பேரி சாத்தனார்

278. பாலை
உறு வளி உளரிய அம் தளிர் மாஅத்து
முறி கண்டன்ன மெல்லென் சீறடிச்
சிறு பசும் பாவையும், எம்மும், உள்ளார்
கொடியர் வாழி-தோழி!-கடுவன்
ஊழுறு தீம் கனி உதிர்ப்ப, கீழ் இருந்து,
ஏர்ப்பனஏர்ப்பன உண்ணும்
பார்ப்புடை மந்திய மலை இறந்தோரே.

உரை

பிரிவிடை வற்புறுத்தும் தோழிக்குத் தலைமகள் உரைத்தது. - பேரிசாத்தன்

314. முல்லை
சேயுயர் விசும்பின் நீர் உறு கமஞ்சூல்
தண்குரல் எழிலி ஒண் சுடர் இமைப்ப,
பெயல் தாழ்பு இருளிய புலம்பு கொள் மாலையும்,
வாரார் வாழி!-தோழி!-வரூஉம்
இன் உறல் இள முலை ஞெமுங்க-
இன்னா வைப்பின் சுரன் இறந்தோரே.

உரை

பிரிவிடை வேறுபட்ட கிழத்தி, வற்புறுத்துந் தோழிக்குப் பருவங் காட்டி, அழிந்து கூறியது. - பேரிசாத்தன்

366. குறிஞ்சி
பால் வரைந்து அமைத்தல் அல்லது, அவர்வயின்
சால்பு அளந்து அறிதற்கு யாஅம் யாரோ?-
வேறு யான் கூறவும் அமையாள், அதன் தலைப்
பைங் கண் மாச் சுனைப் பல் பிணி அவிழ்ந்த
வள் இதழ் நீலம் நோக்கி, உள் அகைபு,
ஒழுகு கண்ணள் ஆகி,
பழுது அன்று அம்ம, இவ் ஆயிழை துணிவே.

உரை

காவல் மிகுதிக்கண் வேறுபட்ட தலைமகளது வேறுபாடு கண்டு, இவ் வேறுபாடு எற்றினான் ஆயது?' என்று செவிலி வினாவ, தோழி கூறியது. - பேரிசாத்தன்