் எதைச்
செய்ய வேண்டும்?

3.

நன்மை செய்வது போல் தீமை செய்யும்
அமைச்சன் எதற்குச் சமம்?

4.

ஆற்றல் இல்லாத அமைச்சனால் என்ன விளையும்?

5.

எத்தகையோரை அமைச்சராக ஏற்றுக் கொள்ள
இயலாது?