4.2 நாடும் பகையும்

E

ஒரு நல்ல நாட்டிற்கு எவை எவை இருக்க வேண்டும் என்று
கூறிய வள்ளுவர், இருக்கக் கூடாதென எவை எவை
என்பவற்றையும் கூறுகிறார்.

போட்டி, பொறாமை, பேராசை, ஆதிக்கவெறி, எல்லைத் தகராறு
முதலிய பல காரணங்களால் நாடுகளுக்கு இடையே பகை
ஏற்படுவது உண்டு. பகையினால் போர் நிகழும். அதனால்
பொருள் சிதைவும், உயிர் அழிவும், அமைதி இன்மையும்,
பாதுகாப்பு இன்மையும் ஏற்படும். அவற்றால் நாட்டின் முன்னேற்றம்
தடைபடும். பொருளாதாரநிலை பாதிப்பு அடையும்.

எனவே, ஒருநாடு அழியாச் செல்வமும், நல்ல விளைபொருளும்
உடைய நல்லநாடாக அமைய வேண்டுமானால், பகை இல்லாது
இருக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர்.


4.2.1 உள்பகை

நாடுகளுக்கு இடையே ஏற்படும் பகை நாட்டிற்கு அழிவை
ஏற்படுத்தும். பகையிலும், உள்நாட்டுப்பகை மிகப்பெரிய அழிவைக்
கொடுக்கும் என்பது வள்ளுவர் கருத்து.

இலங்கையில் பல ஆண்டுகளாக அமைதி இன்மை ஏற்பட்டுள்ளது.
பொருளாதார வளர்ச்சி இன்மையும் காணப்படுகிறது. இதற்கு என்ன
காரணம்? உள்பூசல். இதனால் தான் வள்ளுவர்.


பல்குழுவும் பாழ் செய்யும் உட்பகையும் வேந்து அலைக்கும்



கொல்குறும்பும் இல்லது நாடு
(குறள்:735)


என்று குறிப்பிடுகிறார்.


பல இனங்களாகப் பிரிந்து நிற்றல்,
ஒருவருக்கு     ஒருவர் பகையை
வளர்த்துக் கொள்ளுதல் என்பவை,
ஒரு நாட்டுக்கு உள்ளேயே அமைதி
இன்மையையும்     குழப்பத்தையும்
ஏற்படுத்தும். அதனால் உடனிருந்தே
கேடுசெய்யும்     உள்பகையும்,
போராட்டங்களும்     நிகழும்.
ஆட்சியாளர்களை     வருத்துகின்ற
கொலைத் தொழிலும் நடைபெறும்.


இவை இல்லாது ஒரு நாடு அமைய வேண்டும் என்பது வள்ளுவர்
கருத்து.

மேலும் இன்னொரு இடத்தில் உள்பகையைப் பற்றிக் குறிப்பிடும்
போது, நமக்கு இன்பம் தரக்கூடிய நிழலும், நீரும் துன்பம்
தருமானால் அவை நமக்கு மிகுந்த கேடுகளை விளைவிக்கும்.
அதுபோல, உள்நாட்டில் பகை மிகுந்தால் நாட்டுக்குக் கேடு
விளையும் என்று வள்ளுவர் சுட்டுகிறார்.

உலகின் பலநாடுகள்,     உள்நாட்டின் இனப்பிரிவுகளினாலும்,
முரண்பாடுகளினாலும் ஏற்பட்டுள்ள போராட்டங்களினால் பெரும்
அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய உள்பகை அல்லது
உள்நாட்டுப் போர்ச்சூழல் ஏற்படாத வகையில் ஒரு நாடு இருக்க
வேண்டும் என்று வள்ளுவர் வலியுறுத்துகிறார்.

முடியாட்சிக் காலத்தில் வாழ்ந்தவர் வள்ளுவர். அக்காலச் சூழலில்
சொல்லப்பட்ட கருத்துகள்     குடியாட்சி மலர்ந்த பல
நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் இன்றும் பொருந்துகிறது. இது
எதை வெளிப்படுத்துகிறது? வள்ளுவரின் உயர்ந்த சிந்தனையையும்,
எல்லாக் காலத்திற்கும் பொருந்துகின்ற வகையிலான உலக உண்மைகளை     வெளியிடும்     அவரது மதிநுட்பத்தையும்
வெளிப்படுத்துகிறது.


4.2.2 புறப்பகை

ஒரு நாட்டில், வறுமையின் காரணமாக ஏற்படும் மிகுதியான பசி
நாட்டிற்குக் கேடு விளைவிக்கும். தொடர்ந்து வந்து கொண்டே
இருக்கும் நோயும் நாட்டிற்குத் துன்பத்தைக் கொடுக்கும்.
அதைப்போல், நாட்டிற்கு வெளியே இருந்து வரும் பகைவர்களும்
அழிவைப் கொடுப்பார்கள்.


தன் நாட்டைச் சுற்றிப் பகையை வளர்த்துக் கொண்டு ஆட்சி
செய்யும் மன்னனுக்கு அமைதி இருக்காது. மக்களுக்கும் அமைதி
இருக்காது. எந்த நேரத்திலும் பகைவன் படை எடுக்கலாம் என்ற
அச்சத்தோடு, அமைதி இல்லாது இருப்பார்கள். இந்த நிலைமை
தவிர்க்கப்பட வேண்டும். எனவே,
இத்தகையை நிலைமை இல்லாது
இருப்பதுவே சிறந்த நாட்டின் தன்மை என்கிறார் வள்ளுவர்.


உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேராது இயல்வது நாடு



(குறள்:734)


ஒரு நாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்று குறிப்பிடும்போது,
பசியால் வாடும் மக்கள் இல்லாது இருக்க வேண்டும். நோயினால்
பாதிக்கப்படுதல் இல்லாது இருக்க வேண்டும். அதைப் போல,
அழிவு தரக்கூடிய பகையும் இல்லாது இருக்க வேண்டும் என்கிறார்
வள்ளுவர்.

மிகுந்த பசி உடலை மட்டுமல்ல, சில நேரங்களில் உயிரைக்கூட
பாதித்து விடும். நோயும் உடலையும் உயிரையும் பாதிக்கும்.
பகையையும் வளரவிட்டால், அவை மிகுந்த சேதங்களை
விளைவிப்பதோடு,     நாட்டின் அழிவிற்கே காரணமாக
அமைந்துவிடும் என்று எச்சரிக்கிறார் வள்ளுவர். எனவே, அவை
இல்லாது அமைந்திருப்பதே நாடு என்று குறிப்பிடுகிறார்.


தன் மதிப்பீ்டு : வினாக்கள் - I

  1. நாடு என்று அழைப்பதற்கு என்னென்ன
    தகுதிகள் வேண்டும்?
  1. ஒரு நாட்டின் செல்வம் எதை
    அடிப்படையாகக் கொண்டு அமையும்?
  1. ஒரு நாட்டின் செல்வம் அழியாத்தன்மை
    உடையதாக இருக்க வேண்டும் என்பதற்கு
    வள்ளுவர் கூறும் காரணங்கள் யாவை?
  1. ஒரு நாட்டிற்கு எவையெல்லாம் கூடாது
    என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார்?