- 103 -
மயக்கத்தினின்றும் தெளிந்து அறம் பூண்டு உயிர்களைக் காத்த நீடுவாழ்க என்று இளைஞர்  பல்லாண்டுகூறினர் என்க.                  

அறிவை  மயக்கும் மோஹநீயகர்மத்தின் உதயத்தால் கட்குடித்தவனைப் போன்று மயங்கிக் கொடுந்தொழில் புரிவதற்கு உடன்பட்டான் என்பதனை உட்கொண்டு,  ‘மறவியின்மயங்கி வையத்துயிர்களை வருத்தஞ்செய்யாது';  வாழ்கஎன்றார்.  மறவி-கள்; மறதியை  உண்டுபண்ணுவதுமாம். ‘மறவிகள் மறதியீனம்';  என்பது சூடாமணி  நிகண்டு.  11.மோஹநீயகர்மம்  கட்குடித்தவனைப்போல மயங்கச் செய்யுமென்பதனை, ‘மத்தத்தின் மயக்கும் மோகம்';  (மேரு.614)என்ற வாமனமுனிவர்கூற்றா லுணரலாகும்.  மயக்கம், நன்மை தீமை யறியாது  மயங்குதல்.  ஓரறிவுமுதல் ஐயறிவுவரையில்  தொகுத்து, ‘வையத்துயிர்களை‘  என்றார் ‘கொலையிற்  கொடியாரை வேந்தொறுத்தல்  பைங்கூழ், களைகட்டதனோடு நேர்‘ (குறள்.) என்பது முதலாக  வுள்ள நீதிவழுவாது நிகழவேண்டுமென்பதற்கு,  ‘அறவியன்மனத்தையாகி‘  நிகழ்க என்றார்.  ‘அறவியமனத்தராகியாருயிர்க்  கருளைச் செய்யில்‘  என்ற (2877) சீவகசிந்தாமணியின் முதலடி ஈண்டு ஒத்திருத்தல் காண்க.  வினையால் குறித்த எல்லைநாள்வரை  உடலின்கண்  உயிர்  இருந்துபிரிவதனால்,  ‘சிறையன பிறவி‘ என்றார்.  ‘பிறவியென்னும் இவ் விருஞ்சிறை';  (அயோத்.  மந்திர-21.) என்றார்  கம்பநாடரும். திருவறம்,  நற்காட்சியை அடிப்படையாகக் கொண்ட அறம். நற்காட்சியுடையவனாயின்  இத் தகையதீய தெய்வ வழிபாட்டிற்கு இணங்கான் ஆகலின், ‘திருவறம் மருவு'; என்றான். 

‘சிதைந்தின்னா  தன செய்தார்க்கு  மினியவே செய்த சிந்தைக், கதங்கடிந் தொழுகல்  நல்லோர்கருணையைக் கொடுத்தல்‘ என்ற (மேரு.346.) செய்யுளிலும்

 ‘
இன்னா செய்தார்க்கு மினியவே செய்யாக்கா
  லென்ன பயத்ததோ சால்பு‘

என்ற தேவர் குறளிலும் உள்ள நீதியின்படி, ஈண்டு இளைஞரின் உள்ளக்கிடக்கையிருப்பது உன்னற் பாலது.                      (55)