நொச்சி நியமங் கிழார்

17. குறிஞ்சி
நாள் மழை தலைஇய நல் நெடுங்குன்றத்து,
மால் கடல் திரையின் இழிதரும் அருவி
அகல் இருங் கானத்து அல்கு அணி நோக்கி,
தாங்கவும் தகைவரை நில்லா நீர் சுழல்பு
5
ஏந்து எழில் மழைக் கண் கலுழ்தலின், அன்னை,
'எவன் செய்தனையோ? நின் இலங்கு எயிறு உண்கு' என,
மெல்லிய இனிய கூறலின், வல் விரைந்து,
உயிரினும் சிறந்த நாணும் நனி மறந்து,
உரைத்தல் உய்ந்தனனே-தோழி!-சாரல்,
10
காந்தள் ஊதிய மணி நிறத் தும்பி
தீம் தொடை நரம்பின் இமிரும்
வான் தோய் வெற்பன் மார்பு அணங்கு எனவே.

முன்னிலைப்புறமொழியாகத் தலைமகள் தோழிக்குச்சொல்லியது.-நொச்சிநியமங்கிழார்

208. பாலை
விறல் சால் விளங்கு இழை நெகிழ, விம்மி,
அறல் போல் தெள் மணி இடை முலை நனைப்ப,
விளிவு இல கலுழும் கண்ணொடு, பெரிது அழிந்து,
எவன் இனைபு வாடுதி?-சுடர் நுதற் குறுமகள்!-
5
செல்வார் அல்லர் நம் காதலர்; செலினும்,
நோன்மார் அல்லர், நோயே; மற்று அவர்
கொன்னும் நம்புங் குரையர் தாமே;
சிறந்த அன்பினர்; சாயலும் உரியர்;
பிரிந்த நம்மினும் இரங்கி, அரும் பொருள்
10
முடியாதுஆயினும் வருவர்; அதன்தலை,
இன் துணைப் பிரிந்தோர் நாடித்
தருவது போலும், இப் பெரு மழைக் குரலே?

செலவுற்றாரது குறிப்பு அறிந்து ஆற்றாளாய தலைமகள் உரைப்ப,தோழி சொல்லியது.-நொச்சி நியமங் கிழார்

209. குறிஞ்சி
மலை இடம்படுத்துக் கோட்டிய கொல்லைத்
தளி பதம் பெற்ற கான் உழு குறவர்
சில வித்து அகல இட்டென, பல விளைந்து,
இறங்குகுரல் பிறங்கிய ஏனல் உள்ளாள்,
5
மழலை அம் குறுமகள், மிழலைஅம் தீம் குரல்
கிளியும் தாம் அறிபவ்வே; எனக்கே
படும்கால் பையுள் தீரும்; படாஅது
தவிரும்காலைஆயின், என்
உயிரோடு எல்லாம் உடன் வாங்கும்மே!

குறை மறுக்கப்பட்டுப் பின்னின்ற தலைமகன் ஆற்றானாய், நெஞ்சிற்குச் சொல்லுவானாய்ச் சொல்லியது; தோழி கேட்டுக் குறை முடிப்பது பயன்.-நொச்சி நியமங்கிழார்