செழியன்

39. குறிஞ்சி
சொல்லின் சொல் எதிர்கொள்ளாய், யாழ நின்
திருமுகம் இறைஞ்சி நாணுதி கதுமென;
காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ?
கொடுங் கேழ் இரும் புறம் நடுங்கக் குத்திப்
5
புலி விளையாடிய புலவு நாறு வேழத்தின்
தலை மருப்பு ஏய்ப்ப, கடை மணி சிவந்த நின்
கண்ணே கதவ? அல்ல; நண்ணார்
அரண் தலை மதிலராகவும், முரசு கொண்டு,
ஓம்பு அரண் கடந்த அடு போர்ச் செழியன்
10
பெரும் பெயர்க் கூடல் அன்ன நின்
கரும்புடைத் தோளும் உடையவால் அணங்கே.

இரண்டாம் கூட்டத்து எதிர்ச்சியில் தலைவன் சொல்லியது.-மருதன் இளநாகனார்

298. பாலை
வம்ப மாக்கள் வரு திறம் நோக்கி,
செங் கணை தொடுத்த செயிர் நோக்கு ஆடவர்
மடி வாய்த் தண்ணுமைத் தழங்கு குரல் கேட்ட
எருவைச் சேவல் கிளைவயிற் பெயரும்
5
அருஞ் சுரக் கவலை, அஞ்சுவரு நனந்தலைப்
பெரும் பல் குன்றம் உள்ளியும், மற்று-இவள்
கரும்புடைப் பணைத் தோள் நோக்கியும், ஒரு திறம்
பற்றாய்-வாழி, எம் நெஞ்சே!-நல் தார்ப்
பொற்றேர்ச் செழியன் கூடல் ஆங்கண்,
10
ஒருமை செப்பிய அருமை, வான் முகை
இரும் போது கமழும் கூந்தல்,
பெரு மலை தழீஇயும், நோக்கு இயையுமோமற்றே?

தோழியால் பொருள் வலிப்பித்துத் தலைமகளை எய்தி ஆற்றாதாய நெஞ்சினை நெருங் கிச் சொல்லி, தலைமகன் செலவு அழுங்கியது.- விற்றூற்று வண்ணக்கன் தத்தனார்

340. மருதம்
புல்லேன், மகிழ்ந! புலத்தலும் இல்லேன்-
கல்லா யானைக் கடுந் தேர்ச் செழியன்
படை மாண் பெருங் குள மடை நீர் விட்டென,
கால் அணைந்து எதிரிய கணைக் கோட்டு வாளை
5
அள்ளல்அம் கழனி உள்வாய் ஓடி,
பகடு சேறு உதைத்த புள்ளி வெண் புறத்து,
செஞ் சால் உழவர் கோல் புடை மதரி,
பைங் காற் செறுவின் அணைமுதல் பிறழும்
வாணன் சிறுகுடி அன்ன, என்
10
கோள் நேர் எல் வளை நெகிழ்த்த நும்மே!

பரத்தையிற் மறுத்தந்த தலைமகனைத் தலைமகள் நொந்து சொல்லியது.-நக்கீரர்

387. பாலை
நெறி இருங் கதுப்பும், நீண்ட தோளும்,
அம்ம! நாளும் தொல் நலம் சிதைய,
ஒல்லாச் செந் தொடை ஒரீஇய கண்ணிக்
கல்லா மழவர் வில்லிடை விலங்கிய
5
துன் அருங் கவலை அருஞ் சுரம் இறந்தோர்
வருவர் வாழி-தோழி!-செரு இறந்து
ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்த
வேல் கெழு தானைச் செழியன் பாசறை
உறை கழி வாளின் மின்னி, உதுக்காண்,
10
நெடும் பெருங் குன்றம் முற்றி,
கடும் பெயல் பொழியும், கலி கெழு வானே.

பிரிவிடை மெலிந்த தலைமகளைத் தோழி பருவம் காட்டி வற்புறீஇயது.- பொதும்பில் கிழார் மகனார்