முகப்பு

தொடக்கம்

xii

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரித் தலைமைத் தமிழ்ப் பண்டிதரும், வியாகரண மஹோபாத்தியாயருமாகிய பிரமஸ்ரீ வை. இராமசாமி சர்மா அவர்களுக்கும் எமது நன்றியுரியதாகுக.

மேலும் இவ்வுரைப் பதிப்பிலுள்ள உரைக்குறிப்பு முதலியவற்றைப் படித்துப்பார்த்து அன்போடு சிறப்புப்பாயிரமளித்த, அரியகற்றாசற்றவராகிய இரு பெரும் புலவருக்கும் எமது அன்பு உரியதாகுக.

இதனை யாம் அச்சிட்டபோது அச்சுத்தாள்களை நோக்கிப் பிழைகள் வாராவண்ணம் திருத்தியும், அரும்பதவகராதி, சூத்திரவகராதி முதலியவற்றை எழுதியும் எமது மாணவர்கள் செய்த உதவியும் எம்மான் மறக்கற்பாலதன்று.

மேலும், தொல்காப்பியத்து ஏனையதிகாரங்களைப்போலவே, பொருளதிகாரத்தையும் பதித்துத் தமிழுலகிற் குதவவேண்டுமெனக் கருதி, அவ்வதிகாரத்துப் பின் நான்கியற்குமுள்ள இப் பேராசிரியருரையையும், உரைவிளக்கக் குறிப்புக்களையும் தாமே விரும்பியேற்றுப் பதித்துதவிய, ‘ஈழகேசரி’ப் பத்திராதிபரும், நெடுங்காலந் தமிழ்த்தொண்டி லீடுபட்டு உழைத்து வருபவரும், பரோபகார சிந்தை யுடையவருமாகிய ஸ்ரீமான் நா. பொன்னையபிள்ளை யவர்களுக்கும் எமது நன்றி யுரியதாகுக.

ஐரோப்பியர்களுடைய பெரும்போரினாலே உலகம் முழுவதும் இடர்ப்பட்டு மயங்கு மிக்காலத்திலே எத்துணைப் பெருஞ் செல்வரும் நினைத்தற்குமரிய இப்பெருஞ் செயலைப் பிள்ளையவர்கள் தமக்குவரு மெவ்வகையிடரையு நோக்காது மனமுவந்து செய்த பேருதவியானது, எம்மாலன்றி இத் தமிழுலகானும் என்றும் போற்றப்படத் தக்கதேயாம்.

இப்பதிப்பினை யாம் இடையூறின்றி முற்றுவித்தற்கு உயிர்த் துணையாகி அகத்தும் புறத்தும் நின்றுதவிய எமது குலதெய்வமாகிய விநாயகக் கடவுளுடைய திருவடிகளை, மனமொழிமெய்களால் சிந்தித்துத் துதித்து வணங்குதும்.

சி. கணேசையர்

______

முன் பக்கம்

மேல்

அடுத்த பக்கம்