அவர்கள் எழுதிய அரிய அடிக் குறிப்புகளுடன் இரு முறை பதிப்பிக்கப் பெற்றது. அவ்விரு பதிப்பும் செலவான பிறகு இந்நூலை வாங்கிப் படிக்க விழைவார்க்கு இது கிடைத்தல் அரிதானமையைத் தமிழ் மொழியில் அளவில் ஆர்வம் உடையவரும், தமிழ் வளர்ச்சியைத் தம் வாழ்க்கை நலத்தின் வளர்ச்சியெனக் கொண்டவருமாகிய திவான் பகதூர் ச. பவானந்தம் பிள்ளை அவர்கள், I.S.O., F.R.H.S.,(London) M.R.A.S., (London) பதிப்பிக்க முயன்றார்கள். அம்முயற்சி யாது காரணத்தினாலோ தடைப்பட்டது. மேற்படி பிள்ளையவர்களால் தாம் ஈட்டிய பொருளைக்கொண்டு தமிழ் மக்களின் நன்மையினைப் பெரிதும் நாடித் தமிழ் மொழியினைப் பல வகையினும் வளர்த்தற்பொருட்டு அமைக்கப்பெற்ற பவானந்தர் கழகத்தின் தரும பரிபாலன சபையார் தம்மால் அமைக்கப்பெற்ற ஆலோசனைக் கழகத்தின் அங்கத்தினர் ஐவருள் ஒருவனாகிய என்னைப் பதிப்பாசிரியனாக ஏற்படுத்தி, முன்னே நக்கீரனார் உரையோடுகூடிய இறையனார் அகப்பொருளைப் பதிப்பித்ததுபோலப் பதிக்க என வேண்டி, மேற்படி யாழ்ப்பாணம் ராவ்பகதூர் சி. வை. தாமோதரம் பிள்ளை அவர்களால் அச்சிடப்பட்ட இந்நூலின் பிரதி ஒன்றை அளித்தனர். மேற்படி ஆலோசனைக் கழகத்தின் அங்கத்தினருள் ஒருவராகிய வித்துவான் தெ. பொ. மீனாட்சிசுந்தரம் பிள்ளை M.A., B.L., M.O.L., அவர்கள் என்னை அழைத்துச் சென்று, காகிதத்தில் எழுதப் பெற்ற கையெழுத்துப் பிரதி ஒன்றை அன்புடன் உதவினார்கள். அஃது இந்நூலின் அதிகாரங்கள் ஐந்தனுள் முதனான்கதிகாரங்களும், ஐந்தாவதாகிய அலங்காரத்தின் ஒரு சிறு பகுதியும் உடையதாகும். மேற்படி பிள்ளையவர்கள் அதனை என்பால் உதவுகையில் அது குறையுற்ற பிரதி என்பதைத் தெரிவித்தே உதவினார்கள். அதனைக் கொண்டுவந்து அச்சுப்பிரதியுடன் ஒப்பிட்டு நோக்கிய போது அதில் நூற் செய்யுட்கள் சில இடங்களில் மிக்கும் குறைந்தும் இருந்ததோடு உரையும் மிக்க பிழையினையுடையதாய் இருந்தது. ஆதலின், சென்னைப் பல்கலைக்கழக நூல் நிலையத்தைச் சார்ந்த கீழ்நாட்டுக் கலை நூல் நிலையத்திற்குச் சென்று அங்கிருந்த இந்நூலின் பிரதியை நோக்கினேன். அது மேற்படி பிள்ளையவர்கள் உதவிய பிரதியினும் பன்மடங்கு அதிகமான பிழை மலிந்ததாயிருந்தது; ஆகையால்,