கொல்லிப்பாவை

185. குறிஞ்சி
ஆனா நோயோடு அழி படர்க் கலங்கி,
காமம் கைம்மிக, கையறு துயரம்
காணவும் நல்காய் ஆயின்-பாணர்
பரிசில் பெற்ற விரி உளை நல் மான்
5
கவி குளம்பு பொருத கல் மிசைச் சிறு நெறி,
இரவலர் மெலியாது ஏறும், பொறையன்
உரை சால் உயர் வரைக் கொல்லிக் குடவயின்,
அகல் இலைக் காந்தள் அலங்கு குலைப் பாய்ந்து,
பறவை இழைத்த பல் கண் இறாஅல்
10
தேனுடை நெடு வரை, தெய்வம் எழுதிய
வினை மாண் பாவை அன்னோள்
கொலை சூழ்ந்தனளால்-நோகோ யானே.

பாங்கற்குத் தலைவன் சொல்லியது; சேட்படுக்கும் தோழிக்குத் தலைவன் சொல்லியதூஉம் ஆம்.

192. குறிஞ்சி
'குருதி வேட்கை உரு கெழு வய மான்
வலி மிகு முன்பின் மழ களிறு பார்க்கும்
மரம் பயில் சோலை மலிய, பூழியர்
உருவத் துருவின், நாள் மேயல் ஆரும்
5
மாரி எண்கின் மலைச் சுர நீள் இடை,
நீ நயந்து வருதல் எவன்?' எனப் பல புலந்து,
அழுதனை உறையும் அம் மா அரிவை!
பயம் கெழு பலவின் கொல்லிக் குட வரைப்
பூதம் புணர்த்த புதிது இயல் பாவை
10
விரி கதிர் இள வெயில் தோன்றி அன்ன, நின்
ஆய் நலம் உள்ளி வரின், எமக்கு
ஏமம் ஆகும், மலைமுதல் ஆறே.

இரவுக்குறி மறுக்கப்பட்டு ஆற்றானாய தலைமகன் சொல்லியது.

201.குறிஞ்சி
'மலை உறை குறவன் காதல் மட மகள்,
பெறல் அருங்குரையள், அருங் கடிக் காப்பினள்;
சொல் எதிர் கொள்ளாள்; இளையள்; அனையோள்
உள்ளல் கூடாது' என்றோய்! மற்றும்,
5
செவ் வேர்ப் பலவின் பயம் கெழு கொல்லித்
தெய்வம் காக்கும் தீது தீர் நெடுங் கோட்டு,
அவ் வெள் அருவிக் குட வரையகத்து,
கால் பொருது இடிப்பினும், கதழ் உறை கடுகினும்,
உரும் உடன்று எறியினும், ஊறு பல தோன்றினும்,
10
பெரு நிலம் கிளரினும், திரு நல உருவின்
மாயா இயற்கைப் பாவையின்,
போதல் ஒல்லாள் என் நெஞ்சத்தானே.

கழறிய பாங்கற்குத் தலைமகன் சொல்லியது.-பரணர்