கள்ளி (நுகும்பு)

92. பாலை
உள்ளார்கொல்லோ-தோழி!-துணையொடு
வேனில் ஓதி பாடு நடை வழலை
வரி மரல் நுகும்பின் வாடி, அவண
வறன் பொருந்து குன்றத்து உச்சி கவாஅன்
5
வேட்டச் சீறூர் அகன் கண் கேணிப்
பய நிரைக்கு எடுத்த மணி நீர்ப் பத்தர்,
புன் தலை மடப் பிடி கன்றோடு ஆர,
வில் கடிந்து ஊட்டின பெயரும்
கொல் களிற்று ஒருத்தல் சுரன் இறந்தோரே!

பிரிவிடை வேறுபட்ட கிழத்திக்குத் தோழி சொல்லியது.

169. முல்லை
'முன்னியது முடித்தனம் ஆயின், நன்னுதல்!
வருவம்' என்னும் பருவரல் தீர,
படும்கொல், வாழி, நெடுஞ் சுவர்ப் பல்லி-
பரற் தலை போகிய சிரற் தலைக் கள்ளி
5
மீமிசைக் கலித்த வீ நறு முல்லை
ஆடு தலைத் துருவின் தோடு தலைப்பெயர்க்கும்
வன் கை இடையன் எல்லிப் பரீஇ,
வெண் போழ் தைஇய அலங்கல்அம் தொடலை
மறுகுடன் கமழும் மாலை,
10
சிறுகுடிப் பாக்கத்து எம் பெரு நகரானே.

வினை முற்றி மறுத்தராநின்றான் நெஞ்சிற்கு உரைத்தது.

314. பாலை
'முதிர்ந்தோர் இளமை அழிந்தும் எய்தார்;
வாழ் நாள் வகை அளவு அறிஞரும் இல்லை;
மாரிப் பித்திகத்து ஈர் இதழ் அலரி
நறுங் காழ் ஆரமொடு மிடைந்த மார்பில்,
5
குறும் பொறிக் கொண்ட கொம்மை அம் புகர்ப்பின்
கருங் கண் வெம் முலை ஞெமுங்கப் புல்லிக்
கழிவதாக, கங்குல்' என்று
தாம் மொழி வன்மையின் பொய்த்தனர், வாழிய-
நொடி விடுவன்ன காய் விடு கள்ளி
10
அலங்கல்அம் பாவை ஏறி, புலம்பு கொள்
புன் புறா வீழ் பெடைப் பயிரும்
என்றூழ் நீளிடைச் சென்றிசினோரே!

பிரிவிடை மெலிந்த தலைமகள் சொல்லியது.- முப்பேர் நாகனார்

384. பாலை
பைம் புறப் புறவின் செங் காற் சேவல்
களரி ஓங்கிய கவை முடக் கள்ளி
முளரி அம் குடம்பை ஈன்று, இளைப்பட்ட
உயவு நடைப் பேடை உணீஇய, மன்னர்
5
முனை கவர் முது பாழ் உகு நெற் பெறூஉம்
அரண் இல் சேய் நாட்டு அதர் இடை, மலர்ந்த
நல் நாள் வேங்கைப் பொன் மருள் புதுப் பூப்
பரந்தன நடக்க, யாம் கண்டனம் மாதோ:
காண் இனி வாழி-என் நெஞ்சே!-நாண் விட்டு
10
அருந் துயர் உழந்த காலை
மருந்து எனப்படூஉம் மடவோளையே.

உடன் போகாநின்றான் மலிந்து தன் நெஞ்சிற்குச் சொல்லியது.-பாலை பாடிய பெருங்கடுங்கோ