முகப்பு

தொடக்கம்

  

மெய்ப்பாட்டியற் சுருக்கம்

‘மெய்ப்பாடாவது: உலகத்தாருள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்தவாறே புறத்தார்க்குப் புலப்படுவதொருவழியால் வெளிப்படுதல்’ என்றும், ‘மெய்ப்பாடு - பொருட்பாடு’ என்றுங் கூறுவர் பேராசிரியர். பொருள் - உள்ள நிகழ்ச்சி (சுவைக்குறிப்பு). பாடு - வெளிப்படுதல். படுதல் - தோன்றல் - வெளிப்படுதல். உலகத்தாருள்ளநிகழ்ச்சி என்றது, உலகத்திலுள்ளானொருவன் ஒரு பொருளைத் தன் பொறியால் உணர்ந்தவிடத்து அப்பொருள் காரணமாக அவனுள்ளத்து நிகழும் நிகழ்ச்சி (சுவைக்குறிப்பு) என்றபடி. புலப்படுவதொருவழி என்றது சத்துவத்தினை. ஒருவனுள்ளத்தே நிகழ்வது உடம்பின் வேறுபாட்டால் தோன்றுமென்பது,

“அடுத்தது காட்டும் பளிங்குபோ னெஞ்சம்
 கடுத்தது காட்டும் முகம்.”

என்று தேவர் கூறுதலானும் அறியப்படும்.

இனி இளம்பூரணர்,

“உய்ப்போன் செய்தது காண்போர்க் கெய்துதன்
 மெய்ப்பா டென்ப மெய்யுணர்ந் தோரே.”

என்று செயிற்றியனார் கூறலின், “அச்சமு (தலியனவு) ற்றான் மாட்டு நிகழும் அச்சம் (முதலியன) அவன்மாட்டு நிகழுஞ் சத்துவத்தினாற் புறப்பட்டுக் காண்போர்க்குப் புலனாந்தன்மை மெய்ப்பாடு” என்றும், ‘மெய்யின்கட்பட்டுத் தோன்றலின் மெய்ப்பாடாயிற்று’ என்றுங் கூறுவர். உய்ப்போன் - அநுபவிப் போன் ( = சுவைப்போன் ) என்றபடி.

“காதல காத லறியாமை யுய்க்கிற்பின்
 ஏதில வேதிலார் நூல்.”

(அதி. 44--செய். 10)

என்னும் குறளுரையில் ‘உய்க்கிற்பின் - அநுபவிக்கவல்லனாயின்’ என்று பரிமேலழகர் கூறலுங் காண்க. உய்த்தல் - செலுத்தல். அஃது ஈண்டு மனத்தைச் செலுத்தி அநுபவித்தன்மேனின்றது. “உய்த்தாடித் திரியாதே உள்ளமே” என்பது தேவாரம்.

முன் பக்கம்

மேல்

அடுத்த பக்கம்