யான் மக்களிரட்டையரைப் பலியீந்தால்
அதன்பின் இவ்விலங்கினப்பலியை மற்றையோர் புரிவார்களாக என்று அரசன் கருதினான்
என்க.
‘ஈனமில’ என்பது மக்கட்கு அடைமொழி ஆக்குதலே
சிறந்தது. தாம். சாரியை. ‘ஆற்ற’, அகரவீற்றுவியங்கோள். ‘ஆற்றென’ அகரம் தொகுத்தல். ‘ஆற்றுதல்
ஆற்ற‘ என்பதை, ‘வாழலும் வாழேன்,’ ‘உண்ணலும் உண்ணேன’ என்பது போலக்கொள்க.
(17)
22. |
வாட லொன்றிலன் மக்க ளிரட்டையை |
|
யீடி லாத வியல்பினி லில்வழி |
|
யேட சண்ட கருமதந் தீகென |
|
நாட வோடின னன்னகர் தன்னுளே. |
(இ-ள்.)
வாடல் ஒன்றிலன் - கொலைக் குற்றத்திற்குச் சிறிதும் வருந்தாத மாரிதத்தன், ஈடு
இலாத இயல்பினில்-(யான் இடும் இப்பலிக்கு ஏனையோர் இடும் பலிகள்) இணையற்றவை என்னும்
தன்மையில், மக்கள் இரட்டையை-மக்களுள் ஆண் பெண் இருவரை, ஏட சண்டகரும-அடே சண்டகருமனே,
இவ்வழி- இவ்விடத்து, தந்தீக-கொணர்க, என-என்று கூற, நல்நகர் தன்னுள் - சிறந்த
இராசமாபுரத்தினுள், நாட- (அரசன் கட்டளைப்படி) தேடுதற்கு, ஓடினன் - (அந்தத்தளவரனான
சண்டகருமன்) விரைந்து சென்றான்.(எ-று.)
அரசன் இரட்டையரைக் கொணர்க
என்றான், சண்ட கருமன் நாட ஒடினான் என்க.
உயிர்களுக்கு அரணாகின்ற (காவலாகின்ற)
வேந்தன், வேலியே பயிரை மேய்தல் போலத் தானே தன் குடிமக்களைக் கொல்லக் கருதுதல் இரங்குந் தன்மைத்து ஆதலின், ‘வாடலொன்றிலன்’ என்றார் ‘ஏட, சண்டகரும‘என்பன,
அண்மை விளிகள். தந்தீக, தருக எனும் பொருளுள்ள வினைத் திரிசொல்.(18)
|