இரண்டாவது சருக்கம்
உஞ்சயினியின் சிறப்பு
73 |
வளவயல் வாரியின் மலிந்த பல்பதி |
|
அளவறு சனபத மவந்தி யாமதின் |
|
விளைபய னமரரும் விரும்பு நீர்மைய |
|
துளதொரு நகரதுஞ் சயினி யென்பவே. |
(இ-ள்.)
வாரியின் வளம்-நீ்ர் வளத்தால், வயல் வளம்மலிந்த-வயல்வளம் முதலியன நிறைந்த,
பல் பதி-பல நகரங்களை யுடைய, சனபதம் - தேசமானது, அவந்தியாம்-அவந்தி (தேசம்)
என்பதாம், அதன் அளவறு விளை பயன்-அந்நாட்டினுள் அளவின்றித் தோன்றும் போகப் பொருள்களை
யுடையதும், அமரரும் விரும்பும் நீர்மை யது-தேவரும் விரும்பும் தன்மை யுடையது மாகிய,
ஒருநகர் உளது- தலைநகர் ஒன்று உண்டு, அது உஞ்சயினி என்ப - அதனை உஞ்சயினி என்று
(அறிஞர்) கூறுவர். (எ-று.)
அவந்தி நாட்டின்கண் உஞ்சயினி யென்னும் நகரம்
சிறந்து விளங்கிற் றென்க.
வளம், என்பது இரண்டிடத்தும் கூட்டப்பட்டது.
வாரி-நீர்; வடசொல், வாரிவளம'; என்றார்
தேவரும். இனி, வாரி-வருவாய் எனினுமமையும். சனபதம்-தேசம். வடசொல். இதனை ‘நீவ்ரஜ்
ஜநபதோ தேச விஷயௌது உபவர்த்தனம'; என்பதறிக
(அமரம்) ஜநபதம்-ஜநங்களுடைய இடம்; ஜநங்கள் நடந்துக் கொண்டிருப்பது என்பது பொருள்.
‘அமரரும் விரும்பும் நீர்மையது‘ எனவே அமராவதியைக் காட்டிலும் சிறந்த தென்பது அறியப்படும்.
அமரரும் என்பதில் உம்மை உயர்வு சிறப்பு. கூ, அசை. இனி, அமரரும் வி்ரும்பும் விளைபயன்
எனினுமாம். ‘என்ப'; என்பதனை
அசையாக்கிக் கூறினு மமையும்.
'அசோகன் சிறப்பு
74. |
கந்தடு களிமத யானை மன்னவன் |
|
இந்திர னெனுந்திற லசோக னென்றுளன் |
|
சந்திர மதியெனு மடந்தை தன்னுடன் |
|
அந்தமி லுவகையி னமர்ந்து வைகுநாள் |
(இ-ள்.)
மதக்களி - மதக்களிப்பினால், கந்து அடுயானை - கட்டுத் தறியையும் முறிக்கும் (ஆற்றலுடைய)
யானைகளை யுடைய, மன்னவன்-வேந்தன், இந்திரன் எனுந்திறல்-(எல்லா வல்லமைகளிலும்)
தேவேந்திரனே என்று சொல்லத்தக்க வல்லமை படைத்த, அசோகன் என்று உளன் - அசோகன்
என்று ஒருவன் இருந்தான் (அவன்), சந்திரமதி எனும் மடந்தை தன்னுடன் -(இந்திராணியோடொத்த)
சந்திரமதி யென்னும் பெண்ணரசியோடு, அந்தம் இல் உவகையில்-முடிவில்லாத இன்ப (சாகர)த்துள்,
அமர்ந்து வைகும் நாள்-விரும்பி வாழும் நாளில்; (எ-று.)
அந்நாட்டிற்கு வேந்தனும்
இந்திரனை நிகர்த்த வனுமான அசோகன் கோப்பெருந் தேவியாகிய சந்திரமதியுடன் இன்புற்றுவரும்
நாளில் என்பதாம்
|