போலீஸ் அஸிஸ்டெண்டு கமிஷனர் பதவியை ஏற்றனர் ; 1918-ஆம் ஆண்டு டெபுடி கமிஷனர் பதவியை மேற்கொண்டனர்.

இவர் மாட்சிமை தங்கிய சக்கரவர்த்தியாருக்கும், அரசாங்கத்திற்கும், நாட்டுக்கும் ஆற்றிய அரும்பெருந்தொண்டுகளுக்காக ஆண்டுதோறும் ஆயுள் வரையில் இவருக்கு அறுநூறு ரூபாய் நிரந்தர வருமானமளிக்கும் ஜாகீர் ஒன்று 1922-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 12-ம் தேதி முதல் பயன் தருமாறு வழங்கப்பட்டது.

இவருடைய பக்தி மிகுந்த பரிசுத்தமான பிரமசரிய வாழ்க்கையும், இனியகுணமும், சிறந்த கலையுணர்வும், வசீகரத் தோற்றமும், வணங்கிய வாக்கும், நுணங்கிய கேள்வியும், வள்ளன்மையும், அடுத்தவரை ஆதரிக்கும் நற்பண்பும் இவரை எவரும் விரும்பிப் பாராட்டும் பண்புகளாயிருந்தன. கற்றாருடன் கலந்துரையாடி மகிழ்வதிலும் பேரின்பம் வேறில்லை என்னும் கருத்துடன் இப்பெரியார் வாழ்ந்து வந்தமையின், புலவருங் கவிஞரும் போற்ற வாழ்ந்தவர் ஆவர்.

இங்ஙனம் அரசறிய வாழ்ந்து, பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தது போலவும் ஊருணி நீர் நிறைந்தது போலவும் பலர்க்கும் பயன்படுபவராய் விளங்கிய இப்பெரியார், 1932-ஆம் ஆண்டு மே மாதம் 20-ஆந்தேதி இம்மண்ணுலக வாழ்வை நீத்து விண்ணுலகத்தார்க்கு நல் விருந்தினராயினர். இறைவன் திருவடி நிழலில் இவர் ஆன்மா என்றும் நிலவி இன்பந் திளைப்பதாகுக !