அதிரல்

52. பாலை
மாக் கொடி அதிரற் பூவொடு பாதிரித்
தூத் தகட்டு எதிர் மலர் வேய்ந்த கூந்தல்
மணம் கமழ் நாற்றம் மரீஇ, யாம் இவள்
சுணங்கு அணி ஆகம் அடைய முயங்கி,
5
வீங்கு உவர்க் கவவின் நீங்கல்செல்லேம்;
நீயே, ஆள்வினை சிறப்ப எண்ணி, நாளும்
பிரிந்து உறை வாழ்க்கை புரிந்து அமையலையே;
அன்பு இலை; வாழி, என் நெஞ்சே! வெம் போர்
மழவர் பெரு மகன் மா வள் ஓரி
10
கை வளம் இயைவது ஆயினும்,
ஐது ஏகு அம்ம, இயைந்து செய் பொருளே.

தலைமகன் செலவு அழுங்கியது.-பாலத்தனார்

124. நெய்தல்
ஒன்று இல் காலை அன்றில் போலப்
புலம்பு கொண்டு உறையும் புன்கண் வாழ்க்கை
யானும் ஆற்றேன்; அதுதானும் வந்தன்று-
நீங்கல்; வாழியர்; ஐய!-ஈங்கை
5
முகை வீ அதிரல் மோட்டு மணல் எக்கர்,
நவ்வி நோன் குளம்பு அழுந்தென, வெள்ளி
உருக்குறு கொள்கலம் கடுப்ப, விருப்புறத்
தெண் நீர்க் குமிழி இழிதரும்
தண்ணீர் ததைஇ நின்ற பொழுதே.

பிரிவு உணர்த்தப்பட்ட தோழி தலைவற்கு உரைத்தது.-மோசி கண்ணத்தனார்

337. பாலை
உலகம் படைத்த காலை-தலைவ!-
மறந்தனர்கொல்லோ சிறந்திசினோரே-
முதிரா வேனில் எதிரிய அதிரல்,
பராரைப் பாதிரிக் குறு மயிர் மா மலர்,
5
நறு மோரோடமொடு, உடன் எறிந்து அடைச்சிய
செப்பு இடந்தன்ன நாற்றம் தொக்கு உடன்,
அணி நிறம் கொண்ட மணி மருள் ஐம் பால்
தாழ் நறுங் கதுப்பில் பையென முள்கும்
அரும் பெறல் பெரும் பயம் கொள்ளாது,
10
பிரிந்து உறை மரபின பொருள் படைத்தோரே.

தோழி, தலைமகன் பொருள்வயிற் பிரிதலுற்றானது குறிப்பறிந்து விலக்கியது; தோழி உலகியல் கூறிப் பிரிவு உணர்த்தியதூஉம் ஆம்.-பாலை பாடிய பெருங்கடுங்கோ