6.2 நொச்சித் திணையும் அதன் துறைகளும்

    பகை மன்னன் ஒருவன், தனது மதிலின் புறத்தே சூழ்ந்து,
உழிஞை சூடி, முற்றுகையிடும்போது, மதிலுக்குரிய அரசன்
நொச்சிப் பூவை அல்லது மாலையைச் சூடி மதிலைக் காத்து
நிற்பது நொச்சித் திணை கும். நொச்சித் திணை எட்டுத்
துறைகளை உடையது. அவை:

(1) மறனுடைப்பாசி
(2) ஊர்ச்செரு
(3) செருவிடை வீழ்தல்
(4) குதிரை மறம்
(5) எயிற்போர்
(6) எயில்தனை அழித்தல்
(7) அழிபடை தாங்கல்
(8) மகள் மறுத்து மொழிதல்

என்பனவாம். இவற்றோடு திணை ஒன்றனையும் கூட்டித் ‘திணையும்
துறையும் ஒன்பது’ என்பர் ஆசிரியர்.

6.2.1 மறனுடைப் பாசி

    பாசி - நீர்த்தாவரம். இது நீக்க நீங்கும்; நீக்குவதை
ஒழிப்பின், படர்ந்து கூடும். அதுபோல, மறவர்கள் ஒதுங்கியும்
மீதூர்ந்தும் போரிடுவர். ஆதலால், அவர்களது மறம் தோன்ற
உவம முகத்தான் மறனுடைப் பாசி எனப் பெயரிட்டனர்.

    இவ்வுவமத்தை உழிஞையார்க்கு ஆக்கி, நீர்ப்பாசியைப்
போன்று நீங்காமல் மதில் புறத்தே படர்ந்திருந்த உழிஞையாரைக்
கலக்கிய நொச்சி மறவர்களின் மற மாண்பு கொல்லப்படுதலின்
மறனுடைப் பாசி எனப் பெற்றதாகவும் கூறுவது உண்டு.

  • கொளுப் பொருளும் கொளுவும்

    நொச்சியான், மதிலை முற்றிய (வளைத்த) உழிஞையானுடன்
பொருது, புறங்கொடாது, போர்க்களத்தில் இறந்ததன் காரணமாக
வீரசுவர்க்கத்திற்குச் சென்றதை உரைப்பது மறனுடைப் பாசி
என்னும் துறையாம்.

    மறப்படை மறவேந்தர்
    துறக்கத்துச் செலவுஉரைத்தன்று.

எடுத்துக்காட்டின் கருத்து

    அரணைச் சூழ்ந்து ஏறும் உழிஞையாரை நொச்சி மறவர்கள்
வெட்டினர்; அவரது படையைத் தடுத்தனர். பிறகு மாய்ந்தனர்
என்பது.

துறையமைதி

    உழிஞை மறவர் நீர்ப்பாசியைப்போல, நொச்சியாரது
ஊர்ப்புறத்தில் சூழ்ந்து இருந்ததும், அவர்கள் அழியும்படி நொச்சி
மறவர்கள் பரவி, உழிஞையாரின் படையை விலக்கியதும் சேர்ந்து
வருதலால் துறைப்பொருள் பொருந்துவதை உணர்கின்றோம்.

6.2.2 ஊர்ச்செரு

    அரணின் புறத்தே அமைந்த ஊரின்கண் உழிஞையாரொடு
நொச்சியார் போரிடுவது பற்றி ஊர்ச் செரு எனப் பெற்றது.

  • கொளுப் பொருளும் கொளுவும்

    ஊர்ச்செருவாவது, நொச்சி மறவர்கள் தங்களுடைய
காவற்காடும் அகழியும் ஆகிய இவை உழிஞை மறவரால் சிதைவு
அடையாதபடி போர் செய்த சிறப்பினை உரைப்பதாகும்.

    அருமிளையோடு கிடங்குஅழியாமைச்
    செருமலைந்த சிறப்புரைத்தன்று.


(மிளை = காவற்காடு; கிடங்கு = அகழி)

எடுத்துக்காட்டின் கருத்து

    உழிஞையார், சங்கும் கொம்பும் முழங்க வந்து வாளை வீசி,
நொச்சியாரின் காவற் காட்டையும் அகழியையும் சிதைத்தனர்.
சிதைத்த உழிஞையாரின் படை கெட்டோடும்படியும், மீண்டும்
வாராதபடியும் நொச்சியார் தடுத்து ஆரவாரம் செய்தனர்.

துறையமைதி

    நொச்சி மறவரின் மதிலும் அகழியும் காவல் உடையன.
அதனைக் குலைக்கும் வண்ணம் உழிஞையார் ஊர்ப்புறத்தே
படர்ந்திருந்தனர். அவர்களை ஓடச் செய்தனர் நொச்சியார்
என்பதில் துறைப்பொருள் உள்ளது உணரப்படும்.

6.2.3 செருவிடை வீழ்தல்

    உழிஞையார், மிளையும் கிடங்கும் அழிப்பதைத் தடுக்க
ஆற்றிய போரில் நொச்சி மறவன் வீழ்ந்துபட்டதைச் சொல்வதால்,
செருவிடை வீழ்தல் என்னும் பெயரைப் பெற்றது.

  • கொளுப் பொருளும் கொளுவும்

    அழகுடைய அகழி, காவற்காடு ஆகியவற்றை உழிஞை
மறவரிடமிருந்து காத்து வீழ்ந்துபட்ட நொச்சி மறவர்களது திறலை
மிகுத்துக் கூறுவது செருவிடை வீழ்தல் என்னும் துறையாம்.

    ஆழ்ந்துபடு கிடங்கோடு அருமிளை காத்து
    வீழ்ந்த வேலோர் விறல்மிகுத் தன்று.

எடுத்துக்காட்டின் கருத்து

    சிங்கம் போன்ற நொச்சி மறவர்கள்     தங்கள்
காவற்காட்டினையும், நீண்ட அகழியையும் காக்கக் கருதித் தங்கள்
உடம்போடு உயிரையும் காவாதவராயினர். அஃதாவது, காக்கும்
முயற்சியில் களத்தில் இறந்துபட்டனர் என்பதாம்.

துறையமைதி

    நொச்சியார் தம் எயில் காப்பதும், காக்கும் போரில் உயிர்
நீத்தலும் இடம் பெற்றுத் துறைப் பொருள் பொருந்துவதைக்
காண்கின்றோம்.

6.2.4 குதிரை மறம்

    குதிரையின் மறப்பண்பு குதிரை மறம் எனப் பெற்றது.

  • கொளுப் பொருளும் கொளுவும்

    அம்பினை எய்யும் தொழிலால் சிறப்புப் பெற்ற நெடிய
எயிலகத்தே, நொச்சியாரது தாவும் இயல்புடைய குதிரையின்
மறத்தை விரிவாகச் சொல்வது குதிரை மறம என்னும்
துறையாகும்.

    ஏமாண்ட நெடும்புரிசை
    வாமானது வகைஉரைத்தன்று.

(வாமா
= தாவும் குதிரை)

எடுத்துக்காட்டின் கருத்து

    மலைபோல் உயர்ந்த மதில்மேல் ஒப்பனை செய்யப் பெற்ற
குதிரை ஒன்று, உழிஞையாரின் உயிரை உண்ண மேகம்போல் ஓடி
வருகின்றது. அதனைத் தடுக்காதீர் என்பது கருத்து.

துறையமைதி

    பொங்கிப் பாய்ந்து வரும் குதிரை, மேகம் நீரைப்
பருகுவதில் தப்பாதது போல மாற்றார் உயிரைப் பருகுவதில் பிழையாது என்றமையால், குதிரையின் மறப்பண்பு விளங்கித்
தோன்றுகிறது. குதிரையின் மறப்பண்பைச் சிறப்பிப்பது தானே
குதிரை மறம்.


6.2.5 எயிற்போர்

    மதிலிடத்து இருந்து நொச்சி மறவர் செய்யும் போரினைக்
கூறுவதால், எயிபோர் என்னும் குறிபெற்றது இத்துறை.

  • கொளுப் பொருளும் கொளுவும

    கூர்மையான போர்க் கருவியால் அரணைக் காக்கின்ற
நொச்சி மறவரின் போர்ச் செயலைச் சிறப்பித்துப் பேசுவது,
எயிற்போர் என்னும் துறையாம்.

    அயில்படையின் அரண்காக்கும்
    எயில்படைஞர் இகல்மிகுத்தன்று.

எடுத்துக்காட்டின் கருத்து


    மதிலின் உள்ளேயிருந்த நொச்சி மறவர்கள், தமது மார்பில்
இரத்தம் ஒழுகவும் பொருட்படுத்தாதவர்களாய்ப் பொங்கி, மானமே
பொருளெனக் கொண்டு எயிலின் வெளியே வந்து உழிஞை
மறவரைக் கொல்வதற்கு விரும்பினார்கள்.

துறையமைதி

    தமது மார்பில் குருதி பரந்து சோரும் போதும்,
விழுப்புண்ணுக்கும் நோய்க்கும் வருந்தாமல், வீர உணர்வோடு
மதிலினின்றும் புறத்தே வந்து, பகைவரைக் கொல்ல விரும்பிய
நொச்சி மறவரது தறுகண்மை பாராட்டப்படுதலான், எயிற்போரின்
இலக்கணம் பொருந்தி வருவதனை அறிகின்றோம்.

6.2.6 எயில்தனை அழித்தல்

     எயில் - மதில். இங்கு எயில் என்பது அதன்கண் காவலில்
ஈடுபட்டிருந்த மறவனுக்கு ஆகிவந்தது. இடவாகு பெயர். நொச்சி
மறவனை அழித்தமை பற்றியது ஆகலின், எயில்தனை அழித்தல
எனப்பட்டது.

  • கொளுப் பொருளும் கொளுவும்

    அழகிய மதிலிடத்து உள்ளவனும், துணிவு உடையவனும்,
கழலினைக் காலில் அணிந்தவனும் ஆகிய நொச்சி மறவன்
அழிந்து பட்டதை உரைப்பது எயில்தனை அழித்தல் என்னும்
துறையாம்.

    துணிவுடைய தொடுகழலான்
    அணிபுரிசை அழிவுஉரைத்தன்று.

எடுத்துக்காட்டின் கருத்து


தாள்கள் (கால்கள்) அரணின் அகத்தேயும் தோள்கள்
அரணின் புறத்தேயும் வீழ, வாட்படை மறவன் வானமகளிர்
கொண்டாடித் தழுவ, இறந்துபட்டான்.

    போரில் பட்டவர் விண்ணாடு எய்துவர் என்பதும்,
எய்துமவரை வானமகளிர் தழுவி வரவேற்பர் என்பதும் பண்டைத்
தமிழர் நம்பிக்கைகள்.


துறையமைதி

    தாள் அகத்தன; தோள் புறத்தன என்றது, மறவர் தலைவன்
முதுகிடாது இறந்துபட்டான் என்பதை உணர்த்துகின்றது. அதுவே,
மறவனின் அழிவை அறிவிப்பதாய் அமைந்து, துறைக் கருத்தை
முற்றுவிப்பதும் தெளிவாகின்றது.

6.2.7 அழிபடை தாங்கல்

    பகைவரால் அழிந்த படை வீறு பெற்று அரணைக் காத்தல்
காரணமாக அழிபடை தாங்கல் எனப் பெற்றது.

  • கொளுப் பொருளும் கொளுவும்

    உழிஞையாரால் நொச்சியார் படை தாழ்வுற்றது. அதனால்,
வெகுண்டு அப்படையே அரணைக் காத்தமையைச் சொல்வது
அழிபடை தாங்கல் என்னும் துறையாம்.

    இழிபுஉடன்று இகல்பெருக
    அழிபடை அரண்காத்தன்று

எடுத்துக்காட்டின் கருத்து

    உழிஞைப் படை அரணைக் கொள்வதற்குப் பகைவர்
படைகளை வீழ்த்தி எதிர்த்தது. மதில்மேல் இருந்த நொச்சிப்
படையோ, உழிஞையார் உட்புகாதவாறு வெட்டி வீழ்த்தியது.

துறையமைதி

    மதிலின் அடிப்பகுதியில் நின்று காத்த நொச்சி மறவர்கள்
பலரும், உழிஞையாரால் வெல்லப்பட்டார்கள். தம் படைஞர் அழிந்தமையைக் கண்ட மதிலின் மேல் நின்று அரண் காக்கும்
நொச்சியார் உழிஞையாரின் பாதம் அரணகத்துள் நுழையாதபடி
அவர்களைத் துணித்தனர் என்பதால், அழிபடை அரண் காத்தது
எனும் துறைப்பொருள் வெளிப்படுகின்றது.

6.2.8 மகள் மறுத்து மொழிதல்

    மகளைத் தரும்படி வேண்டியவனுக்குத் தர மறுத்ததைப்
பற்றிக் கூறுவது மகள் மறுத்து மொழிதல் எனப்
பெயரிடப்பட்டது.

  • கொளுப் பொருளும் கொளுவும்

    கொடிய பகைமை உடைய உழிஞையான் நொச்சியானின்
மகளைத் தனக்கு மணத்தில் தருமாறு வேண்ட, மதிலின்
உள்ளிருக்கும் நொச்சி மன்னன் அவனது வேண்டுகோளை
நிராகரிப்பது மகள் மறுத்து மொழிதல் என்னும் துறையாம்.

    வெம்முரணான் மகள்வேண்ட
    அம்மதிலோன் மறுத்துஉரைத்தன்று.

எடுத்துக்காட்டின் கருத்து


    முன்நாளில் கருங்கண்ணியாகிய இவளின் இடையழகை
நினைந்து, போரை ஏதுவாக வைத்து இவளை அடையலாம் என
வந்த மன்னனுடைய மறவர்களின் யானைக் கோடுகளே (தந்தங்கள்)
இவளது கட்டில் கால்கள் ஆகும்.

துறையமைதி

    மேனாளில் மகள் கேட்டு வந்த மன்னனின் யானைத்
தந்தங்கள் இவள் கட்டில் கால்களாயின என மறுத்துரைத்தலால்
துறைப் பொருள் புலனாகின்றது.

தன் மதிப்பீடு : வினாக்கள் - I
1. நொச்சி ஒழுக்கம் என்பது யாது? விடை
2. நொச்சித் திணைக்குரிய துறைகள் யாவை? விடை
3. செருவிடை வீழ்தல் என்னும் துறையை விளக்குக. விடை
4.

நொச்சி மறவர்கள் ஒதுங்கியும் மீதூர்ந்தும் பொருவது
எதனுடைய இயல்பை ஒத்துள்ளது?
விடை
5. போரில் இறந்த வீரர்கள் விண்ணாடு எய்துவர்
என்பது எந்தத் துறையால் அறியக் கிடக்கின்றது?
விடை
6. நொச்சி மன்னனுடைய மகளின் கட்டிற்கால் எதனால்
செய்யப்பட்டது? அது எதனை வெளிப்படுத்துகின்றது?
விடை