கூடலூர் கிழார்

166. நெய்தல்
தண் கடற் படு திரை பெயர்த்தலின், வெண் பறை
நாரை நிரை பெயர்ந்து அயிரை ஆரும்,
ஊரோ நன்றுமன், மரந்தை;
ஒரு தனி வைகின், புலம்பு ஆகின்றே.

உரை

காப்பு மிகுதிக்கண் தோழி தலைமகட்கு உரைத்தது. - கூடலூர் கிழார்

167. முல்லை
முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்,
கழுவுறு கலிங்கம், கழாஅது, உடீஇ,
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம் புளிப் பாகர்
'இனிது' எனக் கணவன் உண்டலின்,
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே.

உரை

கடிநகர் சென்ற செவிலித்தாய், நற்றாய்க்கு உரைத்தது. - கூடலூர் கிழார்

214. குறிஞ்சி
மரம் கொல் கானவன் புனம் துளர்ந்து வித்திய
பிறங்கு குரல் இறடி காக்கும், புறம் தாழ்
அம் சில் ஓதி, அசை இயல், கொடிச்சி
திருந்து இழை அல்குற்குப் பெருந் தழை உதவிச்
செயலை முழுமுதல் ஒழிய, அயலது
அரலை மாலை சூட்டி,
ஏமுற்றன்று-இவ் அழுங்கல் ஊரே.

உரை

தோழி, வெறியாட்டு எடுத்துக் கொண்ட இடத்து, அறத்தொடு நின்றது. - கூடலூர் கிழார்