டும் சேறலானும், தமதுரையுள் இவர் பெயரையே எடுத்துக் கூறலானும் பெறப்படும். இவர் இளம்பூரணர் கருத்தை மறுப்பது 268-ம் 281-ம் 434-ம் 440-ம் சூத்திரவுரை முதலியவற்றாலும், நச்சினார்க்கினியரிவருரையை மறுப்பது முதலியன செய்யுளியலுரை யானும், இவர் பெயரை எடுத்துக்கூறுவது களவியல் 5-ம் சூத்திரவுரை முதலியவற்றானுமறியப்படும். வெண்பாமாலை ஐயனாரிதனாரும் இவர்க்கு முந்தியவரென்பது, அவர் பெயரை 649-ம் சூத்திரவுரையுள், எடுத்துக் கூறலானும், பாட்டியன் மரபுநூலாரும் இவர்க்கு முந்தியவரென்பது அந்நூற் பெயரை 663-ம் சூத்திரவுரையுள் எடுத்துக் கூறலானும் பெறப்படும். நன்னூலார்க்கும் இவர் பிந்தியவர் என்பது அவர் கொண்ட பகுபதமுடிபை இவர் 665-ம் சூத்திரவுரையுள் எடுத்துக்காட்டி மறுத்தலானும், அவர் சூத்திர அடிகளை எடுத்துத் தொடுத்து 660-ம் சூத்திரவுரையுட் கூறலானும் பிறவாற்றானும் அறியப்படும். இன்னும் இவர் பொருளதிகாரத்து ஏனையவியல்களுக்கும் உரைசெய்துள்ளாரென்பது 266-ம் சூத்திரவுரையுள் களவியலுட் கூறினாமென்றும் 267-ம் சூத்திர உரையுள் அகத்திணையியலுட் கூறினாமென்றுங் கூறலானும், வேறு சூத்திரவுரைகளினுங் குறிப்பாக உணரக்கிடத்தலானும் அறியப்படும். அன்றியும், இவர் முன்னையவதிகாரங்கட்கும் உரை செய்திருக்கலாமென்பது சிற்சில சூத்திரவுரைகளானே ஒருவாறு ஊகிக்கலாம். இவர் ஊர் கால முதலியன அறியமுடியவில்லை. ஆயினும் இவர் காலம் 14-ம் நூற்றாண்டளவில் இருக்கலாமெனச் சிலர் கருதுவர். ஆராய்ந்துணர்க. |