என வருவதனாலறிதலாம். இவர் கடைச்சங்க காலத்திலிருந்த
கவிசாகரப் பெருந்தேவனார், பாரதம் பாடிய
பெருந்தேவனார் என்னும் இருவரினும், நந்திபோத வர்மன்
என்னும் பல்லவ மன்னன் வேண்டுகோளாற் பாரதம் பாடிய
பெருந்தேவனாரினும் வேறானவராவர்.
கடைச்சங்க காலம் சற்றேறக்குறைய 1800 ஆண்டுகளுக்கு முன்னதாம் என்பவாகலானும், நந்திபோத வர்மனது காலம் 9-ஆம் நூற்றாண்டு ஆகலானும், இந்நூலை இயற்றுவித்த
வீரராசேந்திர சோழ மன்னன் காலம் கி. பி. பதினோராம்
நூற்றாண்டு ஆகலானும் இந்நூலுக்கு உரையியற்றிய
பெருந்தேவனார் முற்கூறிய பெருந்தேவனார் மூவரின்
வேறானவர் என்பதில் ஐயுறவில்லை என்க.
இந்நூல் தமிழறிஞர்களாற்
பொன்னேபோலப் போற்றி வரும் இலக்கண நூல்களில்
ஒன்றாகும்.
இந்நூலின்
ழகரமெய்யானது ளகரமெய்போல வல்லெழுத்து
வரின்
டகரமெய்யாகவும், மெல்லெழுத்து வரின் ணகரமெய்யாகவும் திரிதற்கும், குறில் செறியாத
ழகரமெய், குறில் செறியாத ளகரமெய் போலத்
தகர நகரங்கள் வரின் கெடுதற்கும், ழகர மெய்யின்முன் வரும்
நகர தகரங்கள், ளகர மெய்யின் முன் திரிதல் போல முறையே
ணகரமாகவும் டகரமாகவுந் திரிதற்கும்
விதி கூறியது இந்நூற்குத் தனிச்சிறப்பாகும்;
இவற்றிற்கு விதிகள் வேறு நூற்களிற் கூறப்பட்டில.
மற்ற நூல்களிற் கூறப்படாத வேறு சில புணர்ச்சி விதிகளும் இந்நூலிற் காணப்படுகின்றன. அவற்றுள் ஒன்று, 'இ, ஈ, ஐ என்னும் உயிர்களுக்குமுன்
நகரம் ஞகரமாகத் திரியும்,' என்பது. இதனை இந்நூலின் பதினைந்தாஞ் செய்யுளிற் காண்க. இந்நூலின் உரையாசிரியராற் காட்டப்பட்ட இலக்கண மேற்கோட்சூத்திரங்களிற் பல, மற்ற நூற்களினும் உரையினுங் காணப்படாதனவாயிருக்கின்றன. அவை பழஞ் சூத்திரங்களோ, உரையாசிரியரால் இயற்றப்பட்ட உரைச்சூத்திரங்களோ என
ஐயுறத்தக்கனவாய் இருக்கின்றன.
இந்நூல், தமிழ் நூல் வளர்ச்சியின்பொருட்டுப் பெரிதும் உழைத்தவரும், அரும்புலச் செல்வருமாகிய யாழ்ப்பாணம்
சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்களால்
|