ஈந்தமரம்

2. பாலை
அழுந்துபட வீழ்ந்த பெருந் தண் குன்றத்து,
ஒலி வல் ஈந்தின் உலவைஅம் காட்டு,
ஆறு செல் மாக்கள் சென்னி எறிந்த
செம் மறுத் தலைய, நெய்த்தோர் வாய,
5
வல்லியப் பெருந் தலைக் குருளை, மாலை,
மான் நோக்கு இண்டு இவர் ஈங்கைய சுரனே;
வை எயிற்று ஐயள் மடந்தைமுன் உற்று
எல்லிடை நீங்கும் இளையோன் உள்ளம்,
காலொடு பட்ட மாரி
10
மால் வரை மிளிர்க்கும் உருமினும் கொடிதே!

உடன் போகாநின்றாரை இடைச் சுரத்துக் கண்டார் சொல்லியது.-பெரும்பதுமனார்

126. பாலை
பைங் காய் நல் இடம் ஒரீஇய செங்காய்க்
கருங் களி ஈந்தின் வெண் புறக் களரி
இடு நீறு ஆடிய கடு நடை ஒருத்தல்
ஆள் பெறல் நசைஇ, நாள் சுரம் விலங்கி,
5
துனைதரும் வம்பலர்க் காணாது, அச் சினம்
பனைக் கான்று ஆறும் பாழ் நாட்டு அத்தம்,
இறந்து செய் பொருளும் இன்பம் தரும் எனின்,
இளமையின் சிறந்த வளமையும் இல்லை;
இளமை கழிந்த பின்றை, வளமை
10
காமம் தருதலும் இன்றே; அதனால்,
நில்லாப் பொருட் பிணிச் சேறி;
வல்லே-நெஞ்சம்!-வாய்க்க நின் வினையே!

பொருள் வலித்த நெஞ்சினைத் தலைவன் நெருங்கிச் செலவு அழுங்கியது.

174. பாலை
'கற்றை ஈந்தின் முற்றுக் குலை அன்ன
ஆள் இல் அத்தத் தாள் அம் போந்தைக்
கோளுடை நெடுஞ் சினை ஆண் குரல் விளிப்பின்,
புலி எதிர் வழங்கும் வளி வழங்கு ஆர் இடைச்
5
சென்ற காதலர் வந்து, இனிது முயங்கி,
பிரியாது ஒரு வழி உறையினும், பெரிது அழிந்து
உயங்கினை, மடந்தை!' என்றி-தோழி!-
அற்றும் ஆகும், அஃது அறியாதோர்க்கே;
வீழாக் கொள்கை வீழ்ந்த கொண்டி
10
மல்லல் மார்பு மடுத்தனன்
புல்லு மற்று எவனோ அன்பு இலங்கடையே?

வினை முற்றி வந்து எய்திய காலத்து, ஆற்றாளாய தலைவியைத் தோழி வற்புறீஇ நின்றாட்கு அவள் சொல்லியது.