முகப்பு

தொடக்கம்

 

உரையாசிரியர் வரலாறு

______

வ்வுரையாசிரியர் பெயர் பேராசிரியர் என்பதாகும். இவரே மரபியல் 98-ம் சூத்திரவுரையுள், “வலம்புரி முத்திற் குலம்புரி பிறப்பும்” என்னும் பொதுப்பாயிரஞ் செய்தான் ஆத்திரையன் பேராசிரியன் எனக் கூறலானே, அப்பேராசிரியர் இவர்க்கு முந்தியவரென்பதும், இவரவரின் வேறாவரென்பதும் பெறப்படும். இனி யாப்பருங்கலவிருத்தியுரையுள் “பிறை நெடுமுடிக் கறைமிடற்றரனார் பேர்மகிழ்ந்த பேராசிரியன்” எனவும் “நீர்மலிந்த வார்சடையோன் பேர்மகிழ்ந்த பேராசிரியன்” எனவும் சிவன்பெயராற் பலவிடங்களிற் புகழ்ந்து கூறப்படும் பேராசிரியரும் ஒருவருளர். அவர் செய்த யாப்பிலக்கணச் சூத்திரங்கள் அவ்வுரையுட் பலவிடங்களிற் பிரமாணமாக எடுத்துக்காட்டப்படுதலினாலும், அவ்வுரைக் கொள்கைகளை இவர் எடுத்து மறுத்தலானும் இவர் அவர்க்கும் அவ்வுரைகாரருக்கும் பிந்தியுள்ளவர் என்பது பெறப்படும். இனித் திருக்கோவையாருரையாசிரியரும் பேராசிரியர் எனப்படுதலின் அவரும் இவரின் வேறாவரென்பது அவருரைப்போக்கானே அறியப்படும். ஆயினும் சில சொல்லாட்சி ஒப்புமைகொண்டு அவரும் இவரும் ஒருவரேயாவர் என்பாரும், சில சொல்லாட்சியளவில் இருவரையும் ஒருவரெனல் கூடாதெனக் காரணங் காட்டி மறுப்பாருமுளர். சிலர் திருக்கோவையாருரையாசிரியரும், ஆத்திரையன் பேராசிரியனும் ஒருவரேயாவர் என்பர். உண்மையை ஆராய்ந்து கொள்க. இனி நேமிநாத நூலாசிரியரும் பேராசிரியர் எனப்படுகின்றார். அவர் அருகமதத்தினராதலானும் நன்னூலாசிரியருக்கு முந்தியவராதலினாலும், நன்னூற் கொள்கைகளை இவரெடுத்து மறுத்தும் உடன்பட்டுஞ் சேறலானும் அவர் இவரின் முந்தியவராவர்.

இனி, இவ்வுரையாசிரியர் தொல்காப்பியத்துக்கு உரை செய்த இளம்பூரணருக்குப் பிந்தியவரென்பது, இவர் தமதுரையுள் அவர் கொள்கைகளை எடுத்துக்காட்டி மறுத்தலானும், நச்சினார்க்கினியர்க்கு முந்தியவர் என்பது இவர் கொள்கைகளை நச்சினார்க்கினியர் தமதுரையுள் எடுத்து மறுத்தும் உடன்பட்

முன் பக்கம்

மேல்

அடுத்த பக்கம்