ஆலம்பேரி சாத்தனார்

152. நெய்தல்
மடலே காமம் தந்தது; அலரே
மிடை பூ எருக்கின் அலர் தந்தன்றே;
இலங்கு கதிர் மழுங்கி, எல் விசும்பு படர,
புலம்பு தந்தன்றே, புகன்று செய் மண்டிலம்;
5
எல்லாம் தந்ததன்தலையும் பையென
வடந்தை துவலை தூவ, குடம்பைப்
பெடை புணர் அன்றில் உயங்கு குரல் அளைஇ,
கங்குலும் கையறவு தந்தன்று;
யாங்கு ஆகுவென்கொல்; அளியென் யானே?

மடல் வலித்த தலைவன்முன்னிலைப் புறமொழியாக, தோழி கேட்பச்சொல்லியது.-ஆலம்பேரி சாத்தனார்

255. குறிஞ்சி
கழுது கால் கிளர ஊர் மடிந்தன்றே;
உரு கெழு மரபின் குறிஞ்சி பாடி,
கடியுடை வியல் நகர்க் கானவர் துஞ்சார்;
வயக் களிறு பொருத வாள் வரி உழுவை
5
கல் முகைச் சிலம்பில் குழுமும்; அன்னோ!-
மென் தோள் நெகிழ்ந்து நாம் வருந்தினும், இன்று அவர்
வாரார்ஆயினோ நன்றுமன்தில்ல-
உயர் வரை அடுக்கத்து ஒளிறுபு மின்னிப்
பெயல் கால்மயங்கிய பொழுது கழி பானாள்,
10
திருமணி அரவுத் தேர்ந்து உழல,
உருமுச் சிவந்து எறியும் ஓங்கு வரை ஆறே!

ஆறு பார்த்து உற்றது.-ஆலம்பேரி சாத்தனார்

303. நெய்தல்
ஒலி அவிந்து அடங்கி, யாமம்
நள்ளென,
கலி கெழு பாக்கம் துயில் மடிந்தன்றே;
தொன்று உறை கடவுள் சேர்ந்த பராரை
5
மன்றப் பெண்ணை வாங்கு மடற் குடம்பைத்
துணை புணர் அன்றில் உயவுக் குரல் கேட்டொறும்,
'துஞ்சாக் கண்ணள், துயர் அடச் சாஅய்,
நம்வயின் வருந்தும், நன்னுதல்' என்பது
உண்டுகொல்?-வாழி, தோழி!-தெண் கடல்
10
வன் கைப் பரதவர் இட்ட செங் கோல்
கொடு முடி அவ் வலை பரியப் போக்கி,
கடு முரண் எறி சுறா வழங்கும்
நெடுநீர்ச் சேர்ப்பன்தன் நெஞ்சத்தானே.

வேட்கை தாங்ககில்லாளாய்த் தோழிக்குத் தலைமகள் சொல்லியது;சிறைப்புறத்தான் என்பது மலிந்ததூஉம் ஆம்.-மதுரை ஆருலவியநாட்டு ஆலம்பேரி சாத்தனார்

338. நெய்தல்
கடுங் கதிர் ஞாயிறு மலை மறைந்தன்றே;
அடும்பு கொடி துமிய ஆழி போழ்ந்து, அவர்
நெடுந் தேர் இன் ஒலி இரவும் தோன்றா;
இறப்ப எவ்வம் நலியும், நின் நிலை;
5
'நிறுத்தல் வேண்டும்' என்றி; நிலைப்ப
யாங்ஙனம் விடுமோ மற்றே!-மால் கொள
வியல் இரும் பரப்பின் இரை எழுந்து அருந்துபு,
புலவு நாறு சிறுகுடி மன்றத்து ஓங்கிய
ஆடு அரைப் பெண்ணைத் தோடு மடல் ஏறி,
10
கொடு வாய்ப் பேடைக் குடம்பைச் சேரிய,
உயிர் செலக் கடைஇப் புணர் துணைப்
பயிர்தல் ஆனா, பைதல்அம் குருகே?

ஒருவழித் தணந்த காலை ஆற்றாத தலைமகள் வன்புறை எதிர்மொழிந்தது.-மதுரை ஆருலவிய நாட்டு ஆலம்பேரி சாத்தனார்