- 23 -

அரசன் தேவிபூசைக்குச் செல்லுதல்

17.  என்று கூறலு மேதமி தென்றிலன்1
  சென்று நல்லறத் திற்றெளி வின்மையால்
  நன்றி தென்றுதன் நன்னக ரப்புறத்
  தென்றி சைக்கட் சிறப்பொடு சென்றனன்.

(இ-ள்,) (தேவியின் விழாவிற்கு எழுக), என்று கூறலும் - என்று (ஏனைமாந்தர்) கூறியதும், (அரசன்), நல் அறத்திற்சென்று தெளிவு இன்மையால்-திருவறத்தின் முறைப்படி சென்று நற்காட்சி பெற்றிலனாதலின், இது ஏதம் என்றிலன்-இச்செய்கை குற்றமாகுமென்று கூறாதவனாகி, இது----நன்று என்று-நலமென்றுகருதி, தன்--- நல்நகரப்புறம்-இராசமாபுரத்தின் புறத்தே, தென் திசைக்கண் - தெற்குத் திக்கிலுள்ள அத் தேவிகோயிலுக்கு, சிறப்போடு சென்றனன்-(தனக்குரிய) சிறப்புடன் சென்றான்.(எ-று,)

திருவறத்தை மேற்கொண்டு தெளிதலாகிய நற்காட்சி யின்மையால், தேவிக்குச் சிறப்புற செய்யாவிடில் தீங்கு விளையும் என்ற ஏனைமாந்தர்கூற்றிற்கு மகிழ்ந்து அரசன் உடன்பட்டுச்செல்வானாயின னென்க..

அரசன், தேவிபூசையை ‘நன்றிது‘ என்றது, நற்காட்சியைப் பெறாது தடுக்குங் குற்றங்களுள் ஒன்றாகிய தேவமூடமாகும்.  தெளிவு-சம்யக்தரிசனம்; நற்காட்சி*.  குடைகொடி முதலிய அரசச்சின்னமுடன் சென்றான் என்ப-தற்குச் ‘சிறப்பொடு‘ சென்றனன் என்றார்.  இனி, ‘சிறப்பொடு‘ என்பதற்குச், சிறப்பிற்கு உரிய பொருளகளோடு எனினுமாம். இப்பொருளில், ‘சிறப்பு‘ ஆகுபெயர்

 

1

தென்றலன்.
* யசோ. 61-ல் காண்க