வற்றைத் தலைவனுக்காகாத மெய்ப்பாடுகள் என்பர் பேராசிரியர். இளம்பூரணர் தலைவிகண் நிகழாத மெய்ப்பாடு என்பர். சிலர் இருவருக்கும் பொது என்பர். பொருத்தம் நோக்கிக்கொள்க. இம் மெய்ப்பாடுகளெல்லாவற்றையும், பிறர் உணருங் கருவி கண்ணுஞ் செவியுமென்பர் தொல்காப்பியர். அது முன்னுங் கூறியுள்ளாம். புற மெய்ப்பாடுகள் கண்ணுஞ் செவியுமென்னு மிரண்டானுமுணர்தற்கு உதாரணம் வருமாறு:-- “இரண்டறி கள்விநங் காத லோளோ முரண்கொ டுப்பிற் செவ்வேன் மலையன் முள்ளூர்க் கான நாற வந்து நள்ளென் கங்கு னம்மோ ரன்னள் கூந்தல் வேய்ந்த விரவுமல ருதிர்த்துச் சாந்துளர் நறுங்கதுப் பெண்ணெய் நீவி அமரா முகத்த ளாகித் தமரோ ரன்னள் வைகறை யானே.” (குறுந். 312) என்பதனுள், அமராமுகத்தளாதலும் தமரோரன்னளாதலும் தலைமகன் தன் கண்ணா னோக்கியறிதலின் அது கண்ணுணர் வெனப்படும். “ஒழிகோ யானென வழிதகக் கூறி” (அகம் 110) என்புழித் தலைமகன் மனத்து நிகழ்ந்த வழிவெல்லாம், ஒழிகோயான் என்ற உரையானே தோழி உணர்ந்தமையின் அது செவியுணர்வெனப்படும். -------- |