- 98 -
  ‘ஆதியாயுலகியல்பை யளித்தாய் நீயே
      அருந்தவனா யறம்பகர்ந்த வறிவ னீயே
  காதியா யிருவினையுங் கடிந்தாய் நீயே
      கணமீறா  ரடியேத்துங் கடவு ணீயே
  போதியாய் பொருளளவு மானாய்நீயே
      பொறிவாயி லைந்தவித்த புனித னீயே
  சேதியாய் நிலவுகுணச்  செல்வனீயே
      ஸ்ரீவர்த்தமான னெனுந் தீர்த்த னீயே‘

(ஜிவசம். 29)

எனவும்,

  ‘ஆதியந்தளப் பரிய வருகந்த பகவர்த மறஞ்சால்
     சேதியம் புக்கவர்தந் திருந்தடிகளைப் பெருந் துதிசேர
  போதியிற் பணிந் திருந்தாள்‘

(நீல. 162.)

எனவும்,

  ‘அருந்தவந் தானஞ் சீல மறிவனற் சிறப்பு நான்குந்
     திருந்திய குணத்தினார்க்குச் சேதிக்கு வீதியாகும்‘
 
(மேரு. 729.)

எனவும் கூறியிருத்தலாலும், ஈற்றுச்செய்யுளின்  உரையில் ‘சேதிக்கு-மோக்ஷத்திற்கு‘ என்று பொருள்  எழுதியிருப்பதனாலும் அறிக.

சிந்தை-தியானம்; யோகம் எனவும் வழங்கும்.  அது விரிவகையால் பலவிதமாயினும்  தொகைவகையால்மூன்று வகைப்படும். அவை-அசுபோபயோகம்,  சுபோபயோகம், சத்தோபயோகம் என்பன.  அவற்றுள்,

1. அசுபோபயோகம்; - தீயவாஞ்சை, கோபம் முதலிய எண்ணங்களுடையதும், பிறவித்துன்பத்திற்குக் காரணமாகியதுமாகும்.  இது, ஆர்த்த தியானம்,  ரௌத்ரதியானம் என்ற இரண்டும் உடையது.